"மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ? விளக்கி வைப்பாயோ?"
ஈராக் போர் துவங்குவதற்கு முன்னால், அமெரிக்காவில் 70 சதவிகித மக்கள், போரை ஆதரித்தார்கள்; இன்று 70 சதவிகித மக்கள் அதை எதிர்க்கிறார்கள். முடிவில்லாத உள்நாட்டுப் போர், தெளிவில்லாத அரசியல், தொடரும் மரணங்கள் என இன்றைய எதிர்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஈராக் போருக்கு முன்னால் 70 சதவிகித மக்கள் ஆதரித்ததன் காரணம் என்ன என்பதும், அந்த ஆதரவு எத்தகைய உத்திகளால் திரட்டப்பட்டது என்பதும் இப்பொழுது மெள்ள மெள்ள விளங்கத் தொடங்கியுள்ளது.
ஆரியானா ஹுஃப்ஃபிங்டன் (Arianna Huffington) தான் நடத்தும் HuffingtonPost-இல் ஒரு
அருமையான கட்டுரை எழுதியுள்ளார் (நியூயார்க் டைம்ஸின் மௌரீன் டௌட் கட்டணங்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதால், இவர் தான் எனது தற்போதைய அரசியல் தேவதை). இந்தக் கட்டுரையில் புஷ் அரசாங்கம் கைகொண்ட 'போர்த்தொழில் விந்தைகள்' எத்தகையன என்பதை ஒரு காட்சி - ஒரே ஒரு எளிமையான காட்சி - மூலமாக விளக்குகிறார்.
செப்டம்பர் 8, 2002 - ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியது. சதாம் ஹுசேன் ஆப்பிரிக்காவிலிருந்து அலுமினியம் குழாய்கள் வாங்கி அணு ஆயுதங்கள் தயாரிப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றிய செய்திக் கட்டுரை.
இந்த ஊரில் (அமெரிக்காவில்) ஞாயிறு காலைகள் தொலைக்காட்சிகளில் ஒரு பெரும் அரசியல் களமாக இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பத்திரிக்கையாளர்கள் எனப் பலரும் தற்போதைய அரசியல் நிலவரங்களை அலசுவார்கள். அரசியல் நோக்கர்களால் பெரிதும் கவனிக்கப்படும் நிகழ்ச்சிகள்.
அந்த ஞாயிற்றுக்கிழமை, எல்லா தொலைக்காட்சி அரசியல் பேட்டிகளிலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் - சேனி, ரம்ஸ்பீல்டு, காண்டி ரைஸ், போவல் - சென்று இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி 'நியூயார்க் டைம்ஸே' சொல்லி விட்டது, சதாம் ஹுசேன் எத்தைகைய ஆபத்து பாருங்கள், என்ற அளவில் பேட்டிகள் கொடுத்தனர். காண்டி ரைஸ், அமெரிக்காவில் அணுஆயுதம் வெடிக்கலாம் என்று பயமுறுத்தினார். குறிப்பாக சேனி சதாம் ஹுசேன் தீவிரமாகவும், விடாமலும் அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய முனைவதாக அந்தக் கட்டுரையை ஆதாரம் காட்டிப் பேசினார்.
இதெல்லாம் நடந்தது, செப்டம்பர் 8, 2002 - செப்டம்பர் 11, 2002 விற்கு மூன்று நாட்கள் முன்பு - மக்களிடையே தீவிரவாதம் குறித்த பயங்களும், இன்னுமொரு தாக்குதல் வருமோ என்பது பற்றிய கவலைகளும் மிதமிஞ்சி இருந்த நேரம்.
இதிலெல்லாம் பிரச்னை என்னவென்றால், அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஜூடித் மில்லர் (
இவரைப் பற்றிய எனது முந்திய கட்டுரை); இவருக்குச் செய்தியைக் கொடுத்தது சேனி மற்றும் அவரது வலது கை ஸ்கூட்டர் லிப்பி. பிற்காலத்தில் அந்தக் கட்டுரையில் வந்த 'செய்தி' எல்லாம் வெறும் பொய்கள் என்று நிரூபணமானது.
ஆக, தானே உற்பத்தி செய்த ஒரு செய்தியை ஒன்றுமே தெரியாதது போல, தானே மேற்கோள் காட்டுவது! ஒரு பக்கம் ஒரு பொய்யைச் செய்தியாக்கி விட்டு, மறுபக்கம் அந்தச் செய்திப் பிரசுரத்தை ஆதாரமாகக் கொள்வது! எப்படி ஐடியா? இப்படித்தான் உருவாக்கப்பட்டது 70 சதவிகித மக்கள் ஆதரவு!
இந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து புஷ்/சேனி கூட்டணியின் யோக்கியதை பற்றிய நமது சந்தேகங்கள் ஊர்ஜிதமாகின்றன, அவ்வளவுதான். ஆனால் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை இத்தனை சுலபமாக, இத்தனை பெரிய விஷயத்தில் ஏமாந்து, ஒரு பெரும் மோசடிக்குத் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாய் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தத் தேதி - செப்டம்பர், 8, 2002 - சரித்திரத்தில் இடம் பெறாமல் போகலாம். ஆனால், ஒரு போர், ஒரு பத்திரிக்கையின் நம்பகத்தன்மை - இரண்டுக்கும் அன்று தான் சங்கு ஊதப்பட்டது.