முதல் பகுதிஇரண்டாம் பகுதிமூன்றாம் பகுதிசிகிச்சை முறைகள்
இந்த நோயின் காரணிகள் இன்னவென்று உறுதியாகச் சொல்ல முடியாததால், இந்த நோயை அணுகப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகளும் தெளிவின்றி அநேகம். இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதோ ஒரு சிகிச்சை முறை நன்கு பயனளித்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம். ஒரே பிரச்னை - எந்த சிகிச்சை முறை பலனளிக்கும் என்பதை அறிவதற்கு தெளிவான முறைகள் எதுவும் இல்லை - அதாவது இத்தகைய அறிகுறிகள் இருந்தால் இந்த சிகிச்சை முறைகள் பயன் தரும் என்பதில் அறிவியல் பூர்வமான உறுதியில்லை. வாய்வழியாகவும், பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதிலும் தான் பல சமயங்களில் சிகிச்சை முறைகள் அடையாளம் காணப்படுகின்றன.
பொதுவாக சிகிச்சை முறைகள் இரண்டு வகைப்படுகின்றன - ஒன்று மருந்துகளின் அடிப்படையில் நோயினை அணுகும் வகை; மற்றது, குழந்தையின் குணநலன்களின் (behavior) அடிப்படையில் இதை அணுகுவது. இவற்றிலும் உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் பிரதானமான சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு முன் ஒரு சிறு வார்த்தை. இது நான் அனுபவத்தில் சொல்வது. இந்த நோயைப் பற்றி சில மருத்துவர்கள் - அவர்களை நீங்கள் முதல் முறையாக சந்திக்கும் போது - கூறுவது என்னவென்றால், 'மற்ற முறைகளெல்லாம் இந்த நோயின் அறிகுறிகளைத்தான் நிவர்த்தி செய்ய முயற்சி செய்கின்றன. நாங்கள் ஆதார வேரைத் தாக்குகிறோம் (we attack the root cause)'. மூலக் காரணி என்னவென்று உறுதியாகத் தெரியாத போது இது எப்படி சாத்தியம்? இதையெல்லாம் அதிகம் நம்ப வேண்டாம்.
மருந்துகள்
மருந்துகளின் மூலம் மதியிறுக்க நோயை அணுகுவதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன - ஒன்று, நரம்பியல் ரீதியான மருந்துகள், மற்றது holistic எனப்ப்படும் முழுத் தேக ஆரோக்கியத்தை முன்னேற்ற முயலும் மருந்துகள். மதியிறுக்கம் ஒரு மூளை சம்பந்தப்பட்ட நோய் என்பதால், இரண்டுமே ஏதோ ஒரு விதத்தில் நரம்பியல் பாதிப்பை உண்டு பண்ண முயலும் மருந்துகள் தாம். ஆயினும், முன்னது கொஞ்சம் நேரடியாகவும், பின்னது கொஞ்சம் மெதுவாக, அதிக பாதுகாப்புடனும் செயல்படுவன.
நரம்பியல் ரீதியான மருந்துகளில் ஒரு வகையைப் பார்ப்போம் - இது SSRI (Selective Serotonin Reuptake Inhibitor) எனப்படும் வகையைச் சார்ந்தவை. பயமுறுத்தும் சொற்றொடருக்குப் பின்னால் எளிய விஷயம்தான் உள்ளது. மூளையில் செரடோனின் எனப்படும் ஒரு திரவம் இரத்த ஒட்டம் போல் ஓடிக் கொண்டே இருக்கிறது. மூளையின் செயல் திறனுக்கு இன்றியமையாத ஒரு திரவமாகும் இது. உடலில் தானே உற்பத்தி செய்யப்படுவது. இந்த திரவம், மூளையில் நுழைந்து, அங்கு சில நேரம் இருந்து விட்டு பின்னர் வழித்தெடுக்கப்படுகிறது. அதன் பின்னாலேயே புதிதாக ஒரு குப்பி செரடோனின் வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்த சுழற்சி சரியான வேகத்தில் இருந்தால் மூளை முறையாக வளர்ச்சி பெறும். மனநலக் கோளாறு உள்ள குழந்தைகளிடம் இந்த சுழற்சி மிக வேகமாக நிகழ்கிறதென்றும், அதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப் படுகின்றதென்றும் ஒரு துணிபு இருக்கிறது. ஆகையால் இந்த சுழற்சி வேகத்தைக் குறைக்கும் மருந்துகள் (Re-uptake inhibitor) இந்தக் குழந்தைகளுக்குப் பயன் தரும் என்று நம்பப்படுகிறது. மன அழுத்ததிற்குக் கொடுக்கப்படும் மருந்துகளான Luvox, Prozac போன்றவை இந்த வகையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர நரம்பியல் நிபுணர்கள் சிலர் பரிந்துரைப்பது Steroid வகையிலான மருந்துகள். இது பரிசோதனை அளவில், சில குழந்தைகளுக்கு வியத்தகு வகையில் உதவி செய்திருக்கிறது. ஆனால் கடுமையான பக்க விளைவுகள் (தூக்கப் பிரச்னை, உப்பிய தோற்றம், பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்படைதல் போன்றவை) கொண்டது. இக்குழந்தைகளின் உடல்களில் தடுப்புச்சக்தி மிக அதிக வீரியத்துடன் வேலை செய்து சாதாரண உயிரணுக்களை சேதாரம் செய்கிறது என்றும், அதைத் தடுக்க இந்த மருந்துகள் உதவுகின்றன என்று இந்த சித்தாந்தம் சொல்கிறது. குறிப்பாக, சில திறன்களை (பேச்சு, பழகு தன்மை) ஒரிரு வயதில் அடைந்து, அதன் பின்னர் அவற்றை இழந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை முறை பயன் தந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
நேரடியாக நரம்பியல் சம்பந்தப்படாத மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன. முன்னர் கூறியது போல, இவற்றில் எது எந்தக் குழந்தைக்குப் பயனளிக்கும் என்பது முயன்று பார்த்தே அறியப் பட வேண்டியதாக இருக்கிறது. கலிபோர்னியாவில் இருக்கும் மூத்த மருத்துவர் டாக்டர் பெர்னார்டு ரிம்லண்ட் அவர்கள் நடத்தும் வலைத்தளத்தில் (சுட்டி கட்டுரையின் முடிவில்) எந்த மருந்து எவ்வளவு குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கிறது என்பது பற்றிய புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
மதியிறுக்க நோயை இந்த மருந்துகள் மூன்று திசைகளிலிருந்து அணுகுகின்றன. முதலாவது இதை ஒரு விட்டமின் குறைபாடாகப் பார்ப்பது. இரண்டாவது இதை ஒரு நச்சுப் பொருள்களினால் உருவானதாகக் காண்பது. மூன்றாவது இதை ஒரு வயிறு மற்றும் சீரணப் பிரச்னையாகப் பார்ப்பது. ஆனால், இந்த வகைகளில் மருந்துகளை வழங்கும் மருத்துவர்கள், இதில் ஏதோ ஒன்றை மட்டும் பின்பற்றுவதில்லை. ஒரு குழந்தையிடம் தென்படும் அறிகுறிகளை வைத்து, ஒரு திசையைப் பிரதானமாகக் கொண்டாலும், மூன்று வகையான மருந்துகளையும் உட்கொள்ளச் சொல்கின்றனர். முதல் வகையானதில் விட்டமின் பி-6, பி-12 மற்றும் மெக்னீஷியம், விட்டமின் ஏ (பார்வை கோளாறுகளை முறைப்படுத்த), விட்டமின் சி ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாம் வகையில் chelating agents எனப்படும் நச்சுப் பொருட்களோடு பிணைந்து அவற்றை உடலிலிருந்து நீக்கும் மருந்துகள் (DMSA) அளிக்கப்படுகின்றன. மூன்றாம் வகையில் Nystatin, Pro-biotics போன்ற வயிற்றில் உடலுக்கு சாதகமான பாக்டீரியாக்களை வளர்க்க உதவும் மருந்துகள் சொல்லப்படுகின்றன.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சென்னையில் டாக்டர் கார்த்திகேயன் நடத்தும் DOAST மருத்துவமனையைக் குறிப்பிட்டேன். இவர் மேற்கூறிய மருந்துகளில் உபயோகமானவற்றைக் கண்டறிந்து, அவற்றுடன் ஆயுர்வேதம், யோகா போன்றவற்றையும் சேர்த்துக் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் பாதுகாப்பான, நீண்ட நாள் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய ஒரு மருந்து முறையினை கண்டறிந்து வருகிறார். இவரது மருத்துவமனை வரும் பல குழந்தைகள் நல்ல பலனடைந்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்த மருத்துவமனை பற்றி குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியான கட்டுரை ஒன்று சந்திரவதனாவின் வலைப்பதிவில் வெளி வந்தது. சுட்டி கட்டுரை முடிவில்.
மருந்துகளைப் பொறுத்த அளவில், மருத்துவர்களிடையே கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவர்கள் இரண்டு முக்கியக் கட்சிகளாக உள்ளனர். முதல் கட்சி, நிரூபிக்கப் படாத மருந்துகள் எதுவும் குழந்தைகளைச் சென்று அடையக் கூடாது என்றும், பல மருந்துகளை ஒரே சமயத்தில் கொடுப்பதன் மூலம், எது எந்தப் பயன் அளித்தது என்பதற்கான அறிவியல் சான்று இல்லாமல் போய் விடுவதால், அப்படிச் செய்வது அறிவியல் முறையாகாது என்ற தர்க்க ரீதியான வாதத்தை முன்வைக்கிறார்கள். இரண்டாவது கட்சி, இந்தக் குழந்தைகளுக்கு சீக்கிரம் சிகிச்சை முறை அளிப்பது ஒன்றே அவர்களது எதிர்கால நன்மைக்கு மிகவும் தேவையானது என்பதால், மருத்துவ ரீதியான பரிசோதனைகள் நடந்து வருகையில், பாதகமில்லாத (விட்டமின் போன்ற) மருந்துகள் ஒரு குழந்தைக்குப் பலனளிக்குமானால் அதைத் தடுப்பது, மெதுவாகக் கொடுப்பது போன்றவை தவறு என்ற ஓரளவுக்கு உணர்ச்சி பூர்வமான வாதத்தை முன்வைக்கிறார்கள். பெற்றோர்கள் இந்த இரு வகையான மருத்துவர்களிடமும் சென்று அவர்கள் குழந்தைக்கு எது பயன்படுகிறதோ அதை ரொம்பவும் பிரயத்தனப்பட்டு அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
குணநல மாற்ற சிகிச்சைகள்
(Behavior therapy என்பதை எளிமையாக இவ்வாறு மொழி பெயர்த்துள்ளேன், தயவு செய்து இதை விட நல்ல சொல்லிருந்தால் சொல்லவும்)
நான் கண்ட வரை மருந்துகள் மதியிறுக்கத்தை முழுமையாக குணப்படுத்த வல்லவை அல்ல. இந்த நோயிடமிருந்து குழந்தையை மீட்க ஏதாவது ஒரு குணநல மாற்ற சிகிச்சையும் தேவைப்படுகிறது. நான் 'ஏதாவது ஒன்று..' என்று சொல்வதிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் - மருந்துகளைப் போலவே இதிலும் உறுதியான ஒன்று கிடையாது. ஆயினும் இதில் தேர்வு செய்வது கொஞ்சம் எளிது.
குணநல மாற்ற முறைகளில் முக்கியமாக ஒரு முறை இருக்கிறது - அது ABA எனப்படும் Applied Behavior Therapy. ஸ்கின்னர் எனப்படும் விஞ்ஞானியால் கண்டறியப்பட்ட இந்த முறையை மதியிறுக்கக் குழந்தைகளுக்குப் பயன்படும் விதத்தில் 1960-களில் லோவாஸ் என்பவர் மாற்றினார். அதன் பின்னர் 1980-கள் முதல் தீவிரமாக உபயோகத்தில் உள்ளது. இதன் அடிப்படைக் கோட்பாடு ஒருவரின் குணநலன்கள் பழக்கத்தினால் மாற்ற இயலும் என்பதே. நாம் அனைவருமே இதை ஏதாவது ஒரு விதத்தில் அன்றாடம் பயன்படுத்துகிறோம். ஒரு செயலைச் செய்யும் போது அதற்குக் கிடைக்கும் எதிர்வினையைப் பொறுத்தே நாம் அந்த செயலை மீண்டும் செய்கிறோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றோம். இந்த அடிப்படை சித்தாந்தத்தை அறிவியல் பூர்வமாக, ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் குணநல குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றிற்கேற்ற முறையில் ஒரு சிகிச்சைத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தினால் வியத்தகு மாற்றங்கள் உண்டாக்கி இருக்கின்றது. ஏற்றுக்கொள்ளக் கூடிய குணநலன்களை வெளிப்படுத்துகையில் ஒரு சிறு பரிசளித்தும், இல்லையென்றால் பரிசளிக்காமலும் இருப்பதன் மூலம், ஒரு குழந்தைக்கு எது சரி, எது தவறு என்பது புரிகிறது. ஒரு சில முறைகளுக்குப் பின்னர், அந்தப் பரிசை ஒரு புகழ்ச்சி மொழியாக மாற்றி, பின்னர் அதையும் நீக்கி விடலாம்.
இந்த சிகிச்சை முறை மிகவும் அறிவியல் பூர்வமாக பயிலப்பட்டு வருகிறது. இது ஆரம்பிக்கும் முன்னர் சுமார் நானூறு கேள்விகளின் உதவியோடு ஒரு குழந்தை அளவெடுக்கப்படுகிறது. அதன்படி, ஒரு அடிப்படையை உருவாக்கி, அதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் சிகிச்சை முறை உருவாக்கப்படுகிறது.
இந்த முறை மீதிலும் சில விமர்சனங்கள் உள்ளன. இது பரீட்சைக்கு உருப்போட்டு எழுதுவது போன்றது, உண்மையான புரிதல் நிகழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது. குழந்தையை ஒரு ரோபாட் போல மாற்றுகிறது என்றும் சொல்கிறார்கள். ஆயினும், மிகப் பெரும்பான்மையான குழந்தைகளிடையில், இது ஒரு நல்ல, உண்மையான மாறுதலையே உண்டாக்கி இருக்கிறது என்பது பெற்றோர்கள் கூற்றுப்படித் தெரிகிறது. உதாரணமாக, எங்கள் பெண் இந்த முறையின் மூலம் தான் 'ஆம்', 'இல்லை' என்ற சொற்களின் உபயோகங்களைக் கற்றறிந்தாள். இப்போது சகஜமாகவும், பொருத்தமாகவும், பரவலாகவும் இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறாள். இது ஒரு சிறு உதாரணம்தான். ஆயினும், எங்களுக்கு நம்பிக்கை அளித்த உதாரணம்.
இன்னொரு புதிய, முக்கியமான முறை RDI (Relation development Intervention) எனப்படும் முறை. முன்னம் சொன்ன ABA பேச்சுத்திறன், விரும்பத்தகாத பழக்கங்களைக் கட்டுப்படுத்தல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை நேரடியாக குறி வைக்கிறது. RDI அதற்கு மாறாக, ஒரு குழந்தையின் சமூக உறவாடலைக் குறிவைத்து அதை சீர் செய்ய முயற்சிக்கிறது. இதன் சித்தாந்தம் என்னவென்றால், மதியிறுக்கத்தின் அடிப்படைக் கோளாறு மற்றவர்களோடு உறவாடுவதில் இருக்கும் சிக்கல், பிரச்னை ஆகியவை தான். அவற்றை நிவர்த்தி செய்தால் மற்ற விஷயங்கள் தானாக முன்னேற்றம் கண்டு விடும் என்பது. இது சமீபத்தில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஹூஸ்டனில் டாக்டர் கட்ஸ்டீன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பிரபலமடைந்து வருகிறது. சில விதங்களில் இது ABA முறைக்கு நேர் எதிரானது. உதாரணமாக, ABA நேரடியான உரையாடல்களை வலியுறுத்துவது, அதாவது, 'இதைச் செய்', 'இது என்ன', 'யார் இது' போன்ற கேள்விகளைக் கேட்டு சரியான விடைக்கும் செயலுக்கும் பழக்குவது. ஆனால், RDI முறையில் உணர்ச்சிகளின் மூலம் - சந்தோஷம், உற்சாகம், வருத்தம் போன்றவற்றின் மூலம் - குழந்தைகளுடன் உறவாடுவதை வலியுறுத்துகிறது. குழந்தைகள் உணர்ச்சிப் பரிமாற்றம் செய்து கொள்வதே அவர்களது சமூகப்பழக்கத்தின் ஆதாரத் தேவை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுவது. இதில் மௌனமும், மறைமுகமான உரையாடல்களும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, 'இது ஒரு விஷமக்காரக் குரங்கு' என்றோ 'வானம் எத்தனை நீலமாக இருக்கிறது' என்றோ சொல்லி விட்டு விட வேண்டும். குழந்தை தன்னிச்சையாக இந்த உரையாடலை நீட்டிக்கும் வண்ணம் பதில் சொல்ல வேண்டும். இதுவே உண்மையான, இயல்பான உரையாடல் என்கிறது RDI. இந்தப் பயிற்சி முறை கடினமானது, ஆனால் பலன்கள் நிறைவு தருபவை.
சில பெற்றோர்கள், ABA மூலம் பயிற்சி துவங்கி விட்டு, ஒரு நிலை வந்த பின்னர் RDI முறைக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.
இவை தவிர Sensory integration, Floor time போன்ற முறைகளும் உள்ளன.
சிகிச்சை முறைகள் என்று ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், ஒவ்வொரு குழந்தைக்கும் புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மூளை, மன, உடல் ரீதியாக ஏதோ தடைகள் உள்ளன. அவற்றை மட்டுப்படுத்தும் வகையில் மருந்துகளைக் கொடுத்தோமானாலும், இந்தக் குழந்தைகளுக்கு சாதாரண முறையில் கற்றுக் கொடுப்பது கடினம். ஆகையால், மருந்தினால் உடல் ரீதியான சிக்கல்களை மட்டுப்படுத்தி, பின்னர் குணநல மாற்ற முறைகளைக் கைகொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், குழந்தையின் வளர்ச்சி சற்று தாமதப்பட்டாலும், இந்த நோயின் தீவிரப் பிடியிலிருந்து வெளி வர முடியும். நம்பிக்கையூட்டும் செய்தி என்னவென்றால், பல குழந்தைகள் இது போன்ற முறைகளைப் பின்பற்றுவதன் மூலமே 'இந்தக் குழந்தைக்கும் நோய் இருந்ததா?' என்று வியக்கும் வண்ணம் முன்னேறி இருக்கிறார்கள்.
(அடுத்த பதிவில் நிறைவுறும்)