<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d591562645360627291', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, July 28, 2005

ழானின் படுகொலை: இரு வேறு எதிர்வினைகள்

சென்ற வாரம் லண்டனில் ழான் சார்ல்ஸ் டெ மெனெண்டஸ் என்ற அப்பாவி இளைஞர், காவல்துறையினரால் தீவிரவாதி என்று சந்தேகிக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஓரிரு தினங்கள் எரிச்சலூட்டும் வகையில் மௌனமாக இருந்து விட்டு, பின்னர் லண்டன் காவல்துறைத் தலைவர், மற்றும் பிரதமர் டோனி பிளேர் இருவரும் மன்னிப்புக் கோரி இருக்கிறார்கள்.

சிக்கலான் கேள்விகளை எழுப்பும் முக்கியமான நிகழ்வு இது. இதைப் பற்றி இரண்டு கருத்துக்கள்:

ஹிந்து தலையங்கம்

இன்றைய நியூ யார்க் டைம்ஸில் கருத்துக் கட்டுரை (படிப்பதற்கு பதிவு (இலவசம்) தேவை).

ழானின் படுகொலையைச் செய்த காவல் (அதிகாரி அல்லது வீரர்) செய்தது சரியா என்ற குறுகிய கேள்விக்கு இருவகையிலும் நேர்மையாக பதில் சொல்ல முடியும். மேற்சுட்டிய கட்டுரைகளில் என்னைக் கடுப்படித்த விஷயம் ஒன்று. ஒரு சிறு விரலசைவில் தன்னை வெடிக்கச் செய்யும் வல்லமை பெற்றவர்களை காவல்துறையினர் எதிர்கொள்வதில் இருக்கும் சவால்கள் எத்தனை கடினமானவை என்பதைப் பற்றி ஹிந்து தலையங்கம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.

'A Few Good Men' ஒரு புகழ் பெற்ற படம் - டாம் க்ரூஸ், ஜாக் நிகல்ஸன் நடித்தது. ஜாக் ஒரு அதிகார துஷ்பிரயோகம் செய்த ராணுவ அதிகாரியாக வருவார். அவரது வண்டவாளம் தண்டவாளம் ஏறும் கடைசி காட்சியில் அவர் சொல்வதாக வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது:

"You weep for Santiago and you curse the marines. You have that luxury. You have the luxury of not knowing what I know: That Santiago's death, while tragic, probably saved lives. And my existence, while grotesque and incomprehensible to you, saves lives."

Sunday, July 24, 2005

'அப்பிடிங்கிறதெல்லாம்...'


'நீங்கள் கேட்ட பாடல்' விஜய சாரதி செல்லும் இடங்களும், சொல்லும் தகவல்களும் சுவையானவை. ஆனால் அவர் பேசும் பாணி தாங்க முடியாக் கொடுமை. சிறிது நேரத்திற்கு முன் அவர் மன்னார் வளைகுடா பீச்சில் நின்று கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார். காற்றைக் குத்தியவாறு, 'ஆடம்ஸ் பாலம், பாக் ஜலசந்தி, வங்காள விரிகுடா' என்று கஷ்டப்பட்டு விளக்கிக் கொண்டிருக்கையில், நடுவில் இப்படி ஒரு வாக்கியம்:

'இப்பொ பார்த்தீங்கன்னா, இந்தப் பகுதியில் கடல்ல ஆழம் கம்மி. அதனால, கப்பல் அப்பிடிங்கிறதெல்லாம்...'

Hold on, hold right there...'கப்பல் அப்பிடிங்கிறதெல்லாமா'? கப்பலுக்கு எதற்கு ஓய் ஒரு 'அப்பிடிங்கிறதெல்லாம்'? விட்டால் 'அப்பிடிங்கிறதெல்லாமு'க்கே ஒரு 'அப்பிடிங்கிறதெல்லாம்' போடுவீர் போலிருக்கே... சின்னப் பசங்களுக்கு இவரைக் கதை சொல்ல விட்டால், 'பாட்டி அப்பிடிங்கிறவங்க, வடை அப்பிடிங்கிறதெல்லாம் சுட்டுக்கிட்டிருந்தாங்க அப்பிடின்னும் சொல்லலாம்' என்பார் போலிருக்கிறது.

யாராவது விஜய சாரதியின் ஒக்கப்பிலேரியிலிருந்து 'அப்பிடிங்கற' வார்த்தையை அப்படியே எடுத்து விட்டால் ரொம்ப புண்ணியமாய்ப் போகும்!

Friday, July 22, 2005

சிவாஜியின் 'ரயில்வே கழிப்பறை'

எனது தர்ம பத்தினியின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். எனது மாமனார் ஸ்ரீமான் தண்டபாணி அவர்கள் நல்லவர், வல்லவர்; இனிமையாகப் பழகி, நகைச்சுவை உணர்வோடு, தனது வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகச் அவர் சொல்லச் சொல்ல, கேட்பவர்களுக்கு அலுக்கவே அலுக்காது.

எனது மாமனார் இந்த வலைப்பதிவுகளை அடிக்கடி வாசிப்பவர். ;-)

அவர் விவரித்த ஒரு சுவையான சம்பவத்தை உங்களோடு (சுருக்கமாக) பகிர்ந்து கொள்கிறேன். தான் பெற்ற...etc. etc..

1971-ஆம் வருடம். ஸ்ரீ விக்னேஸ்வரா கலை மன்றத்தில் சிவாஜி கணேசன் துணைத் தலைவர். ஒரு நாள் மன்ற நிர்வாகிகளோடு (மாமனாரும் இதில்) சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கையில், ஒருவர் (மாமனார் இல்லை) 'நீங்கள் ஏன் எப்போதும் ஓவர் ஆக்ட் பண்ணுகிறீர்கள்?' என்று கேட்டு விட்டாராம். அதற்கு சிவாஜி பதில் (பாசமலர் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்):

"நீங்களெல்லாம் நிறைய படிச்சவங்க, ஆங்கிலப் படங்கள் எல்லாம் பார்த்திருப்பீங்க, ஆனா தமிழ் நாட்டில எத்தனையோ பாமர ஜனங்க இருக்காங்க, என்னோட நடிப்பு அவங்களையும் போய்ச் சேரணுமே...

நீங்க ரயில்வே கக்கூஸ் பாத்திருக்கீங்களா? 'ஆண்கள்', 'பெண்கள்' அப்டீன்னு போர்டு போட்டிருக்கும். ஆனா கூடவே ஒரு ஆண் படமும், ஒரு பெண் படமும் வரைஞ்சிருப்பாங்க...ஏன்? அதான் ஒரு தடவை எழுதிட்டாங்களே...அவங்க ஒவர் ரைட்டிங் பண்ணறாங்களா? இல்ல, படிப்பறிவில்லாத பாமர ஜனங்களுக்கும் புரியணும்-னுட்டுத்தான்.

நான் ஒரு ஜட்ஜாவோ, இன்ஸ்பெக்டராவோ வந்தா அதை மிகைப்படுத்தி காண்பிச்சாத்தான் அதை நடிப்புன்னு அவங்களால ஏத்துக்கிட்டு ரசிக்க முடியும். நீங்க சொல்ற ஓவர் ஆக்டிங் தான் அவங்களுக்கு ஆக்டிங்", என்றாராம்.

இதில் மாமனாருக்கு முக்கிய சந்தோஷம் தன்னையும், தனது நண்பர்களையும் 'நிறைய படிச்சவங்க' என்று சிவாஜி அங்கீகரித்தது தான். :-)

Tuesday, July 19, 2005

காந்திஜி-பெரியார் உரையாடல்

முன்குறிப்பு: 'உண்மை' இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த உரையாடல் இது. சுவையான கருத்துப் பரிமாற்றம் என்றாலும், முடிவில், காந்திஜி, பெரியார் இருவரும் எந்த விதத்திலும் கருத்தொருமிக்கவில்லை. பெரியாரின் நேரடியான உரையாடல் பாணியும், காந்திஜியின் வாக்கு சாதுர்யமும் தான் தெரிகின்றன.1927-ஆம் ஆண்டு பெங்களூரில் காந்தியார் விடுதியில் தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்களும், தோழர் தேவதாஸ் காந்தியவர்களும் கீழே இருந்து வரவேற்று, காந்தியாரிடம் தனி அனுமதி பெற்று தந்தை பெரியார் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அவ்வமயம் அங்கு காந்தியாருக்கும், பெரியாருக்கும் நடந்த சொல்லாடலின் ஒரு பகுதி: -

பெரியார்: இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்.

காந்தியார்: ஏன்?

பெரியார்: இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை.

காந்தியார்: இருக்கிறதே!

பெரியார்: இருக்கிறதாகப் பார்ப்பனர் கற்பித்து, அதை மக்கள் மனத்தில் அப்படி நினைக்கும்படி செய்திருக்கிறார்கள்.

காந்தியார்: எல்லா மதங்களும் அப்படித்தாமே?

பெரியார்: அப்படி அல்ல; மற்ற மதங்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும், மதக்காரர்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய கொள்கைகளும் உண்டு.

காந்தியார்: இந்துமதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா?

பெரியார்: என்ன இருக்கிறது? ஒருவன் பிராமணன், ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன் என்கிற இந்தப் பேத, பிரிவுத் தன்மையல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள், பொது ஆதாரங்கள் இருக்கின்றன? அதுவும், பிராமணன் உயர்ந்தவன்; சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது?

காந்தியார்: சரி, அந்தக் கொள்கையாவது இருக்கிறதே!

பெரியார்: இருந்தால் நமக்கு இலாபமென்ன? அதனால் பார்ப்பனர் பெரியசாதி; நீங்களும் நாங்களும் சின்னசாதி என்பதாக அல்லவா இருந்து வருகிறது?

காந்தியார்: நீங்கள் சொல்வது தவறு. வருண தர்மத்தில் சின்ன சாதி, பெரிய சாதி என்பது இல்லை.

பெரியார்: இது தாங்கள் வாயால் சொல்லலாம்; காரியத்தில் நடவாது.

காந்தியார்: காரியத்தில் நடத்தலாம்.

பெரியார்: இந்துமதம் உள்ளவரை ஒருவராலும் நடத்த முடியாது.

காந்தியார்: இந்துமதத்தின் மூலம்தான் செய்யலாம்.

பெரியார்: அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது?

காந்தியார்: நீங்கள்தான், இந்து மதத்துக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே!

பெரியார்: நான் மதமும் இல்லை; குறிப்பிட்ட ஆதாரங்கள் இல்லை என்றேன். மதத்தை ஒப்புக் கொண்டால், ஆதாரத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டாமா?

காந்தியார்: மதத்தை ஒப்புக் கொண்டு, ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே?

பெரியார்: அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக் கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்ற முடியாது.

காந்தியார்: நீங்கள் சொல்லுவது மற்ற மதங்களுக்குச் சரி; இது இந்துமதத்துக்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக்கொண்டு, மதத்தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; உங்களை ஆட்சேபிக்க எவனாலும் முடியாது.

பெரியார்: அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள், அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்ல வேண்டாமா?

காந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அதாவது, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆதலால்தான், நாம் ஒரு இந்து மத°தன் என்பதை ஒப்புக் கொண்டு, நம் இஷ்டம் போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன் - உலகத்திலேயே சொல்லுகிறேன் - மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால், இந்துமதம் ஒன்றினால்தான் முடியும்; மற்ற மதங்களால் முடியாது. ஏனென்றால், மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கை வைத்தால் கையை வெட்டி விடுவார்கள். கிறித்துநாதர் என்ன சொன்னாரோ, அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்லுகிறதோ, அந்தப்படிதான் கிறித்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும்.
முகமது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ அப்படித்தான் முஸ்லிம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும். மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாகிவிடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்து தான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால், அது மத விரோதமாகி விடும். இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை. ஆனால், இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால் அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்து மதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அனேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனித வர்க்கத் தேவைக்கு ஏற்றபடி செய்யலாம்.

பெரியார்: மன்னிக்க வேண்டும் - அதுதான் முடியாது.

காந்தியார்: ஏன்?

பெரியார்: இந்து மதத்தில் உள்ள சுயநலக் கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.

காந்தியார்: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? `இந்து மதத்தில் தீண்டாமை இல்லை' என்று சொல்லுவதை இந்து மதத்தினர் யாவரும் ஒப்புக் கொள்ள வில்லையா?

பெரியார்: ஒப்புக் கொள்வது என்பது ஒன்று, ஒப்புக் கொண்டபடி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில் நடக்காது.

காந்தியார்: நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4,5 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?

பெரியார்: உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை. தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும், தாங்கள் அவர்களுக்கு வேண்டியிருக்கிறது என்ற சுயநலத்துக்கு ஆகவும் ஒப்புக் கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத் தாங்கள் நம்புகிறீர்கள்.

காந்தியார்: (சிரித்துக் கொண்டே) யார் அப்படி நடக்கிறார்கள்?

பெரியார்: பார்ப்பனர்கள் யாவரும் தான்.

காந்தியார்: எல்லாப் பார்ப்பனருமா?

பெரியார்: ஆம். ஏன்? தங்கள்கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும் தான்.

காந்தியார்: அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம்கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார்: நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.

காந்தியார்: இராஜகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு, அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா?

பெரியார்: இருக்கலாமோ என்னமோ? எனக்குத் தென்படவில்லை.

காந்தியார்: அப்படிச் சொல்லாதீர். நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல பிராமணன் என்றே கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார்: அப்பாடா! தங்கள் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பெரிய உலகில் ஒரே ஒரு பிராமணன் தென்பட்டு இருந்தால், எங்களைப் போன்ற சாதாரண பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டி ருக்க முடியும்?

காந்தியார்: (சிரித்துக் கொண்டே) உலகம் எப்போதும் `இன்டெலிஜன்ஷியா' (படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராமணர்கள் படித்தவர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். ஆதலால், அவர்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. மற்றவர்களும் அந்த நிலைக்கு வர வேண்டும்.

பெரியார்: மற்ற மதங்களில் அப்படி இல்லை. இந்து மதத்தில் மாத்திரம்தான், பார்ப்பனரே யாவரும் இண்டலிஜன்சியாவாக - படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அனேகமாக 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள் படிக்காதவர்களாக, ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே `இண்டலிஜன்ஷி யாவாக' - ஆதிக்கக்காரர்களாக இருக்க முடியும் என்றால், அந்த மதம், அந்த சாதி தவிர்த்த மற்ற சாதியாருக்குக் கேடானதல்லவா? ஆதலால்தான், நான் அந்த மதம் பொய் மதம் என்பதோடு, அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது. ஆதலால், ஒழிய வேண்டும் என்கிறேன்.

காந்தியார்: உங்கள் கருத்து என்ன? இந்து மதம் ஒழிய வேண்டும், பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?

பெரியார்: இந்துமதம், அதாவது இல்லாத - பொய்யான - இந்துமதம் ஒழிந்தால் பிராமணன் இருக்க மாட்டான். இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக்கிறான். நானும் தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.

காந்தியார்: அப்படி அல்ல. நான் இப்போது சொல்லுவதை பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலேயே நாம் யாவர்களும் சேர்ந்து, நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலாமல்லவா?

பெரியார்: தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலுங்கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவது போல், இன்று தாங்கள் செய்வதை அந்த இன்னொரு மகான் மாற்றி விடுவார்.

காந்தியார்: எப்படி மாற்றக் கூடும்?

பெரியார்: தாங்கள்தான் இந்து மதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களை நடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே! அதே போல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்து மதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா?

காந்தியார்: இனி வரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.

பெரியார்: நான் சொல்லுகிறேன். தாங்கள் மன்னிக்கவேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து
விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

காந்தியார்: உங்கள் மனத்தில் பிராமணர் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டு விட்டது. அதுவே உங்களுக்கு முன்னணியில் நிற்கிறது. இது விஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும், இனியும் 2,3 தடவை சந்திப்போம். பிறகு நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் - என்று சொல்லிக்கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் ஒரு தலையை உருட்டித் தடவினார்.

(1927-ல், பெங்களூரில் காந்தியார்-பெரியார் சந்திப்பு-நூல்: `இந்துமதமும் காந்தியாரும் பெரியாரும், (1948) வள்ளுவர் பதிப்பகம், பவானி)

ரீடர்ஸ் டைஜெஸ்ட்டின் 1000-வது இதழ்

இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது.

தனது எண்பத்திமூன்றாம் வருடத்தில் 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' சஞ்சிகை தனது ஆயிரமாவது இதழை இவ்வாரம் வெளியிடுகிறது.

மருத்துவமனையின் பார்வையாளர் அறையில் பல்வேறு பருவ இதழ்களின் இடையிலிருந்து, ஒரு உத்திரவாதமான பொழுதுபோக்கிற்கும், உபயோகமான வாசிப்பிற்கும், நான் எப்போதும் தேர்ந்தெடுப்பது 'ரீடர்ஸ் டைஜஸ்டை'த் தான். நகைச்சுவைக்கென்றே தனிப்பகுதிகள், பக்கத்திற்கு பக்கம் துணுக்குகள், கதைகள், கட்டுரைகள், கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் மருத்துவம் என எல்லாருக்கும் ஏதாவது ஒன்றை வழங்கும் அகில உலக ஆனந்த விகடன் இது.

உண்மை அனுபவங்களென வாசகர்கள் எழுதி அனுப்புபவற்றின் நேர்மையைச் சரி பார்க்க இவர்கள் எடுத்துக் கொள்ளும் கர்மசிரத்தையான முயற்சிகள் மற்ற பத்திரிக்கைகளில் துணுக்குகளாய் இடம் பெற்றுப் புகழ் பெறும்.

பத்தொன்பது மொழிகளில், நாற்பத்தி எட்டு பதிப்புகளில், அறுபது நாடுகளில், பத்து மில்லியன் சந்தாதாரர்களும், (என் போன்ற ஓசியெல்லாம் சேர்த்து) நாற்பத்தியோரு மில்லியன் வாசகர்களும், குங்குமச் சிமிழ், மசாலாத் தூள் சமாச்சாரங்கள் இல்லாமல் சேகரித்திருப்பது பெரிய சாதனை. வாழ்த்துக்கள்.

இந்தப் பத்திரிக்கை இணையத்தில் ஜூலை 26 முதல் இலவசமாக (தற்காலிகமாகவேனும்) கிடைக்கும் என்று CNN தெரிவிப்பது தான் மேற்கூறிய நற்செய்தி.

Sunday, July 17, 2005

"வலைப்பதிவுகளைத் தவிருங்கள்" - சுஜாதா

"Avoid blogs, they are endless ego trips." - இந்தியன் எக்ஸ்பிரஸில் சுஜாதா

மாலனின் பதிவு அளித்த சுட்டியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் சுஜாதா வலைப்பயனர்களுக்குக் கொடுத்திருக்கும் அறிவுரைதான் மேற்காணும் வாசகம்.

இந்த வாக்கியத்திற்கு எதிர்வினையாக எத்தகைய வலைப்பதிவுகள் வரும் என்று ஊகித்து சுஜாதா ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருக்கலாம். அவரை நான் ஏமாற்ற விரும்பவில்லை.

எல்லாக் கட்டுரைகளுமே ஒரு விதத்தில் 'ego-trip' தான். தான் அறிந்தவற்றைக் கொண்டு, தனது கருத்துக்களை, தனது பாணியில் சொல்வதில், "தான்" இல்லாமல் இருக்க முடியாது. சுஜாதாவின் கட்டுரைகளில் இல்லாத சுய தம்பட்டங்களா? அவற்றையும் ரசித்துக் கொண்டு, அவரது கட்டுரைகளை மாய்ந்து மாய்ந்து படிப்பவன் என்ற வகையில், எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

"இளையராஜாவைச் சந்தித்தேன். வீட்டுக்கு வாருங்களேன், சாவகாசமாகப் பேசலாம், என்றார்" என்பதில் தொடங்கி, கமல், மணிரத்னம், ஷங்கர், முந்தா நேற்று பிரபலமான மெட்டி ஒலி மாமா வரை பிரபலங்களின் 'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். அப்துல் கலாம் இவரோடு படித்தவர் என்பதை எல்லாத் தமிழர்களுக்கும் லெட்டர் எழுதித் தெரிவிக்காத குறையாக, எத்தனையோ முறை எழுதி விட்டார்.

இருப்பினும், விஷயமும், நடையும் சுவையாக இருந்தால், படிப்பவர்கள் படிப்பார்கள் என்பதற்கு முதல் எடுத்துக்காட்டு சுஜாதாவேதான்.

பரவாயில்லை. சுஜாதா சொல்லி விட்டார் என்பதற்காக, வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் நிறுத்தி விடப் போவதில்லை. வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாதவர்கள், 'அதென்ன blog...' என்று எட்டிப் பார்த்து விட்டுத் தங்கி விடலாம்.

இணையத்தின் துணையோடு, எழுத்து வாசகர்களைச் சென்றடைவதில் ஒரு ஜனநாயகப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. வலைப்பதிவுகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. இதனால் கலவரப்பட வேண்டிய எழுத்தாளர்களின் வரிசையில் சுஜாதாவிற்கு இடமில்லை. இதை அவரும் அறிவார் என்று நம்புவோம்.

Friday, July 15, 2005

அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!

'திண்ணை'யில் நண்பர் கோச்சாவின் கட்டுரையின்் வாயிலாக, இந்தப் பாடலைக் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. (Caution: the file is 60 MB!)

கலிபோர்னியாவைச் சேர்ந்த முகுந்த் என்பவர், யாழ் என்ற இசைக்குழு மூலம் 'இதயப் பூக்கள்' என்ற ஒலித் தகடை சமீபத்தில் சென்னையில் (வைரமுத்து, விஸ்வனாதன் முன்னிலையில்) வெளியிட்டிருக்கிறார். அதன் முக்கியப் பாடல் தான் 'அமெரிக்கவில் பிறந்த என் அற்புதமே'.

அதன் முதல் வரிகள்:

அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
ஐந்து மணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!
சீக்கிரம் வரத்தான் நினைத்தேன் என் அஞ்சுகமே!
அடிக்கடி சிக்னல் விழுந்ததால் கொஞ்சம் தாமதமே!

குழந்தைக் காப்பகத்தில் தமது சிறார்களை விட்டுச் சென்று, அலுவல் முடிந்து வீடு திரும்பும் போது பெற்றோர்களின் மனதில் ஓடும் பாடலாய் உள்ளத்தைத் தொடும் வகையில் இது படம் பிடிக்கப் பட்டிருக்கிறது. மூன்று குழந்தைகளை நோக்கி அவர்களது தந்தையரும் (இருவர்), தாயும் போக்குவரத்து நெரிசலின் ஊடே பயணிக்கையில், அவர்கள் மனங்களில் தமது குழந்தை பற்றிய எண்ணங்கள் நிழலாடுகின்றன. சேட்டைகள், அழுகை, சிரிப்பு, கொஞ்சல் என்று பலவற்றை நினைத்தபடி அவர்கள் மேற்கொள்ளும் இசைப் பயணம் ரொம்ப அழகு.

அவசியம் பாருங்கள்.

Tuesday, July 12, 2005

பரோபகாரத்துக்காகவே சிக்கனம்

கீழ்காணும் வரிகள் மறைந்த காஞ்சி மகா பெரியவர் சொன்னது. சின்ன வயதில் இதை நான் படித்த போதும் சரி, இப்போது படிக்கும் போதும் சரி, சட்டென்று மனதில் ஒரு தெளிவும், ஒரு புரிதலும் உண்டாகிறது. இந்த பாடத்தை முடிந்த வரை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிய வேண்டும் என்பது பிரார்த்தனை.

"பரோபகாரத்துக்காகவே சிக்கனம்"

சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைக்கிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறது போல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக - கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம் என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.

பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.

சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் 'தனக்கு மிஞ்சி' தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.

Saturday, July 09, 2005

லண்டன் பற்றிய பத்ரியின் பதிவு குறித்து...

லண்டன் குண்டு வெடிப்புகள் குறித்த பத்ரியின் பதிவு முக்கியமானது. இன்றைய உலக அரசியல் சூழலில் நிலவும் ஒரு சிந்தனையை, சித்தாந்தத்தை encapsulate (தமிழ்?) செய்வது. நான் அவரது நன்கு எழுதப்பட்ட கட்டுரையோடு பெரும்பான்மையும் ஒத்துப் போனாலும் ஒரு முக்கிய விஷயத்தில் வேறுபடுவதால், இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பதிவின் இறுதியில் பத்ரி எழுதுகிறார்:

"இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு."

இந்த சிந்தனைப் போக்கை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை ஏற்றுக் கொண்டால் கீழ்காணும் கேள்விகள் எழுகின்றன:

1. குற்றத்தைத் தடுக்க முனைந்தவர்களும் குற்றத்திற்குப் பொறுப்பாவார்களா? ஈராக் மீது போர் தொடுத்ததற்கு அமெரிக்கக் குடிமகன்களான ஜார்ஜ் புஷ், நோம் சோம்ஸ்கி இருவருக்கும் பொறுப்பு உண்டு என்பது போல் அனர்த்தமாக சொல்ல வேண்டியிருக்கும்.

2. குற்றத்தின் பொறுப்பு நீர்த்துப் போய் விடுகிறது - எல்லாருமே பொறுப்பு என்று ஒரு பெரும் கூட்டத்தை நோக்கிக் கைகாண்பிப்பது, உண்மையிலேயே தவறு செய்தவர்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்கத் தான் வழி வகுக்கும்.

3. இதை ஏன் ஜனநாயக நாடுகளுக்கு மட்டும் என்று வரையறுக்க வேண்டும்? ஒரு பிரிட்டிஷ் குடிமகனுக்கு ப்ளேரின் செய்கையை நிறுத்துவது எந்த அளவிற்கு சாத்தியமோ, அதே அளவுக்கு, ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவது ஒரு கொடுங்கோல் ஆட்சியின் குடிமகனுக்கு சாத்தியம். அப்படிச் செய்யாவிட்டால், அந்தக் கொடுங்கோல் ஆட்சியின் குற்றங்களுக்கு அந்நாட்டின் குடிமக்களும் பொறுப்பா?

ஒரு ட்ரெயின் தாறுமாறாகச் செலுத்தப்பட்டு தடம் புரண்டு விட்டால், அந்த வண்டியில் பயணம் செய்தவர் அனைவரும் பொறுப்பு என்று சொல்வது போல் உள்ளது இது.

இந்த வித்தியாசம் ஏன் முக்கியமென்றால், இது வேறு ஒரு கேள்விக்கு பதிலை மாற்றி அமைக்கிறது.

அதாவது, மக்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று கொண்டால், இவர்கள் செய்தது தவறு, அந்தத் தவறை தண்டிக்கும் விதத்தில் (குற்றம் புரிந்தவரைக் கொன்று) அவர்கள் செய்தது சரி என்ற தர்க்கவாதம் நிலை பெறுகிறது. மக்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்று கொண்டால், இவர்கள் செய்தது தவறு, இவர்கள் செய்தது போலவே செயல்பட்ட அவர்கள் செய்ததும் தவறு என்ற வாதம் நிறுவப் படுகிறது.

என்னைப் பொறுத்த வரையில்,

1. ஒரு நாட்டின் அரசாங்கத்தின் குற்றங்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அனைவரையும் பொறுப்பாக்க முடியாது என்றும்
2. இன்றைய உலக அரசியல் சூழலில், neo-con அரசாங்கங்கள், தீவிரவாதிகள் இருவரின் செயல்பாடுகளும் தவறு என்றும்

கொள்வதே சரியெனப்படுகிறது.

Friday, July 08, 2005

"The Hindu" செய்தியோடை

செய்தியோடை வசதி இல்லாத வலைத்தளங்களிலிருந்து நாமே நமக்கு ஒரு கால்வாய் வெட்டிக் கொள்ள ஒரு சேவை உருவாகியிருக்கிறது. இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, இந்து நாளிதழின் கடைசிச் செய்திகள் பக்கத்திலிருந்து ஒரு செய்தியோடை உருவாக்கி இருக்கிறேன். உங்கள் (Bloglines, for example) செய்தியோடை தொகுப்பு சேவையில் இந்த உரலை உள்ளிட்டால் போதும்.

(Thanks, Yagna for the tiny url feedback. Here you go:)

http://tinyurl.com/8xaxq

இதைக் கொண்டு ஒரு தமிழ் செய்தியோடை உருவாக்க தினமணியோடு பல மணி நேரங்கள் போராடினேன் - வெற்றியின்றி. யூனிகோடில்லாவிட்டால் சிரமம் தான். :-(

Tuesday, July 05, 2005

சின்னக் கதைக்குப் பின்னால்...


அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு குழந்தைகளுக்கான சேனலில் ஒளிபரப்பான இந்தக் கதையைக் குறித்த எனது வாசிப்பு தவறா என்று சொல்லுங்களேன்.

Noggin என்ற சேனலில், '64 Zoo Lane' என்பது விலங்குகளின் விளையாட்டாய் காண்பிக்கப்படும் ஒரு கார்ட்டூன் நிகழ்ச்சி. இதன் ஒரு அத்தியாயத்தில் ஒரு காண்டாமிருகம் ஒரு சிறுமியிடம் சொல்வதாய் அமைந்த கதை இது.

ஒரு குளத்தருகே ஒரு பெலிகன் (ஒரு வகை வாத்து - படத்தைப் பார்க்கவும்) வசித்து வந்தது. ஒரு நாள் அதற்கு மீனெதுவும் கிடைக்காமல் வாடியிருக்கையில், அதே குளத்தில் கொக்கு ஒன்று ஏகப்பட்ட மீன்களைப் பிடித்து விட்டது. அந்தக் கொக்கு தான் பிடித்த மீன்களையெல்லாம் ஒரே சமயத்தில் தனது வசிப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல், ஒரு மீனை கரையில் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டுச் செல்கிறது. அந்த மீனைப் பார்த்த பசித்திருக்கும் பெலிகன் அதைத் திருடி தனது அலகில் பதுக்கி விடுகிறது. பின்னர் ஒரு பன்றி ஒளித்து வைக்கும் தர்பூசணியையும், ஒரு சிங்கம் சுவைத்துக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டு ஆகியவையையும் திருடி விடுகிறது. இத்திருட்டையெல்லாம் வேறு சில மிருகங்கள் பார்த்து விடுகின்றன.

பெலிகன் தான் திருடியவையெல்லாம் சுமக்க முடியாமல் சுமந்து, பறக்க முடியாமல் நடந்து, தனது வீட்டிற்கு வருகிறது. அது வந்த சில நிமிடங்களிலேயே நாரை, பன்றி, சிங்கம் ஆகியவை வந்து தனது உணவுப் பொருட்கள் திருடு போய் விட்டதாகச் சொல்லி பெலிகனை கவனமாக இருக்கச் சொல்கின்றன. அவை சென்றதும் பெலிகன் மனம் வருந்தி தான் திருடியவற்றை திரும்பவும் திருடிய இடங்களிலேயே திருப்பி வைத்து விடுகிறது. திருப்பி வைக்கும் போது தூங்குவது போல பாவனை செய்து கொண்டிருக்கும் நாரை, பன்றி, சிங்கம் ஆகியவை பெலிகன் சென்றதும் விழித்துப் பார்த்துப் புன்னகைக்கின்றன.

பெலிகன் வீடு திரும்பி பசியோடு தூங்குகிறது. மறு நாள் விழித்ததும், நாரை, பன்றி, சிங்கம் மூன்றும் பெலிகன் வீட்டிற்கு ஒரு பெரிய கேக்கைக் கொண்டு வந்து 'எங்களிடம் அதிகம் உணவிருப்பதால், உனக்கும் கொஞ்சம் கொடுக்கலாம் என்று கேக் செய்து கொண்டு வந்தோம்' என்கின்றன. பெலிகன் நன்றியுடன் கேக்கை உண்கிறது.

கதை இது தான். எந்த ஒரு சாய்மானமும் இல்லாமல் தான் சொல்ல முயன்றிருக்கிறேன். "கற்பனையே யானாலும் வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க" இதில் இடமிருக்கிறது என்று எண்ணுகிறேன். ரொம்பவும் தோண்டிப் பார்க்கத் தேவையில்லாமலே, இந்தக் கதை சொல்லும் மறைபொருட்களாக எனக்குத் தோன்றுபவை:

1. பசிக்குத் திருடத் துவங்குபவன் சீக்கிரமே, பேராசை பிடித்து, பழக்க தோஷத்தில் திருடத் தொடங்குவான்.
2. அப்படித் திருடித் தின்பதை விட பசியோடிருப்பதே மேல்.
3. சமூக மாந்தர் மிகவும் நல்லவர்கள்; திருடனாய்ப் பார்த்துத் திருந்தி விட்டால், ஏற்று அரவணைத்துக் கொள்வார்கள்.

நான் இடது சாரியோ, வலது சாரியோ, காட்டன் சாரியோ இல்லை. இருப்பினும், இப்பூடகச் செய்திகள் எனக்கு ஒரு ரோசா வசந்த் ரீதியான குமட்டலைத் தான் ஏற்படுத்துகின்றன.

இதைப் பார்க்கும் குழந்தைகள் 'திருடுவது தவறு' என்ற எளிய பாடத்தை மட்டுமே கவனத்தில் பதித்துக் கொள்வர் என்று நம்புவோம்.

Monday, July 04, 2005

ராஜாவின் 'திருவாசகம்'

இளையராஜாவின் சிம்பொனி திருவாசகம் கேட்டேன் (MP3 போலீஸ் கவனத்திற்கு: இந்தியாவிலிருந்து ஒலித்தகடு வாங்கி வருவித்துத்தான் கேட்டேன்).

முதலில் நான் இளையராஜாவின் ரசிகன். என் இளமைக்கு இசையமைத்தவர் என்று நன்றி பொங்கச் சொல்லிக் கொள்பவன். இறை நம்பிக்கை உள்ளவன்; ஓரளவுக்கு திருவாசகமும் படித்தவன். ஒரு காலத்தில் எனது தமிழ் உரைகளையெல்லாம் 'நமசிவாய வாழ்க' என்று சொல்லித்தான் துவங்குவேன்.

நிற்க.

சில வருடங்களுக்கு முன்னால் விகடனில் ராஜாவைப் பேட்டி கண்ட போது அவரது லண்டன் சிம்பொனி பற்றிக் கேட்டார்கள். அப்போது அவர் அந்த இசையை ரசிக்கும் அளவிற்கு தமிழ் இசை ரசிகர்களின் ரசனை பக்குவப்படவில்லை என்ற அளவில் பதில் சொன்னார்.

திருவாசகத்தை சிம்பொனியாகக் கேட்ட போது அவர் சொன்னதின் அர்த்தம், குறைந்தபட்சம் என்னளவிலாவது எனக்கு விளங்கியது.

ஒலித்தகட்டில் கடைசி இரு பாடல்களை என்னால் ரசிக்க முடிந்தது. அதற்கு முன், ஒரு அடர்ந்த மரத்தின் இலைகளினூடே தோன்றி மறையும் சூரியக் கதிர்கள் போல, எனக்குப் பரிச்சயமான இளையராஜா இசை தோன்றி மறைந்தது.

மற்றபடி எனக்கு எதுவும் புரியவில்லை.

இதை இருளில், தனிமையில், ஒரு நல்ல இசைப்பெட்டியின் மூலம் கேட்டால் தான் புரியும் என்று யாராவது சொன்னால் 'சரி' என்று தலையாட்டி விட்டு பழைய இளையராஜா பாடல்கள் கேட்கப் போய் விடுவேன்.