<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, June 30, 2005

ஒவியர் புகழேந்தி



குழந்தைவேலு புகழேந்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்திலும் நன்கு அறியப்பட்ட ஓவியர். பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார், பல விருதுகளை வாங்கியிருக்கிறார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப்பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் என்பதெல்லாம் அவரது Bio-data சமாச்சாரங்கள். அவரது ஓவியங்களின் தனித்துவம் அவற்றில் தெரியும் சமூக அக்கறையும், தார்மீகக் கோபமும், வீரியமுள்ள வெளிப்படையான உணர்ச்சிகளும்.

"பாதிக்கப்பட்டவர்களின் பெருமூச்சையே புகழேந்தி ஓவியங்களாய் விதைக்கிறார். பார்க்கிறவனோ பெருமூச்சையல்ல - புயலை அவர் ஓவியங்களிலிருந்து அறுவடை செய்கிறான். துன்பப்படுகிறவர்கள், தாழ்த்தப்படுகிறவர்கள், ஒடுக்கப்படுகிறவர்கள், மிதிக்கப்படுகிறவர்கள், கொல்லப்படுகிறவர்கள் பற்றியே அவரது ஓவியங்கள் துடிப்போடு பேசுகின்றன" என்கிறார் கவிஞர் காசி ஆனந்தன்.

சென்ற மாதம் ஈழத்தில் ஒரு கண்காட்சி நடத்தியிருக்கிறார்.

அவர் எனது நண்பர். ஹைதராபாத் கல்லூரியில் உடன் படித்தவர் (நான் கணினி, அவர் ஓவியம்). அவரது ஓவியங்களுக்காக ஒரு வலைத்தளத்தை சில காலமாக நான் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறேன். ரொம்பவும் பிரமாதமான வலைத்தளம் இல்லையென்றாலும், அவரது ஓவியங்கள் முழுவதையும் அதன் பார்வையரங்கில் (Gallery) ஏற்றி இருக்கிறேன்.

சமீபத்தில் அவரிடமிருந்து மூன்று புதிய தொகுப்புகள் என்னை வந்தடைந்தன. அவை:

  1. குஜராத் படுகொலை பற்றிய "புகைமூட்டம்" . மேலே இருப்பது புகைமூட்டத்திலிருந்து ஒரு ஓவியம்

  2. கோட்டோவியங்களாக "அதிரும் கோடுகள்"

  3. பல முக்கியமான பிரபலங்களின் முகங்களைச் சித்தரிக்கும் "முகவரிகள்"




இவற்றில் முகவரிகளுக்குள் நுழைவது சுலபம். புகைமூட்டமும், அதிரும் கோடுகளும் பெரும்பாலும் நவீன ஓவியங்கள். பொதுவாகவே, புகழின் நவீன ஓவியங்கள் இரு தளங்களில் இயங்குபவை. ஒன்று பார்வையாளருக்கு அணுக்கமாகவும், மற்றது ஓவியருக்கு அணுக்கமாகவும். ஓவியத்தைப் பார்த்ததும், அதன் கருப்பொருளும், முக்கியக் கருத்தும் புரிந்து விடும். அதைக் கடந்து இருக்கும் அர்த்தங்கள் - வண்ணங்கள், கோடுகளின் போக்கு போன்றவற்றின் உள்ளர்த்தங்கள் - புரிய நேரமாகும்.

இவற்றைத் தவிர அவரது முந்தைய தொகுப்புக்களான உறங்கா நிறங்கள், எரியும் வண்ணங்கள், திசைமுகம் ஆகியவையும் இவ்வலைத்தளத்தில் உள்ளன. புகழ் போன்ற சமூக அக்கறையும், அற்புதத் திறமையும், தைரியமான நேர்மையும் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பது தமிழர்களின் கடமை என்று சமர்ப்பிக்கிறேன்.

Monday, June 27, 2005

குருமூர்த்தியின் அமெரிக்க விஜயம்

பொருளாதார வல்லுநரும், ஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச் தலைவருமான எஸ். குருமூர்த்தி சமீபத்தில் அமெரிக்கா விஜயம் செய்திருக்கிறார். அது குறித்து, ஜூன் 26-ம் தேதி துக்ளக்கில் எழுதியுள்ள கட்டுரையில், இங்கு (அமெரிக்காவில்) நிகழ்த்திய உரையில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.


  1. 9/11-க்குப் பிறகு, "எதற்கும் கவலைப்படும் விசனத்தில் ஆழ்ந்திருக்கும் இறுக்கமான அமெரிக்காவாக மாறி விட்டிருப்பதைப்" பார்த்து, இந்நாட்டு மக்களிடம் "எப்படி பயங்கரவாதத்தை சாதாரணமான மக்கள், பாரத நாட்டில் எதிர் கொள்கிறார்கள் என்பதை" விளக்கியிருக்கிறார். இந்திய நாட்டு மக்களைப் போல் சாதாரண அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பது முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

  2. கடந்த 10-15 ஆண்டுகளில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பொருள் மதிப்பும், சமூக அந்தஸ்தும் மிக அதிகமாக முன்னேறி இருக்கிறது. ஆனால், "தங்களுடைய புதிய அந்தஸ்தால், எந்த அளவுக்கு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுய கௌரவமும் ஏற்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மாறுதல் காண முடியவில்லை".

  3. "கடந்த 5-6 ஆண்டுகளில் உலக அளவில் பாரத நாட்டின் அந்தஸ்தும் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் - போக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்து, உலக சக்தியாக நம்மை அறிவித்து அச்சாரம் போட்டதுதான்".


முதல் கருத்து புரியவில்லை. இந்தியாவில் சாதாரண மக்கள் பயங்கரவாதத்தைச் சமாளிக்கிறார்களா? என்ன சொல்ல வருகிறார்? இரண்டாவது கருத்து பாதி உணமை - நான் பார்த்த வரை இந்தியாவை மட்டம் தட்டும் ஒவ்வொருவருக்கும், இன்னொருவர் முதுகைக்காட்டிக் கொண்டு இந்தியாவைப் பற்றி வெற்று ஜம்பம் பேசிக் கொண்டிருப்பார். It's a wash. மூன்றாவது கருத்து முழு அபத்தம்.

இங்கே தான் பக்கத்தில் பால்டிமோரில் பேசி இருந்திருக்கிறார். நல்லவேளை முன்னாடியே தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால், போய்த் தொலைத்திருப்பேன்.

Saturday, June 25, 2005

ராம்கியின் 'ரஜினி: ச(கா)ப்தமா?' - ஒரு பார்வை

புத்தகம்: ரஜினி: ச(கா)ப்தமா? - ஜெ. ராம்கி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

சென்ற வருடம் இந்தியா சென்றிருந்த போது ராம்கியை அவரது சில நண்பர்களோடு சந்தித்தேன். தங்கமான இளைஞர்; ஆர்வமுள்ள, உற்சாகமான, நல்லன பல செய்ய விரும்பும் துடிப்பானவர். சுனாமி சமயத்தில் அவர் மேற்கொண்ட பல நற்பணிகள் வலைப்பதிவுலகத்தில் பிரசித்தம். இப்படிப்பட்ட ஒரு நண்பர் எழுதியுள்ள புத்தகத்தை என்னால் ரொம்பவும் விமரிசனம் செய்ய இயலாது.

எப்படி ராம்கியால் ரஜினியை ரொம்ப விமரிசனம் செய்ய முடியாதோ, அதே போல :-).

அது பற்றி பின்னர். முதலில், புத்தகம் பற்றி. ரஜினி என்ற மனிதரின் வாழ்க்கை, அவரது ஆளுமை தமிழ்ச் சமுதாயத்தில் உண்டு பண்ணின தாக்கம், அதை அவர் எதிர் கொண்ட விதம் என்று கடந்த இருபத்தைந்து - முப்பது ஆண்டுகளில் நடந்த வரலாற்றை விவரித்து, அலசும் சுவை குன்றாத புத்தகம் இது. ரஜினியின் பூர்விகத்தில் தொடங்கி, அவரது கலையுலக வாழ்க்கை தொடங்கிய விதம், சென்ற பாதை, எதிர் கொண்ட சவால்கள், எடுத்த முடிவுகள் எனப் பல விஷயங்களை தொகுத்து வழங்குகிறது.

சமீபத்திய வரலாறை எழுதுவதில் சில சிரமங்கள் உள்ளன. படிக்கும் பலருக்கும் நடந்த நிகழ்ச்சிகள் பலவும் நன்கு நினைவிருக்குமாதலால், மிகவும் கவனமாக எழுத வேண்டும். தவறிருந்தால் சுட்டிக்காட்டிக் குட்டுவதற்கும், தவறே இல்லாவிட்டால், "என்ன புதிதாக சொல்லி விட்டான்" என்று சொல்வதற்கும் தலா ஒரு கூட்டம் காத்திருக்கும். இவற்றிலிருந்து தப்பிபதற்கு இரண்டே வழிகள் தாம் உள்ளன - ஒன்று எழுதும் விஷயத்தில், சில விசேட அனுமதிகளின் மூலமாகவோ, திருட்டுத்தனமாக துப்பறிவதன் மூலமாகவோ, படிப்பவர்களுக்கு தெரியாத விஷயங்களை புத்தகத்தில் வெளிக் கொண்டுவருவது. இது ராம்கி போன்ற தனி மனிதரால் செய்யக் கூடியது அல்ல. (இஷ்டத்துக்குப் பொய் சொல்லியிருக்கலாமே என்று நினைப்பவர்கள் கட்டுரையின் முதல் வரிகளை மீண்டும் படிக்கவும்). இரண்டாவது வழி, பல வருட காலத்தில் நடந்த விஷயங்களை, பல தகவல் தளங்களிலிருந்து சேகரித்து, ஒன்றுபடுத்தி, நீக்க வேண்டியவற்றை நீக்கி, மற்றவற்றைத் தொகுத்து, சுவையான சுலபமான நடையில் எழுதி, படிப்பவர்களுக்கு அனைத்தையும் ஒரு சில பக்கங்களில் ஒரு கதை போலப் படித்து அசை போட வசதியாக அமைப்பது. இந்தப் புத்தகத்தில் ராம்கி இதை சிறப்பாகச் செய்துள்ளார்.

புத்தகத்தின் முதல் அத்தியாயம் ரஜினியின் குடும்பம், அவரது இளமை, அதன் அலைச்சல்கள், பிரயாணங்கள், முயற்சிகள் ஆகியவற்றை விவரிக்கிறது. ரஜினி - பாலசந்தரின் முதல் சந்திப்பைப் படிப்பது, நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்குப் பின் ரஜினியின் பிரபலத்தின் அசுர வளர்ச்சி, ஒரு தற்காலிக தேக்கம், மீண்டும் வளர்ச்சி ஆகியவற்றை விவரித்து விட்டு அவரது ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் அலசுகிறது.

ராம்கிக்கு இயல்பாகவே ஒரு எளிமையான, சிக்கலில்லாத நடை வாய்க்கப் பெற்றிருக்கிறது. ஏகப்பட்ட தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கிறார். ரஜினியின் பல நேர்முகங்கள், பத்திரிக்கைத் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் புத்தகம் முழுவதும் பொருத்தமான இடங்களில் இடம் பெறுகின்றன. ஒரு நல்ல கட்டுரையாளனுக்கு அழகு, தான் எழுதுவதை விட மிக அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பது. ராம்கி அதைச் செய்திருக்கிறார் என்பது தெளிவு.

இப்புத்தகம் கீழ்கண்ட விதங்களில் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம்:

1. ஒவ்வொரு அத்தியாயமும் சுவையாக இருக்கிறது. ஆனால், முதல் அத்தியாயத்திற்குப் பின்னர், ஒரு தெளிவான கால வரிசைக்கிரமம் இல்லை. ஆதலால், சில இடங்களில், ஒரு முன்னும் பின்னும் அலை பாயும் தன்மை தென்படுகிறது.

2. அத்தியாயங்களுக்கு, ரஜினியின் படங்களின் பெயர்களை வைத்தது சுவையான சாமர்த்தியம். ஆனால் கூடவே ஒரு உப தலைப்பையும் வைத்திருந்தால் இன்னமும் தெளிவாக இருந்திருக்கும் (உதாரணம்: 'பாயும் புலி' - ரஜினிக்கு அரசியல்வாதிகளின் எதிர்வினைகள்)

3. ராம்கி தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதைக் கடந்து எழுத மிகவும் மெனக்கெட்ட்ருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் அது சுலபமில்லை. ரஜினியின் தனி மனித ஒழுக்கம், அவரது நல்லிதயம் ஆகியவற்றில் எனக்குக் (எனக்குத் தெரிந்த பலருக்கும்) கேள்வியில்லை. ஆயினும் அவரது அரசியல் மற்றும் சமுதாய நிலைப்பாடுகள் விமரிசனப் பொருள்தான். அவரது இதயத்தில் இடம் பெற்றிருக்கும் ரசிகர்களோடு அவர் எந்த அளவிற்கு நேரடியாகப் பழகி இருக்கிறார்? சூப்பர் ஸ்டார் என்ற பீடத்திலிருந்து இறங்கி வந்து மக்களோடு உறவாட அவர் தயாரா? அவரது அரசியல் தலையீடுகளும், தானோ, தனது திரைப்படங்களோ, தனது நண்பர்களோ பாதிக்கப்பட்ட போது தானே நிகழ்ந்துள்ளன? பலத்த பரிசீலனைக்குப் பின் நிகழும் தனி மனித உதவிகள் தவிர தனது செல்வத்தையும் புகழையும் சமுதாயத்திற்காக எப்படி செலவழித்துள்ளார்? இவையெல்லாம், இந்தப் புத்தகம் அணுகாத முக்கியமான கேள்விகளாகப் படுகிறது. புத்தகத்தின் ஓரிடத்தில், "தமது படங்களைக் காட்டிலும் தனது ரசிகர்களின் மேல் அவருக்கு அக்கறை இருந்து வந்திருக்கிறது. வலுக்கட்டாயமாக அரசியல் அவர் மீது திணிக்கப்பட்ட போதும் கூட, சரியான பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்ததும் அந்த அக்கறையின் ஒரு வித வெளிப்பாடே என்கிறார்கள் ரஜினியை நன்கு அறிந்தவர்கள்" என்றும், மற்றோரிடத்தில், "ரஜினியின் மவுனத்திற்குக் காரணம், அமைப்பின் மீது கோபப்பட்டு எவ்விதப் பலனும் இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டது தான் என்று தெரிகிறது" என்றும் சொல்வது ஒரு ரசிகனின் rationalization-ஆகவே தெரிகிறது.

ரஜினியின் ஆளுமை புதிர்த்தன்மை வாய்ந்தது. அதைப் புரிந்து கொள்வது கடினமானது. புரிந்து கொண்டது போல் நடிப்பது சுலபமானது. ராம்கி அந்தத் தவறைச் செய்யாமல், ஒரு கவனமான நேர்மையுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ரஜினியின் வாழ்க்கை ஒரு சுவையான கட்டத்தில் இருக்கும் இந்நேரத்தில் இதுவரை நடந்ததை முழுமையாகத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஒரு தொடர்கதையின் நடுவில் வரும் முன்கதைச் சுருக்கம் போல.

இன்னமும் பத்தாண்டுகளில், இந்தப்புதிரின் பல கேள்விகளுக்கு விடை தெரியும் தருணத்தில், மீண்டும் இத்தகைய ஒரு புத்தகத்தை ராம்கி எழுத வேண்டும். அதற்கு முன் இதே ஆற்றொழுக்கான நடையில் வேறு பல புத்தகங்களையும் எழுத வேண்டும்.

இந்தப் புத்தகத்தின், அச்சும், தரமும் அருமை. எழுத்துப் பிழைகள் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தின் ராகவன், பத்ரி ஆகியோருக்கு நன்றி.

Friday, June 24, 2005

ரோசா வசந்தின் 'அன்னியன்' விமர்சனம்

'அன்னியன்' படம் பற்றி ரோசா வசந்தின்அட்டகாசமான ஸடையர் விமர்சனத்தை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தேன் - என் பெயர் இடறிய வரை. But who cares... படம் பார்த்தவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய விமர்சனம்.

ஷங்கரின் சமூகப்பார்வையும், குறைகளை அவர் அணுகும் விதமும் கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டியவை தான். தியேட்டரில் படம் பார்க்கும் போது, சமுதாயத்தின் கீழ் மட்டப் பிரஜை கெட்டவனாகச் சித்தரிக்கப்படும் ஒவ்வொரு முறையும், I cringed inside. ஷங்கரை ஒரு சாதிப் பற்றாளர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் முன் வைக்கும் சமூக நியாயங்கள் ஒரு மத்திய தர/மேல் சாதிப் பார்வையில் இருந்து வைக்கப்படுபவை என்பதில் எனக்கு ஐயமில்லை. சமுதாயத்தில் எவ்வகையான மாற்றம் எம்முறையில் வர வேண்டும் என்பதில் ஒரு குறை முதிர்ச்சிப் பார்வை உள்ளவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

இவற்றை மீறி படத்தின் தொழில் நுட்ப சாகசங்களுக்காகவும், நடிப்பு, பாடல்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் ரசிக்க வேண்டும் என்றால் பார்ப்பவர்கள் ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ, அல்லது அதை சகித்துக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க வேண்டும். நான் மூன்றாம் வகை. ஆனால் இதைச் சகிக்க முடியாது என்று சொல்பவர்களின் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது.

Thursday, June 23, 2005

புத்தக மீமீ

வலைப்பதிவுலகத்தில் புத்தக மீமீ ஏறத்தாழ ஓய்ந்து விட்டது. ஆட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்; பிகேஎஸ்-இன் அழைப்பிற்கு நன்றி.

எனது புத்தக அலமாரியில் அதிகம் புத்தகங்கள் கிடையாது. காரணம், படித்த புத்தகங்களை யாருக்காவது தானம் கொடுத்து விடுவேன். அதற்குக் காரணம், எந்தப் புத்தகத்தையும் இரண்டாம், மூன்றாம் முறையெல்லாம் படிக்கும் வழக்கமே எனக்குக் கிடையாது. எனக்குத் தெரிந்து பொன்னியின் செல்வனை ஒரே ஒரு முறை படித்தவன் நான் ஒருவன் தான்.

இனி, தமிழில் பத்து, ஆங்கிலத்தில் பத்து.

தமிழ்:

  • பொன்னியின் செல்வன் - இரண்டாம் பகுதி படிக்கும் போதே, 'ஐயோ இன்னும் மூன்று பகுதிகளில் முடிந்து விடுமே' என்று ஏங்க வைத்த புத்தகம்
  • மோக முள் - இசையைப் பற்றிய வருணனைகளுக்கு மட்டுமே படிக்க வேண்டிய புத்ததம்
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள் - கேள்வியே இல்லை - சுஜாதாவின் ஆகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு.
  • வசந்த் வசந்த் - நக்கலான நடை; அட்டகாசமான கதை; Top form-இல் கணேஷ்-வசந்த்
  • ஒரு புளியமரத்தின் கதை - சிக்கலான கதையை இத்தனை சுவையாகச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த நாவல்
  • புலிநகக் கொன்றை - பக்கத்துக்குப் பக்கம் வியக்க வைத்த கதை. சுஜாதா இதைப் பற்றி கருத்து சொல்லி இருக்கிறாரா என்று தெரிந்தால் சொல்லவும்.
  • பிரம்மோபதேசம் - ஒரு மிக நுட்பமான கருத்தை மிக எளிமையாகச் சொல்வதில் ஜெயகாந்தன் சமர்த்தர் என்று நிரூபிக்கும் கதை.
  • காமராஜை சந்தித்தேன் - சோவை ஒரு கோமாளியாக அல்லாது ஒரு உணர்ச்சி பூர்வமான மனிதராகச் சித்தரிக்கும் புத்தகம்
  • ஆத்மாநாம் கவிதைகள் - இது பற்றித் தனியாக எழுத வேண்டும் - ஆத்மானாம் சென்ற நூற்றாண்டின் ஒரு பெரும் கவிஞர்.
  • புதுமைப்பித்தன் சிறுகதைகள் - ஒரு எழுத்தாளனிடம் இத்தனை சாகசமா?


ஆங்கிலம்:

  • Deptford Trilogy by Robertson Davies - எளிமையான நடையில் ஒரே கதையை மூன்று பார்வையிலிருந்து சொல்லும் வித்தியாசமான நாவல்.
  • The Devil's disciple by GB Shaw - ஷாவின் ஆகச்சிறந்த படைப்பு
  • Atlas Shrugged by Ayn Rand - சின்ன வயதில் படித்த போது ஏற்பட்ட தாக்கம் இன்னமும் தணியவில்லை.
  • Small is Beautiful by EF Schumacher - காந்தீய பொருளாதாரத்தின் உண்மையான அர்த்தமும், பயன்பாடும்.
  • Games people play by Eric Berne - உளவியலில் ஒரு மைல்கல் புத்தகம்
  • Mahabharatha by Rajaji - எனக்குத் தெரிந்து இது தான் மகாபாரதம்
  • Three men in a boat by Jerome K Jerome - பைத்தியக்காரன் போல் சிரித்துக் கொண்டு படித்த புத்தகம்
  • Fear is the key by Alistair Maclean - படித்த உடனேயே திருப்பிப் படிக்க வைத்த ஒரே புத்தகம்
  • Bridge across forever by Richard Bach - sentimental favorite :-)
  • Swami and friends by R K Narayan - எப்போது படித்தாலும் எவரையும் பாலகராக்கும் புத்தகம்.

Wednesday, June 22, 2005

அன்னியன்

அன்னியன் படம் பற்றி அருண் எழுதியது தான் கிட்டத்தட்ட என் கருத்தும்.

1. இந்தப் படம் சமூக அவலங்கள்/ஒழுக்கக் கேடுகள், அது பற்றி எழும் தார்மீகக் கோபங்கள் போன்ற தளங்களில் ரொம்ப சுமாராகத்தான் இயங்குகிறது. ரயிலில் சாப்பாடு சரியில்லை என்பதற்காகக் கொலை செய்ய வேண்டுமா, வண்டியை நிறுத்தாமல் போனதற்கு எருமை வதமா என்றெல்லாம் முதல் பாதியில் கேள்விகள் வந்தாலும், மனச்சிதைவுக்கு உள்ளானவன் என்ற விளக்கம் வரும் போது, அவையெல்லாம் ஒரு கோபத்தின் அதீத வெளிப்பாடுகள் என்று சமாதானம் செய்து கொள்ள முடிகிறது. ஆனால், நேரு ஸ்டேடியம் போய் அன்னியன் லெக்சர் விடும் போது, அந்த சமாதானம் அடிபட்டுப் போகிறது. மக்கள் அன்னியனின் நடவடிக்கைகளை ஆரவாரத்தோடு ஆதரிப்பதாய் காட்டும் போதும், அவனே தனது செய்கைகளை தர்க்க ரீதியாக நியாயப்படுத்துவதாகக் காட்டும் போதும், இயக்குனரே அந்தப் பாத்திரத்தின் செயல்கள் சரிதான் என்று சொல்வதாக அமைகிறது. இதனால் படத்தின் தார்மீக அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடுகிறது.

2. சதா சாதா.

3. சண்டைக்காட்சிகள் சுமாராகத் தான் இருந்தன. தயவு செய்து இன்னொரு முறை கதாபாத்திரத்தை அந்தரத்தில் தொங்க விட்டு காமெராவைச் சுற்றாதீர்கள். வேண்டுமானால் காட்சியை நிறுத்தி விட்டு ஒரு வார்த்தை சொல்லுங்கள், தியேட்டரின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு ஓடிப்போய் மற்றொரு ஆங்கிளிலிருந்து நானே பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கும் செலவு மிச்சம்.

4. 26 கோடி செலவு செய்ததாகச் சொன்னார்கள். திரையில் திரவியம் தெரியவில்லை.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் (பெரிய திரையில்). விக்ரம் நடிப்பு அசத்தல் (கமல் படத்தைப் பார்த்தால் வெப்பப் பெருமூச்சு விடுவார்), விவேக் நகைச்சுவை பிரமாதம், மூன்று பாடல்கள் பல முறை கேட்கலாம். இதையெல்லாம் விட படம் என்னை கடைசி வரை ஆர்வம் குன்றாமல் உட்கார வைத்திருந்தது.

தத்தித் தாவுது மனமே


3monkey-china
Originally uploaded by Srikanth Meenakshi.
நான் பிறந்தது சீன பஞ்சாங்கத்தின் குரங்கு வருடத்தில். நான் எழுதுவதைப் படித்தால் உங்களுக்கு இதன் பொருத்தம் சுலபமாகப் புரியும்.

உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.