<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, August 07, 2005

மதியிறுக்கம் (Autism) - ஒரு எளிய அறிமுகம் - 1

மதியிறுக்கம் எனப்படும் Autism ஒரு சிக்கலான, தீவிரமான நோய். அறிவியல் ரீதியான, உறுதியான, சிகிச்சை முறை இல்லாத நோய். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, பத்தாயிரத்தில் ஒன்று என்ற அளவிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களில் நூற்றி அறுபத்தியாறில் ஒன்று என்ற அளவில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. இக்கட்டுரையைப் படிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தால், உங்களுக்கு நெருக்கத்திலேயே ஒரு குடும்பம் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதைக் கண்டறிவீர்கள் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை.

ஒரு குழந்தையிடம் இந்த நோய் கண்டறியப் படும் போது, அந்தக் குடும்பம் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. குழந்தையின் பெற்றோர்கள் அக்குழந்தையை மீட்டுக் கொண்டு வர தவம் போன்ற முனைப்புடன் பெருமுயற்சிகள் மேற்கொள்ளத் துவங்குகின்றனர். இம்முயற்சிகளில் சுற்றத்தார், மற்றும் நட்பு வட்டத்தின் ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் புரிந்து கொள்ளுதல் அவசியம் தேவையாகிறது. ஆகையால் இந்நோய் பற்றிய புரிந்துணர்வு சமூகத்தில் பரவலாகத் தேவைப்படுகிறது. அதற்கு உதவுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நோயின் தன்மை, அறிகுறிகள், காரணிகள், சிகிச்சை முறைகள், சமூகப் பங்களிப்பு என்று ஐந்து பகுதிகளாக இக்கட்டுரை உள்ளது. உங்களுக்கு அதிகம் நேரம் இல்லாவிடில், தன்மை, அறிகுறிகள் மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை மட்டுமேனும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு மருத்துவன் அல்லன். பல மருத்துவர்களிடம் பேசியும், பல புத்தகங்கள் மற்றும் தகவல் தளங்களைப் படித்தும், என் குழந்தையிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட விவரங்களின் சாரமே இக்கட்டுரை. மேலதிக விவரங்களும், விளக்கங்களும், கட்டுரையின் இறுதியில் உள்ள சுட்டிகளின் மூலம் பெறலாம்.

குறிப்பு 1: இக்கட்டுரையில் குழந்தைகளை மையமாகக் கொண்டே இந்த நோயை நான் விளக்க முற்பட்டாலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் (Autistic adults) உள்ளனர். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவோ, சரியானபடி சிகிச்சை பெறாத குழந்தைகளாகவோ இருந்திருப்பார்கள். மதியிறுக்கம் வளர்ந்த பிறகு திடீரென வரும் நோய் அல்ல. கண்டிப்பாக குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக கண்டறியப்படவல்லது.

குறிப்பு 2: Autism-த்திற்கு 'மதியிறுக்கம்' என்ற மொழிபெயர்ப்பை நான் டாக்டர் கார்த்திகேயன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரத்யேகமாக இக்குழந்தைகளுக்காக நடத்தி வரும் DOAST என்ற மருத்துவமனையில் முதன்முறையாகப் பார்த்தேன். 'தன்வய' நோய் என்று பிற தமிழ் சொற்கள் இருந்தாலும் இந்தச் சொல்லே சரியாக எனக்குப் படுவதால் அதை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன்.

நோயின் தன்மை

மதியிறுக்கம் ஒரு மன நல நோய். இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில சமயம் உடல் ரீதியான வளர்ச்சிக் கோளாறுகள் (co-occuring symptoms, அதாவது சேர்ந்தமைந்த அறிகுறிகள்) இருந்தாலும், அவை இந்த நோயின் முக்கியக் கூறுகள் அல்ல. தன்னையொத்த பிற குழந்தைகளிடம் பழகும் விதம், பேச்சுத்திறனின் வளர்ச்சி, புலன் சார்ந்த உணர்ச்சிகளின் ஒழுங்கு (sensory balance), மற்றும் விளையாடும் முறைகள் ஆகியவற்றில் பிற சாதாரண (Neurologically typical) குழந்தைகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதே இந்த நோயின் பிரதானமான தன்மையாகும்.

மதியிறுக்கம் ஒரு நிறப்பிரிகை வகையிலான நோய் (Spectrum disorder). அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு யார் அருகே வந்தாலும், தொட்டாலும், கொஞ்சமும் பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கும். சில குழந்தைகளுக்கோ தொடுவது, இறுக்க அணைப்பது போன்றவை மிகவும் பிடித்திருக்கும். சில குழந்தைகளுக்கு ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச வராது. சில குழந்தைகள் அர்த்தமே இல்லாவிடிலும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த நோய் கண்டறியப் பட்ட குழந்தைகள் எல்லாருக்குமே பிறரோடு பழகுவதில் ஏதாவது ஒரு வகையில் சிக்கல், அல்லது தயக்கம் இருக்கும். ஏதோ ஒரு விதத்தில், ஒரு தனி உலகத்தில் தாம் இருப்பது போன்ற பாவனை இருக்கும்.

சுருக்கமாக, சாதாரண குழந்தைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள், ஒரு மதியிறுக்கக் குழந்தையைப் பார்த்தால், சிறிது நேரத்தில் இந்தக் குழந்தைக்கு ஏதோ பிரச்னை என்று கண்டுபிடித்து விடுவார்கள். சில சமயம் இதற்கு ஓரிரு நிமிடங்களே ஆகும். சில சமயம் பத்து நிமிடங்கள் வரை ஆகும்.

பரவலாக மதியிறுக்கக் குழந்தைகளிடம் கீழ்க்காணும் குணாதிசியங்களைக் காணலாம்:

1. பிறரோடு பழகுவதைத் தவிர்த்தல். குறிப்பாக தன் வயதுடையவர்கள். தனிமையை விரும்புதல். கூட்டத்தைக் கண்டு மருளுதல், (சிலர் அழுது, பிடிவாதம் பிடிப்பார்கள்).

2. பேச்சுத் திறன் குறைவு. எழுதிக் கொடுத்ததை ஒப்பிக்கும் பாவனையில் பேசுதல்; திரும்பத் திரும்ப சொன்னதையே திருப்பிச் சொல்லுதல்; சொல்லப் படுவதை புரிந்து கொள்ளாமை அல்லது புறக்கணித்தல்.

3. அசாதாரணமான உணர்ச்சித் தேவைகள் - தொடுதலை அதிகம் விரும்புதல் அல்லது விரும்பாமை, நிலை தடுமாறும் இடங்களில் (விளிம்புகள், ஒரு உதாரணம்) இருக்க விரும்புதல். அதிக வலி பொறுத்துக் கொள்ளும் திறன்,

4. வினோதமான பழக்கங்கள் - எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்தல். அடுக்கி வைத்தது கலைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ள இயலாமை. வேறு சிந்தையின்றி ஒன்றையே மறுபடி மறுபடி செய்தல். மாறும் எண்களைப் பார்த்துப் பரவசப் படுதல்.

இவையெல்லாம் தவிரவும் சில குணங்கள் உள்ளன. அவையும் சரி, மேற்கூறியவையும் சரி, எல்லாமே ஒரு குழந்தையிடம் இடம் பெறாது. இடம் பெறுபவையும் ஒரே அளவில் இருக்காது.

நோயின் தன்மை பற்றி கடைசியாக ஒரு விஷயம். Autistic Savant எனப்படும் கூர்மையான அறிவும், குறிப்பிட்ட சில (சங்கீதம், கணிதம் போன்ற) திறமைகளும் படைத்தவர்கள் குறைவு. மதியிறுக்கம் என்றாலே, ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. பெரும்பான்மையானவர்கள் சாதாரண திறன் படைத்தவர்கள்தாம்.

(தொடரும்)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

12 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

அன்பு நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி

மதியிருக்கம் பற்றிய தகவல் மிக நிதானமாக தமிழில் கூறி இருப்பதற்கு பாராட்டுகள்.
நிச்சயம் இந்த மருத்துவ கட்டுரை மிக எளிமையாக கூறப்பட்டு இருப்பது பாராட்டதக்கது.
தொடர்ந்து அனைத்து பதிவையும் படிக்க காத்து இருக்கிறேன்.

இந்த பாதிப்பு உண்டான குழந்தைகள் அல்லது பெரியவர்கள் வேறு எந்தவிதமான புலமை அல்லது ஆற்றல் உள்ளதா என்பதை பற்றியும் கூறுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

August 08, 2005 3:44 PM  
Blogger Srikanth Meenakshi said...

சிவா, நன்றி.

இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளில் சிலருக்கு குறிப்பாக நினைவாற்றல், அல்லது பகுத்தாராய்ந்து செயல்படும் தன்மை (analytical skills) அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இத்தகையவர்கள் பெரும்பாலும் Asperger's syndrome என்று வகைப்படுத்தப் படுகிறார்கள்.

August 08, 2005 3:49 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

ஸ்ரீகாந்த், எளிமையாக, நன்றாக எழுதியிருக்கிறீர்கள், ஒரு சில இடங்களில் வார்த்தைகள் பொருத்தமானவையாகத் தோன்றவில்லையென்றாலும், சரியான வார்த்தைகளை நானும் அறியேன். மதியிறுக்கம் மிகப் பொருத்தமாகப் படுகிறது.

மிகத்தேவையான பதிவு. 7 வருடங்களுக்கு முன்பு நெருங்கிய நண்பர் ஒருவருடைய குழந்தைக்கு வந்த பிறகே இந்த நோயைப் பற்றி நான் சிறிதளவேனும் அறிய வந்தேன். பொது இடங்களில் நாம் பார்க்கும் மதியிறுக்கத்தினால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நடத்தையைப் புரிந்து கொள்ளவாவது உதவும். தொடர்ந்து எழுதுங்கள்.

இரண்டு கேள்விகள், நீங்களே பின்னால் விளக்கமாக எழுத எண்ணியிருக்கலாம்.

"மதியிறுக்கம் ஒரு மன நல நோய்" என்று கூறியிருக்கிறீர்கள், ஆனால் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பினால் உருவாகும் நோய் என்று படித்திருக்கிறேன். எனவே மற்ற மன நல நோய்கள் போல் அல்ல என்று நினைக்கிறேன். விளக்குங்கள்.

அடுத்து - மூளை வளர்ச்சிப் பாதிப்புக்கும், அணுசக்தி கதிரியக்கத்தினால் ஏற்படும் செல் சிதைவுக்கும் எங்கேனும் தொடர்புப் படுத்தப் பட்டிருக்கிறதா?

நன்றி - சொ. சங்கரபாண்டி

August 09, 2005 2:04 AM  
Blogger Jayaprakash Sampath said...

விவரமான கட்டுரை.. நன்றி

August 09, 2005 2:07 AM  
Blogger Srikanth Meenakshi said...

சங்கர், நன்றி.

1. புரியும்படி எழுதுவதற்காக சில கூரிய கலைச் சொற்களைத் தவிர்த்திருக்கிறேன். பொருந்தாச் சொற்களை தயவு செய்து குறிப்பிடுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

2. மனம் என்பதை Mind என்ற அளவில், ஆரோக்கியமான மனம் இல்லாததால் அறியப்படும் நோய் என்பதால் மனநல நோய் என்று சொல்லி இருக்கிறேன். கட்டுரையின் பிற பகுதிகளில் மூளை சம்பந்தமாக சில விஷயங்கள் உண்டு.

3. அணுசக்தி கதிரியக்கத் தொடர்பு பற்றி மதியிறுக்கத்துடன் இணைத்து நான் எதுவும் இதுவரைப் படிக்கவில்லை.

August 09, 2005 9:07 AM  
Blogger Ramya Nageswaran said...

ஸ்ரீகாந்த், மன வருத்தம் தரும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள மன வலிமை வேண்டும். நீங்கள் செய்வது மிகவும் பாராட்டுக்குறியது. புரிதலுக்கும், ஏற்புத்திறன் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். நன்றி.

August 09, 2005 9:23 AM  
Blogger ஜென்ராம் said...

நேரடியாக பிறர் கண்களை சந்திக்கத் தயங்குவார்கள் என்று சொல்கிறார்கள். இது பொதுவான தன்மையா என்று தெரியவில்லை.
//மதியிறுக்கம் என்றாலே, ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. பெரும்பான்மையானவர்கள் சாதாரண திறன் படைத்தவர்கள்தாம்.// ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிய ஒருவரை இது தொடர்பான டி.வி. நிகழ்ச்சியில் பார்த்தேன். உங்கள் வரிகள் அது பொது விதி அல்ல என்பதைப் புரிய வைக்கிறது.

//நான் ஒரு மருத்துவன் அல்லன். பல மருத்துவர்களிடம் பேசியும், பல புத்தகங்கள் மற்றும் தகவல் தளங்களைப் படித்தும், என் குழந்தையிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட விவரங்களின் சாரமே இக்கட்டுரை// மனசில் ஏற்பட்ட வலியை மறைக்க விரும்பவில்லை.
Academic Interest இல் விவாதிப்பது கூட கஷ்டமாகத்தான் இருக்கிறது.

August 09, 2005 1:33 PM  
Blogger சன்னாசி said...

The Curious Incident of the Dog in the Night-Time

சந்தர்ப்பம் வாய்ப்பின் படித்துப் பார்க்கவும்.

August 09, 2005 2:25 PM  
Blogger Srikanth Meenakshi said...

ராம்கி, கண்கள் நேரடியாக பாராதிருத்தல் ஒரு பரவலான அறிகுறி, ஆனால் கண்டிப்பாக இருக்கும் என்று கிடையாது.

மாண்ட்ரீசர், புத்தகம் படித்திருக்கிறேன். அழுதிருக்கிறேன்.

August 10, 2005 11:28 AM  
Blogger ரங்கா - Ranga said...

ஸ்ரீகாந்த், உங்கள் பதிப்பிற்கு மிகவும் நன்றி. என் அனுபவத்தில் இது மக்களால், முக்கியமாக இந்தியர்களால் புரிந்து கொள்ளப்படாத அல்லது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் விஷயம். "ஜடம், லூசு, அழுத்தம் ஜாஸ்தி, பிடிவாதம்" என்றெல்லாம் வைபவர்கள் அதிகம். நான் அறிந்த வரையில், எவ்வளவு சீக்கிரம் குழந்தைகளிடம் இதைக் கண்டு கொள்கிறோமோ, அவ்வளவு அதிகம் வாய்ப்புகள் உண்டு - இதைக் கட்டுப்படுத்த. பெரும்பான்மையான குழந்தைகளில் இவை பயிற்சியின் மூலம் அவர்கள் சாதாரணமான உதவியற்ற (unassisted) வாழ்க்கை நடத்த முடியும்.

உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

August 11, 2005 10:21 AM  
Blogger -/பெயரிலி. said...

வெகுநாட்களுக்கு முன்னாலே வாசித்தது

Einstein and Newton 'had autism'

தமிழ்ப்பாம்பு,
நீங்கள் கூறும் புதினத்தினை பிபிஸியிலே ஒரு வாரம் வாசிக்கக்கேட்டிருந்தேன். ஒரு புறம் நகைச்சுவையாகப் போனாலுங்கூட, கதையிலே ஒரு விதமான சோகம் பின்னப்பட்டிருந்தது

August 11, 2005 1:57 PM  
Blogger மணியன் said...

இந்திப்படம் "My name is Khan" இல் கதாநாயகனுக்கு இந்த நோய் இருப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. அதனையொட்டி எழுந்த தேடலில் உங்களின் இந்தப்பதிவை படிக்க கிட்டியது. மிகத் தெளிவாக எளிய தமிழில் எழுதியுள்ளீர்கள். மற்ற இடுகைகளையும் படிக்கிறேன்.

பி.கு:இந்தப் படத்தைப் பார்த்தீர்களா ? நோயைப் பற்றிய விவரிப்பு சரியாக உள்ளதா ?

March 17, 2010 1:26 AM  

Post a Comment

<< Home