<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, September 27, 2005

சோடாப்பழம்

நகைச்சுவை எழுத்தாளர் Dave Barry சொல்வது போல், "I am not making this up!"

நேற்று வீட்டில் வந்து விழுந்த Wired சஞ்சிகையில் கல்கண்டு ஸ்டைல் பெட்டிச் செய்தியாகப் பார்த்தது, இன்று காலை வலைமேய்ந்து பார்த்ததில் ஊர்ஜிதமாயிற்று.

சாதாப்பழங்களை சோடாப்பழங்களாக்கும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



ஆம், ஒரு வேலை வெட்டியில்லாத விஞ்ஞானி, ஆப்பிள், பேரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களை கார்பன் டைஆக்சைடு உள்ள பெட்டியில் வைத்தால், அப்பழங்கள் அந்த வாயுவை உறிஞ்சி தனது நீருக்குள் தக்க வைத்துக் கொள்ளும் என்று கண்டு கொண்டிருக்கிறார். இதனால், பழங்களை உண்ணும் போது சோடா குடிப்பது போன்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ளும். அப்புறமென்ன, அமெரிக்க ஃபார்முலாவான, invent, patent, profit முறையை பின்பற்றி Fizzy Fruit என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்த மாதம் அமெரிக்கக் கடைகளில் சோடாப்பழங்கள் தயார்!

ஒரே ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும் - பழத்தை ரொம்பவும் குலுக்காதீர்கள், குலுக்கி விட்டுக் கடித்தால், வாய்க்குள்ளே வெடி வெடிக்கலாம்!

Monday, September 26, 2005

அமெரிக்காவில் ஈராக்

வடிந்து கொண்டிருக்கும் வெள்ளங்கள் விட்டுச் சென்றிருக்கும் செலவுகள் அமெரிக்காவில் மீண்டும் ஈராக் குறித்த விவாதங்களை நடுமேடைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. ஈராக் மண்ணை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பது போல், அமெரிக்க மனங்களை ஈராக் கவலைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. தள்ளாடிக் கொண்டிருந்த போர் வண்டி, காத்ரீனாவின் காற்றில் குடை சாய்ந்திருக்கிறது.

இந்த காலத்தின் கட்டாயக் கதாநாயகியாக உருவாகி இருப்பவர் சிண்டி ஷீஹன் என்னும் பெண்மணி. ஈன்ற மகன் போர்க்களம் சென்று வீர மரணம் எய்த, நீதி கேட்டு மன்னனின் அரண்மனை வாசலில் வந்து முறையிட்டுக் கொண்டிருக்கிறார். புறநானூறு meets சிலப்பதிகாரம். இவர் தலைமையில் வாஷிங்டனில் சென்ற வாரயிறுதியில் மிகப் பெரிய போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இதற்கு ஆதரவாக ஒரு லட்சம் பேருக்கு மேல் திரண்டதும், இவர்களை எதிர்த்து (போரை ஆதரித்து) சுமார் இருநூறு பேர் வந்திருந்ததும் எளிதில் புறக்கணிக்கக் கூடிய செய்தியில்லை.



அமெரிக்க சட்டப்படி ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான சட்டபூர்வமான உரிமை இந்த நாட்டின் பாராளுமன்றமான காங்கிரஸிற்குத் தான் உண்டு. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு, ஈராக் விஷயத்தில் காங்கிரஸ் இந்த உரிமையை ஜார்ஜ் புஷ்ஷிற்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. இந்தத் தாரை வார்த்தலில் எதிர்கட்சியின் பங்கும் உண்டு. ஆதலால், இது நாள் வரையிலும் ஈராக் போரை எதிர்ப்பதில் ஜனநாயகக் கட்சியின் குரல் இந்த ஓட்டை நியாயப்படுத்த வேண்டிய தர்மசங்கடத்தில் அமுங்கிக் கிடக்கிறது. அரசியல் எதிர்ப்பை ஒரு பெட்டிக்குள் பூட்டி வைக்க புஷ்ஷிற்கு வசதியாக இருந்தது.

ஆனால், இப்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருப்பது மக்கள் குரல். இவர்களில் சிலர் 'Make love, not war' வகை. அறுபதுகளிலிருந்து மீளாதவர்கள். இவர்கள் பிடித்திருக்கும் அட்டைகளை வாங்கி உதறினால் வியட்நாம் காலத்து புழுதி விழும். மற்றவர்கள் ஈராக் போரை எதிர்ப்பவர்கள் - ஈராக் போர் முழுத் தவறு, ஆதலால், அமெரிக்கப் படைகளை இன்றே வாபஸ் வாங்கு என்பவர்கள். முதலாமவர்களை உதாசீனப்படுத்துவது எளிது; ஆனால், இரண்டாம் வகையினரின் வாயை மூடுவது அவ்வளவு சுலபமில்லை. பாமரத்தனாமான வாதங்களை முன்வைத்து மக்களை முட்டாளடித்துக் கொண்டிருக்கும் புஷ் அரசிடம், 'மீளக் கட்டப் படவேண்டியது லூஸியானாவா? ஈராக்கா?" என்ற பாமரத்தனமான கேள்விக்கு விடையில்லை.

இன்றைய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வியட்நாம் வீடு என்று பெயர் வைக்கலாம்.

Sunday, September 25, 2005

விஜயகாந்தும் கடவுளும்

"எனக்கும், மாநாடு வரப் போகிறதே, இன்னும் பெயர் முடிவாகவில்லையே என்று குழம்பித்தான் இருந்தேன். ஆனால், எல்லாம் வல்ல சிவபெருமான், மீனாட்சி அம்மன், எனது குல தெய்வம், திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரது ஆசியால் நல்ல பெயராக அமைந்துவிட்டது. அந்தப் பெயரை உங்களுக்கும் அறிவிக்கிறேன். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (மூன்று முறை இப்பெயரைக் கூறினார்). " - கட்சித் துவக்க மாநாட்டில் விஜயகாந்த்.

"In fact, he recently visited the hill temple at Tirumala and sought the blessings of Lord Venkateswara for his party by placing the party flag at the feet of the presiding deity there." - விஜயகாந்த் கட்சி பற்றி ஹிந்துவில் கட்டுரை

இவை தவறுகள். உங்கள் கடவுள், மத நம்பிக்கைகளை மனதோடு, வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். கட்சி மேடைக்கும், பொதுக் களத்திற்கும் கொண்டு வராதீர்கள். தனிப்பட்ட மத நம்பிக்கைகளையும், (நெற்றிச் சின்னம் போன்ற) பாதகமில்லாத பழக்கங்களையும் கருணாநிதியும் அவரது கட்சியினரும் அரசியல் மேடைகளிலிருந்து விமர்சிப்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு தனது சொந்த இறை நம்பிக்கைகள் ஒரு அரசியல் கட்சியை வழி நடத்திச் செல்வதாய் முன்வைப்பதும்.

அதைக் கண்டிப்பவர்கள் இதையும் கண்டிக்க வேண்டும். And vice versa.

இந்த ஒரு விஷயத்தில் (மட்டுமாவது) ஜெயலலிதா தேவலை என்று தோன்றுகிறது. ஏராளமான மத/ஆரூட/சடங்கு நம்பிக்கைகள் இருந்தாலும், அவற்றை அவர் பொது மேடைகளில் போற்றிப் பிரலாபித்ததில்லை என்று நினைக்கிறேன்.

Friday, September 23, 2005

வாரயிறுதி வானவில்



அமெரிக்காவின் சங்கரா கண் அறக்கட்டளை சார்பாக நடிகை சுஹாசினி தலைமையில் முன்னாள் நடிகை ஜெயஸ்ரீ இயக்கிய 'ரெயின்போ' என்ற பல்சுவை கலை நிகழ்ச்சி சான் ஹோசேயில் நாளை மாலை 4 மணிக்கு நடக்க இருக்கிறது.

அந்தப் பகுதியில் இருப்பவர்கள் கண்டிப்பாக செல்லுங்கள். பார்வை கோளாறு உள்ள ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகள் செய்வதை பிரமிக்க வைக்கும் முனைப்புடன் பல வருடங்களாக செய்து வரும் சங்கரா கண் மருத்துவமனைக்கு நிகழ்ச்சியின் லாபங்கள் சென்று சேரும் என்பது, சுஜாதாவின் கதையை சுஹாசினி படிக்கக் கேட்கும் போது உங்களுக்கு நினைவில் வராமல் போனாலும் பரவாயில்லை.

Thursday, September 22, 2005

நேரடி ஒளிபரப்பு!

நேற்றிரவு கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்ஜலஸிலிருந்து நியூயார்க் செல்லப் புறப்பட்ட Jetblue விமானத்தின் தரையிறக்கும் சக்கரம் சுளுக்கிக் கொண்டதால், மீண்டும் லாஸ் ஏஞ்ஜலசிற்கே திரும்பி வந்தது. கொஞ்ச நேரம் நகரத்தின் வான்வெளியை வட்டமடித்து விட்டு, பாதுகாப்பாய் தேவையில்லாத எரிபொருளை பசிபிக் மகாசமுத்திரத்தில் கொட்டி விட்டு, பின்சக்கரங்களை முதல் பதித்து, முன் சக்கரத்தைக் கொஞ்சம் தீப்பொறி பறக்கப் பதித்து, பத்திரமாய் தரையிறங்கி, 145 பேரை 'நியூ யார்க் போகாவிட்டால் பரவாயில்லை' என்று வீடு போய் சேரச் செய்தது.



இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமில்லையென்றாலும், அபூர்வமில்லை. சில மாதங்களுக்கு முன்பு நண்பரொருவர் சென்ற டெல்டா விமானம், கான்ஸாஸ் மாநிலத்தின் அத்துவானக் காட்டில் நள்ளிரவிற்கு மேல் அபத்திரமாக அவசர இறக்கமாய் இறங்கியது 'மைலாப்பூர் டைம்ஸ்' போன்ற ஒரு லோக்கல் நாளிதழில் பெட்டிச் செய்தியாக மட்டும் வந்தது.

ஆனால், இந்த முறை, சாலை விபத்துக்களைப் படம் பிடிக்க கழுகுகள் போல் வட்டமடித்துக் கொண்டிருக்கும் ஹெலிகாப்டர்கள் நிரம்பிய லாஸ் ஏஞ்ஜலசிலின் வான் வெளியில் பட்டப் பகலில் இது நடந்தது. அதுவும் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் Prime Time தொலைக்காட்சி நேரத்தில். ஆகையால், சாத்தியங்கள் நிரம்பிய வர்ணனைகளோடு இந்தத் தரையிறக்கம் பல சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டது.

ஆயிரக்கணக்கானோர் இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சில பார்வையாளர்களுக்கு பதட்டம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. இவர்கள் யாரென்று ஊகிக்க முடிகிறதா? ஒரு க்ளூ: அமெரிக்க விமான சர்வீசுகளில், நேரடி தொலைக்காட்சி வசதி உள்ள ஒரே சர்வீஸ் எது தெரியுமா? Jetblue!

பின் குறிப்பு: விமானம் தரையிறங்கும் சில நிமிடங்கள் முன்பு விமான ஓட்டியின் உத்தரவின் பேரில், தொலைக்காட்சிகள் அணைக்கப்பட்டு விட்டதாக இந்த செய்தி சொல்கிறது.

Monday, September 19, 2005

நேரங்கொல்லித் தளங்கள்

புதுமையான, சுவாரசியமான வலைத்தளங்கள் மூன்று:

1. நியூயார்க் 'டயலாக்' : ஜூனியர் விகடன் டயலாக் பகுதி போல, நியூயார்க் நகரத்தில் ஒட்டுக் கேட்கப்பட்ட உரையாடல்களின் தொகுதி. நியூயார்க் நகரத்தில் வசிக்கும் பலர் அந்த நகரமே உலகம் போன்றதொரு பிரமையில் வாழ்பவர்கள். நியூயார்க் நகரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அந்த நகரமே வேறொரு உலகம் போன்றதொரு பிரமையில் வலம் வருபவர்கள். இந்த இருவரையும் கிண்டலடிக்கும் தளம். ஒரு உதாரணம்:

Chick #1: I called Tasty's for lunch and the girl on the phone asked me where I was from. I said Southern Africa. The girl said, "I have no idea where that is." How can you not know Southern Africa? I mean come on...

Chick #2: Where was she from?

Chick #1: I don't know, some Mexican country.

சில உரையாடல்களின் நகைச்சுவையைப் புரிந்து கொள்ள கொஞ்சம் நியூயார்க் ஞானம் வேண்டும். உதாரணம்:

Woman: It's a good thing we got here early. I don't want to miss the kickoff.

--Shea Stadium

Kick-off என்பது ஃபுட்பால் சமாச்சாரம், Shea stadium பேஸ்பால் மைதானம் என்பவைத் தெரியாவிட்டால், ராஜேந்திரகுமார் ஸ்டைலில், 'ங்ஏ' என்று விழிப்பீர்கள்.

http://www.overheardinnewyork.com/

2. கொஞ்சம் சீரியஸ் சமாச்சாரம். யாரிடமாவது சொல்லியே தீர வேண்டும் என்று உங்களை அரித்துக் கொண்டிருக்கும் சங்கடமான விஷயம் ஏதாவது இருந்தால், ஏதேனும் ஒரு 4x6 அட்டையை எடுத்து, படமாகவோ, எழுத்தாகவோ எழுதி, மேரிலாண்டின் ஜெர்மண்டவுன் முகவரி ஒன்றிற்கு அனுப்பினால், அது இந்த வலைத்தளத்தில் பிரசுரமாகும். உங்கள் பெயரோ வேறெந்த அடையாளமோ கண்டிப்பாகத் தேவையில்லை. இந்தத் தளத்தின் நிர்வாகி சொல்வது போல்:

"Each secret can be a regret, hope, funny experience, unseen kindness, fantasy, belief, fear, betrayal, erotic desire, feeling, confession, or childhood humiliation. Reveal anything - as long as it is true and you have never shared it with anyone before."

இதில் ஏற்கனவே பிரசுரமாகி இருக்கும் ரகசியங்கள் சில ஹாஸ்யமாகவும், சில புதுமையாகவும், பல வருத்தமாகவும் இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு உண்மைத்தனம் வெளிப்படையாக ஒளிந்து கொண்டிருக்கும்.

உதாரணம்:



http://www.postsecret.blogspot.com/

3. இது ஒரு சுவாரசியமான முயற்சி. நியூயார்க்கில் ஒரு இளைஞர் ஒரு கார்ட்டூன் உரையாடல் பெட்டியை (பார்க்க படம்) 50,000 பிரதிகள் எடுத்து, நகரெங்கிலும் போஸ்டர்களில் ஒட்டி விட்டார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகலாம். இந்த இளைஞர் திரும்பிச் சென்று அந்தப் போஸ்டர்களைப் படம் பிடித்து வலைத்தளத்தில் ஏற்றுகிறார்.



ஒரு சுவரொட்டியின் உறைந்த பிம்பங்களைப் பார்க்கையில் நமது மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு வடிகாலாகவும், சமூகத்தில் மக்களின் சிந்தனைகளின் ஒரு பதிவாகவும் செயல்படும் இந்த யோசனையின் சமூகவியல் கூறுகளைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் யோசிக்கலாம்.

உதாரண சுவரொட்டி ஒன்று:



சுட்டி

Wednesday, September 14, 2005

நியூயார்க் டைம்ஸ் - கட்டணப் படிப்பிடம்?

நியூயார்க் டைம்ஸின் வலைத்தளத்தில் இன்று ஒரு ஏமாற்றமளிக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி, தலையங்கமில்லாத கருத்துப் பத்திகள் (Op-ed columns), விளையாட்டு, வர்த்தகம், நியூயார்க் நகரச்செய்திகள் ஆகியவற்றை, வரும் திங்கள் முதல் வருடம் $50 சந்தா கொடுப்பவர்கள் மட்டுமே படிக்க இயலும். ஏமாற்றமளித்தாலும், சில மாதங்களாகவே, ஒரு கட்டுரையை ஒரு சமயத்தில் இவ்வளவு பேர் தான் வாசிக்கலாம் என்பது போன்ற கட்டுப்பாடுகளை இந்த வலைத்தளம் பரிசோதித்துக் கொண்டிருந்ததால், இந்த அறிவிப்பு பெரிய ஆச்சரியமளிக்கவில்லை.



வர்த்தகச் செய்திகளுக்கு இதர பல ஊடக வாயில்கள் உள்ளன; விளையாட்டுச் செய்திகள் டைம்ஸை விட New York Post மற்றும் New York Daily news-இல் இன்னும் கலகலப்பாக இருக்கும். நியூயார்க் நகரச் செய்திகள் பற்றியும் எனக்குக் கவலையில்லை. ஆனால், தாமஸ் ஃப்ரீட்மேனின் மிதவாதமான அரசியல் பத்திகள், நிக்கலஸ் க்ரிஸ்டாஃப் மற்றும் பால் க்ருக்மேனின் கருத்துக்கள், சல்மான் ருஷ்டி அவ்வப்போது எழுதும் கட்டுரைகள், இவை எல்லாவற்றையும் விட மௌரீன் டௌட், புஷ்ஷை விமரிசித்து எழுதும் அட்டகாசமான நக்கல் கட்டுரைகள் ஆகியவற்றின் இழப்பு வருத்தமளிக்கிறது. இவை சுவையாக இருந்தாலும் காசு கொடுத்துப் படிக்க வேண்டிய அளவு அத்தியாவசியமாக இல்லாததால் அவற்றை இனி படிக்க இயலாது.

மேலும், இது இந்த வலைத்தளத்தின் 'சீரமைப்பில்' ஒரு ஆரம்பமே என்ற தொனியில் இந்த அறிவிப்பு உள்ளது. அதாவது இதற்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து, மெள்ள மெள்ள முழுத்தளமும் ஒரு சந்தாத் தளமாக மாறலாம்.

இது அமெரிக்க உள்நாட்டு வாசிப்பை விட, சர்வதேச வாசிப்பை வெகுவாக பாதிக்கும். இது வெற்றி பெற்றால், வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளும் சந்தேகமில்லாமல் இம்முறையைப் பின்பற்றும்.

மாற்றுக் கருத்துக்களையும், ஆரோக்கியமான விவாதங்களையும் முன்வைக்கும் பத்திகள் சென்றடையும் வாசக வட்டம் சுருங்குவது ஆரோக்கியமான விஷயமில்லை.

குஜராத்தில் ஒரு தமிழ்த் திரைப்படம்

விசித்திரமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது; அமெரிக்காவில் 'Only in America' என்று சில செய்திகளைப் பிரகடனப் படுத்துவார்கள், அது போல் இதை 'Only in India' என்று சொல்லலாம்.

குஜாராத்தில் ஒரு பத்தொன்பது வயது பெண்ணும் ஒரு பத்தொன்பது வயது பையனும் காதலிக்கிறார்கள். பெண் வீட்டில் இதற்கு எதிர்ப்பு வரவே, இருவரும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். ஆனால், குஜராத்தில் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி இருபத்தியோரு வயது ஆகியிருக்க வேண்டும். இவர்களுக்கு இரண்டு வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஓடிப்போய் ஒளிந்து வாழ்வதற்கும் மனம் (பணமும் என்று நினைக்கிறேன்) ஒப்பவில்லை. ஆதலால், ஒரு நூதனமான வழி கண்டு பிடித்திருக்கிறார்கள். இதன்படி பெண் பையனின் மூத்த சகோதரனைத் திருமணம் செய்து கொண்டு பையன் வீட்டில் இருப்பது, இரண்டு வருடங்கள் கழித்து அவனை விவாகரத்து செய்து விட்டு இளையவனைத் திருமணம் செய்து கொள்வது. மூத்தவனும் இதற்கு (ஒப்பந்தக் கையெழுத்தோடு) சம்மதிக்க, திருமணம் நடந்திருக்கிறது.

செய்தி இங்கே.

அடுத்த 'வித்தியாசமான காதல் கதைக்கு' கரு தேடிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைக்கதாசிரியர்களுக்கு இந்தச் செய்தி ஒரு லாட்டரிப் பரிசிற்கு சமானம். ஒரு தமிழ் வெற்றிப் படத்தின் சகல சாமுத்திரிகா லட்சணங்களுடனும் கூடிய ஒரு கதை, இந்தச் செய்தியை கொஞ்சம் நீட்டித்தால் உருவாகிறது. கீழ்க்காணும் One-liner-கள் தம்மைத் தாமே எழுதிக் கொண்டன.

1. பெண்ணும் இளையவனும் ஒரு மேகங்கள் மிதக்கும் மலைப்பிரதேசப் பள்ளியில் படிக்காமல் காதலிக்கிறார்கள்.
2. பாடிக் களைத்த பின்னர் ஓடிப் போகிறார்கள்.
3. ஒரு தடித்த கண்ணாடி தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா சட்டத்தை விளக்குகிறார்.
4. சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்ப வருகிறார்கள்.
5. பெண்ணால் வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை, பையன் வீட்டில் கல்யாணமாகாத பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள்.
6. அண்ணன் ஐடியா கொடுக்கிறான்.
7. திருமணம்

இடைவேளை.

8. குடும்பம் நடத்தத் துவங்கிய உடன் இளையவனின் குறைகள் பெண்ணிற்குத் தெரிய ஆரம்பிக்கின்றன.
9. அண்ணன் பொறுப்புடன் குடும்ப பாரத்தைச் சுமக்கிறான், தம்பி ஊதாரியாக ஊர் சுற்றுகிறான்.
10. பெண்ணிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனின் மீது ஈர்ப்பு வருகிறது (இந்த இடத்தில் 'பனி விழும் இரவு, நனைந்தது நிலவு' என்று ஒரு பாட்டு வைக்கிறோம்)
11. தம்பிக்கும் அண்ணனுக்கும் சண்டை வருகிறது, பெண் அண்ணனுக்குப் பரிந்து பேசுகிறாள்.
12. தம்பி அண்ணனை சந்தேகிக்கிறான், தம்பி கன்னத்தில் அண்ணன் ஒரு 'பளார்'.
13. காலண்டரில் நாட்கள் கிழிக்கப் படுகின்றன.
14. இரண்டு வருடங்கள் முடியும் நாளில் அண்ணனைக் காணவில்லை, அவன் கையெழுத்தோடு விவாகரத்து பத்திரம் வீட்டில் இருக்கிறது.
15. தம்பி பெண்ணை அவளது தாலியைக் கழற்றித் தூக்கிப் போடும்படி சொல்கிறான். பெண்ணின் முகம் குளோசப். கட்.
16. ரயில் நிலையத்தில், வேண்டாம், பஸ் நிலையத்தில் அண்ணன் உட்கார்ந்திருக்கிறான். பஸ் கிளம்பப் போகிறது. தூரத்திலிருந்து பெண் ஓடி வருகிறாள், இவனருகே வந்து நிற்கிறாள், விவாகரத்துப் பத்திரத்தை கிழித்துக் கையில் கொடுக்கிறாள். சுபம்.

அதாகப்பட்டது யாதெனில், இந்தக் கதைக்கு நான்தான் காப்பிரைட்.

Saturday, September 10, 2005

H1Bees பாடல்கள்

ஸ்ரீகாந்த் தேவராஜனின் H1Bees ஒலித்தகடின் வெளியீட்டு விழா சற்று நேரம் முன்பு இனிதே நிறைவடைந்தது. இந்திய விழாக்களின் சம்பிரதாயப்படி ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் துவங்கினாலும், (விழாத்தலைவர் பெயர் கங்குலி என்ற பொழுதே ஸ்ரீகாந்துக்குப் பொறி தட்டி இருக்க வேண்டும் - இவர் லேட்டாய் வந்து சொதப்புவார் என்று) சுவையாக சுருக்கமாக நிகழ்ச்சிகள் நகர்ந்தன. ஒலித்தகடிலிருந்து பாடல்கள் ஒலிக்கத் துவங்கியதும் களை கட்டியது. அப்பொழுதும், வீடு வந்து சேரும் பயணத்திலும் பாடல்களை இரண்டு முறை கேட்டாயிற்று. நானெல்லாம் கருத்து கூற இது மிக அதிகம் - படத்தைப் பார்ப்பதற்கு முன்பே விமர்சனம் எழுதத் துவங்கும் வர்க்கம் நான். ஆதலால் வித்தவுட் மச் அடூ...

Caveat Emptor: எனக்கு நுட்பமான இசை அறிவெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. கேட்டவனின் இசை அனுபவம் என்று குண்ட்ஸாக ஜல்லியடிக்கத்தான் தெரியும். ஆகையால் மூன்றே முக்கால், காலே அரைக்கால் என்று நட்சத்திரமெல்லாம் கிடையாது.

ஒலித்தகட்டில் மொத்தம் ஏழு பாடல்கள்: ஐந்து தமிழ், ஒரு ஆங்கிலம், ஒரு ஹிந்தி. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருமுறை வரும் தலைப்புப் பாடல் தவிர, இரண்டு மெலடி, இரண்டு காமெடி, ஒரு குத்து.

1. H1Bees - சுஜாதா ஸ்டைல் மொழிபெயர்ப்பில் சொல்ல வேண்டும் என்றால், இது இந்தத் தொகுப்பின் கையெழுத்துப் பாடல். இந்தியாவிலிருந்து சுடச்சுட  H1B விசாவுடன் அமெரிக்கா வந்து சேரும் இளைஞர்களின் அனுபவம் பற்றி யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்த பாடல் வரிகள். எளிமையான மெட்டுதான், இருந்தாலும் நடுவில் வரும் ஒரு கிடார் துண்டிசை பிரமாதமாக இருக்கிறது. பாடி வாசித்திருக்கும் கார்த்திக் கிளப்பியிருக்கிறார்.

2. தேடித் தேடி - சிருங்கார ரசம் ததும்பும் அழகான பாடல். அலிஷாவின் குரல் மிகவும் பொருத்தமாக, இனிமையாக இருக்கிறது. கேட்டுக்கொண்டிருக்கையில் எனது மாமனார், 'நடுவில் கொஞ்சம் தபலா சேர்த்திருக்கலாம்' என்று சொன்னார். உண்மைதான். தாள இசை கொஞ்சம் மேலோங்கி இருக்கிறது, இருப்பினும் மெட்டிற்காகவும் அலிஷாவின் குரலிற்காகவும் கேட்கத் தூண்டும் பாடல்.

3. டாலரில் இன்கம்: சங்க காலத் தமிழ்ப் பாடலான 'வரவு எட்டணா, செலவு பத்தணா' வை நேரப்பயணத்தின் மூலம் நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்து காமெடி கலக்கல் பண்ணியிருக்கிறார்கள். Remix பாடல் வகை என்றாலும், மூலத்தின் துள்ளலிசைக்குப் பாதகமில்லாமல் இசைத்திருக்கிறார்கள்.

4. திக்குத் தெரியாத காட்டில் - தொகுப்பின் விலையை இந்த ஒரு பாடலுக்கே கொடுக்கலாம். மகானுபாவனின் பாடல் வரிகளை மிக அழகாக (எனக்கு மிகவும் பிடித்த) ஹம்சானந்தியில் பொருத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த். பாடலின் ஆதார உணர்ச்சிகளான இழப்பு, திகைப்பு, குழப்பம், தேடுதல் ஆகியவை ஸ்வாதியின் குழைவான குரலில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.

5. கண்ணாலே அம்பு விட்டு - தொகுப்பின் ஆஸ்தான குத்துப் பாட்டு. தமிழ் திரையிசையில் சகல இலக்கணங்களுக்கும் உட்பட்டது. குத்துப்பாடல்கள் கேட்பதற்குத் தோதான நேரம் ஒன்று இருப்பதாக நண்பர்கள் சொல்லிக் கேள்வி. அந்த சமயத்தில் கேட்கத் தோதான பாடல். பாடியிருக்கும் உஷா கிருஷ்ணன் சரளமாக விளையாடி இருக்கிறார். அம்மணி, உங்களுக்கு அக்கரையிலிருந்து அழைப்பு வரப் போகிறது.

6. Engineering மார்க்கு - மற்றொரு காமெடிப் பாடல். புரியும் வரிகள் நகைச்சுவையாக இருக்கின்றன. மீதி வரிகள் ஓங்கி ஒலிக்கும் டிரம்ஸ்களின் பின்னால் ஒளிந்திருக்கின்றன.

7. H1Bees - முதல் பாடல் மீண்டும், ஹிந்தியில். எனக்குத் தெரிந்த ஹிந்தியை வைத்துக் கொண்டு மொழிபெயர்க்க முயன்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதால், ஆங்கிலப் பாடலின் தேசிப் பெயர்ப்பு என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒலித்தகட்டை அது வெளியாகி இருக்கும் உறையின் அழகிற்காக யாரும் வாங்கப் போவதில்லை. இருப்பினும் தகட்டினை நேர்த்தியுடன் போர்த்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில், பிழைப்பிற்காக புலம் பெயர்ந்த இந்தியனின் வாழ்வனுபவத்தை இசையனுபவமாக வார்த்தெடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்தும் குழுவினரும்.

அமெரிக்க வாழ் தமிழர்கள் அவசியம் கேட்க வேண்டும்.

இன்றைய வாஷிங்டன் போஸ்டில்...

சனிக்கிழமை காலை சாவகாசமாக வந்து விழுந்த வாஷிங்டன் போஸ்டை, அதை விட சாவகாசமாக பகுதி பகுதியாகப் பார்த்துக் கொண்டு வருகையில்...வர்த்தகப் பகுதியில் (business section) இதென்ன...பார்த்த முகம்...wait a minute, you're kidding me, WOW!



ஸ்ரீகாந்த் தேவராஜனின் H1Bees ஒலித்தகடு வெளியீட்டிற்கு முதல் பக்கக் கவரேஜ்!

கட்டுரை இங்கே

வார இறுதியை இதை விட ஆர்ப்பாட்டமாக எப்படித் துவக்க முடியும்? ஏக நாமே, சதா ப்ரீதி! :-)

வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த்!!

Friday, September 09, 2005

வாஷிங்டனில் மெல்லிசைக் கச்சேரி!

OPEN India என்ற தன்னார்வ தொண்டமைப்பு செப்டம்பர் 17-ஆம் தேதி சாண்டில்லி, வர்ஜீனியாவில் 'ரசிகா' என்ற இசைக்குழுவின் தமிழ்த் திரையிசைக் கச்சேரி ஒன்றினை நடத்துகிறது.

சென்ற வருடம் இதே குழு, இதே இடத்தில் நடத்திய நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்தவன் என்ற விதத்தில் இந்தக் குழுவின் இசைத் தேர்ச்சிக்கும், பாடல்களின் தேர்விற்கும், நிகழ்ச்சியின் ஒழுங்கமைவிற்கும் என்னால் உத்தரவாதம் தர முடியும். Open India-வின் வலைத்தளத்தில் சென்ற வருடத்தின் நிகழ்ச்சியிலிருந்து சில ஒலிப்பதிவுகள் கேட்கக் கிடைக்கின்றன. கேட்காதீர்கள். ஒரு அரங்கத்தில் நண்பர்களோடு அமர்ந்து கொண்டு, இசையை நேரடியாக, துல்லியமாகக் கேட்கும் அனுபவத்தையோ, அல்லது அரங்கத்தின் வெளியே ஒரு சமோசாவைக் கடித்துக் கொண்டு உள்ளிருந்து ஒலிக்கும் சற்று சன்னமான இசையை ரசிக்கும் சுகத்தையோ, இந்த MP3-க்கள் தர மாட்டா.

OPEN India தமிழகத்தில் பல பள்ளிகளுக்கும், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கும் சிறிய/பெரிய உதவிகள் செய்து வருகின்றது. இந்தக் கச்சேரியின் லாபம் அந்த நற்காரியங்களுக்குச் செல்லும் என்பது சொல்லத் தேவையில்லை.

ரசிகா, BITS-Pilani-யின் முன்னாள் மாணவர்கள் சிலர் லாபநோக்கின்றி நடத்தி வரும் இசைக்குழு.

வாஷிங்டன் வட்டாரத் தமிழ் மக்கள் (மணிக்கூண்டு, ஷங்கர் பாண்டி, உங்களைத்தான்!) வந்திருந்து ஆதரிக்க வேணுமாய் வேண்டுகிறேன்.

Thursday, September 08, 2005

அன்பே சிவம்

எனக்குத் தெரிந்து எனது நண்பர்கள் (ஏன், தமிழ் வலைப்பதிவாளர்கள் கூடத்தான்) அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அனைவருக்கும், 'அன்பே சிவம்' படம் அவர்களது பிடித்த படப்பட்டியலில் இடம் பெறுவதுதான்.

எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம் அது. அது வந்த புதிதில் நான் எழுதிய விமர்சனத்திலிருந்து சில பகுதிகள்:


ஒரு தொழிற்சங்க சகாவிற்கும், ஒரு புதுப் பொருளாதாரம் சார்ந்த இளைஞனுக்கும் இடையே மோதலோடு உருவாகும் பழக்கம் எப்படி ஒரு பிரயாணத்தின் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என்பது கதை. நடுவில், ஒன்றிரண்டு விபத்துக்கள், கொஞ்சம் வெள்ளம், ஒரு வீதி நாடகம், சில கோஷங்கள், கிரண், ஒரு சண்டை, ஒரு டூயட் என இத்யாதிகள்.

முதலில் படத்தின் நல்ல விஷயங்களை பார்த்து விடுவோம். கமல்ஹாசனின் வித்தியாசமான முகத்தோற்றம் வெறும் ஒப்பனை சாகசமல்ல என்பது அவரது கன்னத்து தசைச் சொடுக்கிலிருந்தே தெளிவு. இது போன்ற ஒரு தோற்ற மாற்றத்தை கமல் போன்று ஒரு முழுமையான கலைஞனால் தான் உருவாக்க முடியும். இது சாகசத்தால் வந்ததல்ல; சாதகத்தால் வந்தது. மற்றபடி படத்தில் ஒளிப்பதிவு மிக அருமை. ஆரம்ப ஒரிஸ்ஸா நகர்ப்புற வெள்ளக் காட்சிகள், அந்த அத்துவான ஆந்திர ரயில் நிலையம், கடலோரப் பேருந்துப் பிரயாணம் எனப் பல உதாரணங்கள். இசையும் படத்திற்கு ஆர்ப்பாட்டமற்ற இனிமையைச் சேர்க்கிறது.

படத்தின் கருவும், அது சொல்ல வரும் கருத்தும் அதன் தலைப்பிலிருந்தே வெளிச்சம். வேறு பல விஷயங்களை விட அன்பு மனம் கொண்டிருத்தல் முக்கியம் என்பதை சில முரண்பாடுகளை முன்னிறுத்திச் சொல்ல வருகிறார்கள். பொருள் மற்றும் வணிக வெற்றி முக்கியமல்ல என்பதும் மாதவன் - கமல் இருவரது பாத்திரப் படைப்புக்களை வைத்து சொல்லப்படுகின்றன.

அதாவது மாதவனை ஒரு தாராளமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தை சார்ந்தவராகவும், கமலை கம்யூனிச சித்தாந்ததை பிரதிபலிப்பவராகவும் காண்பித்து, அவர்களது உரையாடல்கள் மற்றும் செயல்கள் மூலம், படத்தின் கருத்தை நிலை நாட்ட முயல்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற முக்கியமான தேவை, இந்த உரையாடல்கள் நேர்மையாகவும், அறிவொழுக்கம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மாதவனின் பாத்திரப் படைப்பு மகா மொண்ணையாக இருக்கிறது. ஒரு முட்டாளாக மட்டுமில்லை, கொஞ்சம் அல்ப குரூரத்தனமும் சேர்க்கப்பட்ட ஒரு குறை முதிர்ச்சிப் பாத்திரம். ஒரு ஆடு கூட இவரிடம் வாதம் பண்ணி வென்று விடும் என்பது போல் இருக்கிறது. இவரை நன்றாக துவைத்தெடுத்து விட்டு, கம்யூனிசத்தை அன்பிற்கு அடையாளமாக நிலை நாட்டி விட்டதாகச் சொல்கிறார்கள். கடுப்பு தான் மிஞ்சுகிறது.

உதாரணமாக, படத்தின் மத்தியில் வரும் ஒரு பிரபலமடைந்த வசனம்:

மாதவன்: என்ன சார், கம்யூனிசம், கம்யூனிசம்னுட்டு, அதான் சோவியத் யூனியனே உடைஞ்சிருச்சே, இன்னும் என்ன கம்யூனிசம்?

கமல்: ஏன் சார், தாஜ்மகால் இடிஞ்சிருச்சுன்னா காதல் செத்துடுச்சுன்னு அர்த்தமா?

<மேற்கூறிய வசனத்தில் மாதவனின் வரி சிறுபிள்ளைத்தனம், அதற்கு கமல் விடையும் அபத்தம். இருப்பினும் இவற்றைக்கூட மாற்ற வேண்டாம், இதே உரையாடல் அறிவொழுக்கத்துடன் மேலே தொடர்ந்தால் எப்படி இருக்கும்?>

மாதவன்: என்ன சொல்றீங்க, தாஜ்மகாலை 'காதலுக்குக் கல்லறை'ன்னு சொல்வாங்க, அப்போ, சோவியத்தை கம்யூனிசத்தின் கல்லறைன்னு சொல்றீங்களா? அது தவிர, ஒரு ராஜா ஏகப்பட்ட அடிமைகளை வச்சுக் கட்டின ஒரு கட்டிடத்தோட சோவியத் யூனியன ஒப்பிடறதுல இருக்கிற முரண்நகையை கவனிச்சீங்களா? சரி, அதல்லாம் விடுங்க...ஆயிரம் வருஷம் கழிச்சு இன்னிக்கு தாஜ்மகால் இடிஞ்சுதுன்னா, அது அந்தக் கட்டிடத்தின் பின்னால் இருந்த காதல்ங்கிற உணர்ச்சியோட தோல்வியில்ல, அந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பின் அல்லது அது கட்டப்பட்ட விதத்தின் தோல்வி தான். அதே மாதிரி, 70-80 வருடங்கள் கழித்து சோவியத் விழுந்ததுன்னா அது அதன் பின்னாடி இருந்த சித்தாந்தம் அல்லது அது செயல்படுத்தப்பட்ட விதத்தின் தோல்விதான்...இல்லையா?

கமல்: ம்ம்...நீங்க சொல்றது ஓரளவு உண்மை தான். நான் சொல்ல வந்தது என்னன்னா சோவியத்-ங்கிற முயற்சியுடைய தோல்வி, ஒட்டு மொத்த கம்யூனிச சித்தாந்தத்தின் தோல்வி இல்லைங்கிறதுதான்.

மாதவன்: சரி ஒத்துக்கறேன். ஆனால், கம்யூனிச சித்தாந்தப்படி அரசாங்கம் இருக்கற எங்க பார்த்தாலும், ஜனநாயகம் optional, பேச்சு சுதந்திரம் optional அப்டீன்னு இருக்கே, அத எப்படி ஒத்துக்கறது?

கமல்: ஏன் சார், ஜனநாயகம், பேச்சுரிமை இதெல்லாம் compulsory-ஆ இருக்கற நாடுகள்ளெல்லாம், சமத்துவம் optional, தொழிலாளர் நலன் optional, ஏன் வாழ உரிமையே optional-ன்னு இருக்கே, அது பரவாயில்லையா?

மாதவன்: இது ஒரு false choice. மேல புலி, கீழ பாம்பு எது வேணும்-ங்கிற மாதிரி...எனக்கு ரெண்டும் வேண்டாம், இது ரெண்டுல ஒண்ணு சரின்னு சொல்ற சித்தாந்தமும் வேண்டாம்.

கமல்: தம்பி, மக்கள் எல்லாரும் சமமா இருந்து, மதிக்கப்படற சமுதாயத்தில தான் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் இதுக்கெல்லாம் உண்மையான அர்த்தம் உண்டு, அதப் புரிஞ்சுக்கங்க...

மாதவன்: சரி சார், புரிஞ்சுடுத்து, போதுமா?

கமல்: ரொம்ப நல்லது, அப்ப படத்த இத்தோட முடிச்சுக்கலாமா?

மாதவன்: அப்போ, கிரண், நாசர் அவங்கெள்ளாம்?

கமல்: யோவ், இப்பொ சொன்ன டயலாகெல்லாம் படிச்சியா? படம் கண்டிப்பா ஊத்தப் போகுது, கொஞ்சம் காசாவது சேமிக்கலாம்...

படத்தின் மற்றுமொரு பெரும் குறைபாடு, அதன் பாத்திரப் படைப்புகளில் உள்ள செயற்கைத்தனம். மாதவனின் பலவீனமான பாத்திரம் பற்றி முன்னமே சொன்னேன். பொதுவாக கமல் படங்களில் அவரது பாத்திரம் மட்டுமாவது யோசனையோடு செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கமல் இரண்டு பாத்திரங்களாக அண்ணா கமல், தம்பி கமல் என்று இரட்டை வேடம் போடுவது போல் இருக்கிறது. முகத்தழும்புக் கமலின் அதீத வெகுளித்தனம் தனியே பார்க்கும் போது பொருத்தமாகத் தெரிந்தாலும், அது மீசைக் கமலின் தொடர்ச்சிப் பாத்திரம் என்று நம்புவதற்கு நிறைய கற்பனை தேவைப்படுகிறது.

நாசரின் பாத்திரம், இயல்பாக இருக்க முயற்சிக்கும் படத்தில் ஒரு நெருடலான மிகைச் சித்தரிப்பு. கிரண் கமல் படத்தில் கமலைக் காதலித்துத் தீர வேண்டும் என்ற திரை இலக்கணப்படி இயங்கும் பொம்மையாக வந்து போகிறார். சொல்லாமல் கொள்ளாமல் மனம் மாறி விடுகிறார்.

இந்தப் படத்துள் சென்றிருக்கும் உழைப்பை மட்டுமாவது கருதி, இதை ஒரு மோசமான படம் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. ஆயினும், ‘தேவர் மகனுக்கு’த் திரைக்கதை எழுதி, ‘குணா’, ‘மகாநதி’ போன்ற படங்களைத் தந்துள்ள கமல்ஹாசன், இதை விட யோக்கியமான, புத்திசாலித்தனமான படத்தை ‘வழங்க’ முடியும் என்பது நிச்சயம்.

Sunday, September 04, 2005

இரண்டு படங்கள்

வார இறுதியில் இரண்டு படங்கள் பார்த்தேன்.

சர்க்கார்(ஹிந்தி)

பார்க்காதீர்கள். கடி. நேர விரயம்.

படத்தின் ஆரம்பத்திலேயே 'இது Godfather படத்திற்கு எனது புகழாரம்' என்று இயக்குனர் சொல்லி விடுவதால், கதை திருடப்பட்டது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆங்கில மூலத்தில் Godfather-க்கு மூன்று புதல்வர்கள் - ஒருவன் முரடன், அடுத்தவன் சாதுர்யன், மூன்றாமவன் துரோகி. சர்க்காரில் இரண்டு புதல்வர்கள் - முதலாமவன் முரடன் + துரோகி, இரண்டாமவன் சாதுர்யன். எதிர்கட்சிகளோடு சேர்ந்து முதலாமவன் செய்யும் சூழ்ச்சியை இன்னொரு பையனும் அப்பனும் சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை.

1. அமிதாப் தான் godfather. இவர் குரலில் இருக்கும் Gravitas, இவரது உருவம் மற்றும் உடல் மொழியில் இல்லை. இவரது கதாபாத்திரமும் அடிப்படையில் சரியாக நிறுவப் படவில்லை. 'எத்தனை தாதா படம் பார்த்திருக்கிறார்கள், இவர்களுக்குத் தெரியாதா...' என்று பார்ப்பவர் மீதிருக்கும் நம்பிக்கையில் எடுக்கப்பட்டார் போல் இருக்கிறது.

2. ஏகப்பட்ட Clicheக்கள் படம் முழுவதும். படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ஏழைத் தகப்பன் தனது பெண் ஒரு பணக்கார வாலிபனால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கொடுக்கிறார். அடுத்த காட்சியில் அவனது தேக ஆரோக்கியம் குறைக்கப் படுகிறது. இப்படித் துவங்குகிறது ஒரு நீண்ண்ண்ண்ண்ட cliche ஊர்வலம்.

3. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஆலாபனை. ஒரு காட்சியில் வசனமோ, நிகழ்வோ துவங்குவதற்கு முன்னால், அது நடக்கும் இடம், தட்ப வெட்ப சூழ்நிலை, அருகில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள், அங்கு நடக்கும் ஆடு மாடுகள் என்று சகலத்தையும் காட்டி விடுகிறார்கள். காட்சி முடிந்த பிறகு 'இதற்காடா இந்த அலம்பு அலம்பினீர்கள்?' என்று கேட்கத் தோன்றுகிறது.

4. வில்லன்கள் சாகப் போவது நமக்கு முன்னால் அவர்களுக்கே தெரிந்து விடுகிறது. 'சர்க்கார் என்ன சும்மா விடமாட்டான்' என்று சொன்ன அடுத்த சில காட்சிகளில் ஃபணால்.

5. அபிஷேக் பச்சன் Michael Corleone மாதிரி இல்லை; பக்கத்துத் தெருவில் இருக்கும் முரளி மாதிரி இருக்கிறார்.

6. இசை பயங்கர காமெடி. எதற்கெடுத்தாலும் தடாலடியாக பின்னணி இசை வருகிறது. எட்டாங்கிளாஸ் பரிட்சையில் தப்பு தப்பாய் விடை எழுதி விட்டு, அழகாய் இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லா வரிகளையும் ஸ்கேல் வைத்து அண்டர்லைன் பண்ணியது தான் நினைவுக்கு வருகிறது.

இவற்றினாலும், 'நாயகன்' படத்தின் அருமை இப்படத்தைப் பார்க்காமலேயே தெரியும் என்பதாலும், இந்தப் படத்தை, like I said, பார்க்காதீர்கள், நேர விரயம்.

2. The Constant Gardener

இந்த ஊரில் புதுப்படம். Ralph Fiennes, Rachel Weisz நடித்த John Le Carre எழுதிய நாவலின் அடிப்படையிலான படம். சுருக்கமான கதை தான். கென்யாவில் இங்கிலாந்தின் தூதரகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் மனைவி, மர்மமான முறையில் இறக்கிறார். அந்த மரணத்தின் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியை அந்த அதிகாரி கண்டறிவது தான் கதை. கதையில் ஒரே குறை என்னவென்றால், இந்த சூழ்ச்சி அந்த அதிகாரிக்குப் புரிவதற்கு ரொம்ப நேரம் முன்னாலேயே நமக்குப் புரிந்து விடுகிறது. ஆதலால், மர்மத்தில் மர்மமில்லை.

ஆயினும், படத்தின் சுவை குன்றாததற்குக் காரணம், இந்தக் கதையை, ஆப்பிரிக்காவின் இன்றைய சூழ்நிலையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்குப் பயன்படுத்தியிருப்பதுதான். குறிப்பாக சர்வதேச நிதி நிறுவனங்களும், மருந்து கம்பெனிகளும் எப்படி ஆப்பிரிக்காவைப் பரிசோதனைக் களனாகப் பயன்படுத்தி வருகின்றன என்பதை பட்டப் பகலின் வெட்ட வெளிச்சத்திற்கு இந்தப் படம் கொண்டு வருகிறது. 'இந்தப் பரிசோதனை மருந்தை உட்கொள்ள சம்மதிக்க வேண்டும், இல்லாவிட்டால், எந்த மருந்தும் கொடுக்கப்படாது' என்பதில் உள்ள கொடூரமான அநியாயம் முகத்தில் அறைகிறது. சர்வதேச மெத்தனம், சொந்த அரசாங்கத்தில் ஊழல், சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொள்ளைக்காரர்கள் என்று எல்லா திசைகளிலும் மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் என்ற நிதர்சனத்தை பாசாங்கமோ, பகட்டுக் கருணையோ இல்லாமல் சொல்கிறது.

போர்க்குணமுள்ள சமூக சேவகராக Rachel Weisz பிரமாதமாக நடித்திருக்கிறார். Ralph Fiennes-க்கு இது English Patient போன்ற ஒரு பாத்திரம் என்றாலும் நன்கு செய்திருக்கிறார். ஆப்பிரிக்க காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் முடிவு கண்ணீர்க் கவிதை.

விறுவிறுப்பாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கும் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

குரங்கிலிருந்து பிறந்தவன்...

Intelligent Design போன்ற உட்டாலக்கடி சமாச்சாரங்களெல்லாம் டார்வினின் பரிணாம வளர்ச்சித் திரிபிற்கு போட்டியாக முளைத்து வகுப்பறைகளுக்குள்ளும் பாடபுத்தகங்களுக்குள்ளும் நுழைந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தின் சஞ்சீவியாக மரபணு சோதனைச் சாலைகளிலிருந்து
ஒரு செய்தி வந்திருக்கிறது.



உயிரினங்களின் மரபணுவில் (DNA) உள்ள எழுத்துக்களை வரிசைப்படுத்தும் முயற்சியில், மனித மரபணுவிற்குப் பிறகு இப்பொழுது மனிதக்குரங்கின் மரபணுவின் எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் இறுதியில், மனித மரபணு வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்ததில், இரண்டிற்கும் 96 சதவிகிதம் ஒற்றுமை இருப்பதாகக் கண்டுகொண்டிருக்கிறார்கள். அதாவது மூன்று பில்லியன் (மூன்றாயிரம் மில்லியன்) எழுத்துக்களில், சொற்ப நாற்பது மில்லியன் எழுத்துக்களே வித்தியாசப்படுவதாகத் தெரிகிறது.

வித்தியாசப்படும் எழுத்துக்கள் சில, பேச்சுத்திறன் மற்றும் சர்க்கரைக்கு உடலின் எதிர்வினையோடு சம்பந்தமுள்ளவை. முந்திய மாற்றத்தால், மனிதர்களுக்குப் பேச்சுத்திறனும், பிந்தையதால், சர்க்கரை வியாதியும் கிடைத்தன.

இதைவிட டார்வினின் திரிபிற்கு ஒரு நேரடியான, எளிமையான ஆதாரம் இருக்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதலால், நீங்கள் ஐஸ்வர்யா ராயிடம் போய் 'நீங்கள் குரங்கு மாதிரி இருக்கிறீர்கள்' என்று சொன்னீர்களானால், அறிவியல் உண்மையைச் சொன்னதற்காக அடி வாங்கியவர்களின் நீண்ட வரிசையில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.

மற்றொரு செய்தியில், அசினின் DNA-விற்கும் குதிரையின் DNA-விற்கும் 97 சதவிகிதம் ஒற்றுமை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதாக அறிகிறேன். இன்னொரு சந்தேகமும் தெளிந்தது. நேரம் சரியில்லை, ஆகையால் ஒரு :-)