<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, August 10, 2005

மதியிறுக்கம் (Autism) - ஒரு எளிய அறிமுகம் - 3

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

நோயின் காரணிகள்

இந்த நோயின் ஆதாரக் காரணி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த 2005-ஆம் ஆண்டில் இது தான் உண்மை. ஆயினும், இது எதனால் வருகிறது என்பதற்கும், சமீபத்தில் இந்த நோயின் பரவல் அதிகமாகி இருப்பதற்கு என்ன காரணம் என்பதற்கும் பல துணிபுகள் (theories) உள்ளன. அவை அனைத்தையும் பட்டியலிட்டு முடிப்பதற்குள் புதிதாக இன்னொன்று கிளம்பி விடும். ஆகையால் இருப்பவற்றுள் பிரபலமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்:

நச்சு உலோகங்களின் விளைவா? - இது அமெரிக்காவில் தற்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் விஷயம். இதன்படி, மதியிறுக்கம் என்பது நச்சு உலோகங்கள், குறிப்பாக பாதரசம் (mercury), இக்குழந்தைகளின் உடல்களில் அதிக அளவு கலந்திருப்பது தான் இந்த நோயின் ஆதாரக் காரணம். இந்த உலோகங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிகளில் உள்ள மருந்துகளிலிருந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் தயாரிக்கும் நிறுவனமான மெர்க் 1980களின் இறுதியில் ஒரு பிரச்னையைச் சந்தித்தது. அது தயாரிக்கும் தடுப்பூசி மருந்துகளை அடைக்கும் குடுவைகள் ஒரு முறையே பயன்படுத்தக் கூடியவையாக இருந்தன. அதாவது, ஒரு குடுவையில் ஒரு குழந்தைக்கு ஒரு முறை கொடுக்கக் கூடிய மருந்து மட்டுமே இருந்தது. இதை மாற்றி ஒரு குடுவையில் பல குழந்தைகளுக்குத் தேவையான மருந்து அளவினை வைக்க முடிந்தால், செலவும், விற்பனை விலையும் குறையும். இதனால் மேலும் பல வளரும் நாடுகளில் தடுப்பூசிகளை விநியோகிக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதற்கு தடுப்பூசி மருந்துகளை அதிக அளவுக்கு பதப்படுத்த வேண்டும் - அதாவது, ஒரு முறை குடுவைக்குள் ஊசி நுழைந்த பின்னும், மருந்து கலப்படம் ஆகாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மருந்தினை மற்றொரு முறை வேறு ஊசி கொண்டு பத்திரமாக எடுத்து உபயோகிக்கலாம். இப்படிப் பதப்படுத்துவதற்கு 'தைமரோசால்' (Thimerosal) என்ற இரசாயனத்தை என்று கண்டுபிடித்தனர். 1991-ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கியது (உலக வங்கி, மற்றும் உலக சுகாதார அமைப்பும் இதற்கு ஆதரவளித்தன).

பிரச்னை என்னவென்றால், இந்த பதப்படுத்தும் இரசாயனத்தில் பாதரசம் மிக அதிகம் உள்ளது. ஒரு வளர்ந்த மனிதன் தாங்கிக் கொள்ளும் அளவில் பல மடங்கு ஒரு குழந்தைக்கு பல முறை வழங்கப்படுவதால், சில குழந்தைகளுக்கு இது மூளையை பாதித்து, மதியிறுக்கம் போன்ற நோய்களால் தாக்கப்படுகின்றனர் என்கின்றனர் இதன் எதிர்கட்சியினர். ஒருவர் எத்தனை பாதரசத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் மீதெய்ல் (Methyl) வகையான பாதரசத்தை ஆதாரமாகக் கொண்டவை என்று சொல்லி, அதை விட வீரியம் மிகக் குறைந்த ஈதெய்ல் (Ethyl) வகையான பாதரசமே தைமரோசாலில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகின்றனர் ஆளுங் கட்சியினர். அப்படியானால் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு குழந்தைகள் இவ்வகையான தடுப்பூசிகளைப் பெற்றனர், அவர்களில் எவ்வளவு பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர் என்ற புள்ளி விவரங்களை வெளியிட வேண்டியது தானே என்கின்றனர் எதிர்கட்சியினர். அந்த விவரங்கள் எங்களிடம் இல்லை என்கின்றனர் ஆளுங்கட்சியினர். 'பொய்!', 'உண்மை!', 'பொய்!', 'உண்மை!' இத்யாதி இத்யாதி.

இதற்கிடையில் பல மருத்துவர்கள், விஞ்ஞானிகள், 'நாங்கள் நன்கு பரிசோதித்துப் பார்த்து விட்டோம், இதற்கும் அதற்கும் தொடர்பு இல்லை, தடுப்பூசிகளைக் கண்டு பயப்படாதீர்கள்' என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஓசைப்படாமல், மருந்து நிறுவனங்களும் தைமரோசால் கலப்பதை (அமெரிக்காவிலேனும்) நிறுத்தி விட்டார்கள்.

'சுட்டிகள்' பகுதியில் இதைப்பற்றிய இருதரப்பு வாதங்களுக்கும் சுட்டிகள் உள்ளன. படித்து விட்டு என்னைப் போலவே தெளிவின்றி இருக்க உங்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.

ஒவ்வாமையினால், அசூயையினால் வரும் பிரச்னையா? - இந்தத் துணிபிற்கு 'ஓட்டை வயிறுத் துணிபு' (Leaky gut syndrome) என்றும் ஒரு பெயருண்டு. இதன்படி, இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில உணவுகளிடம் ஒவ்வாமை (allergy) அல்லது அசூயை (intolerance) பிரச்னைகள் இருப்பதால், உணவுப் பொருட்களின் சத்துக்கள் உடம்பிற்குள் சரியாக உள்வாங்கப் படாமல் போகின்றன. அவை இரத்த ஓட்டத்தில் கலந்து, நச்சுப்பொருள் ரூபத்தில் மூளையைச் சென்றடைகின்றன. அங்கே அவை ஒரு போதை மருந்து போல செயல்பட்டு மூளையின் செயல் திறனைக் குறைக்கின்றன. நாளடைவில், இந்த மூளை பழுதடைகின்றது.

இத்தனை விபரீதமான விளக்கம் கொண்ட இந்தத் துணிபிற்கும் அறிவியல் ஆதாரமான விளக்கங்கள் போதுமான அளவு இல்லை. ஆயினும், பல குழந்தைகள், ஒவ்வாத உணவுகள் என்று கருதப்படும் சில உணவுகளை ஒதுக்கிய பிறகு முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த வகையில் ஒவ்வாத உணவுகளாகக் கருதப்படுபவை பொதுவாக பால்சத்து (Caseine) உள்ள உணவுகளும், மாவுச்சத்து (Gluten) உள்ள உணவுகளும். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளையும், ரொட்டி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளையும் ஒதுக்கி வைத்து (Gluten-free, Casein-free - GFCF) ஒரு உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற பல துணிபுகளில் ஆதார கேள்வி என்னவென்றால் - எது காரணம், எது விளைவு என்பது தான். அதாவது, ஏதோ ஒன்று மதியிறுக்கத்தை தோற்றுவிக்க, அந்த நோயின் விளைவாக இது போன்ற ஒவ்வாமைகள் வருகின்றனவா, அல்லது இந்த ஒவ்வாமைகள் காரணமாக நோய் தோன்றுகின்றதா என்ற குழப்பம். இதற்கு பதிலில்லை.

மரபணுக் கோளாறா? - வேறு ஒன்றும் சரிப்படவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது - மரபணுக் கோளாறு (Genetic defect) என்ற மந்திரக் காரணி. ஜலதோஷம் வந்தால் கூட மரபணுப் பிரச்னை என்று ஜல்லியடிப்பது இன்றைய வழக்கமாக இருக்கையில், அதிகம் புரியாத மதியிறுக்கம் போன்ற நோயை விட்டு வைப்பானேன்? இந்த நோயை தோற்றுவிக்கும் குறிப்பிட்ட மரபணுவை தனிமைப்படுத்தி ஆராய்கிறோம் என்று சொல்லி ஒரு கையில் மைக்ராஸ்கோப்பும், மறு கையில் மானியக் கோரிக்கையுமாக சில விஞ்ஞானிகளின் வரிசையாக நிற்கிறார்கள். வாழ்த்துக்கள்.

யாருக்கும் உறுதியாகத் தெரியாது என்பதால், 'எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்...' என்று துவங்கி யார் வேண்டுமானாலும் புதிதாக ஒரு காரணம் சொல்லலாம். அந்த தைரியத்தில் சொல்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சமீப காலத்தில் இந்த நோய் கண்டிருக்கும் வளர்ச்சிக்கு, மருத்துவர்கள் அதிக முனைப்புடன் 'நோய் நாடி, நோய் முதல் நாடி' வேலை செய்கிறார்கள் என்பது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. சமீப காலத்தில் சுற்றுச் சூழலில் ஏதொ ஒரு குறிப்பிட்ட மாறுதல் ஏற்பட்டிருக்கிறது, பல குழந்தைகள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், சில குழந்தைகளிடம் அது ஒரு மோசமான பக்க விளைவை ஏற்படுத்துகிறது. அந்த கெட்ட மாறுதல் என்ன என்பது மனிதனுக்குத் தான் வெளிச்சம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

8 Comments:

Blogger -/பெயரிலி. said...

ஸ்ரீகாந்த்,
நல்ல தொடர். புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளிலே சிலதிடையே இக்குணங்குறிகளைக் கண்டிருக்கின்றேன். மருத்துவரீதியாக வைத்தியர்கள் சொன்னபின்னாலுங்கூட, அதை மறுத்து, வைத்தியர்களிடமும் பாடசாலைநிர்வாகங்களுடனும் சண்டை பிடித்தவர்களையும் அறிவேன். (இதுகுறித்து பத்மாவும் ஒருமுறை எழுதியிருந்தாரென நினைவு)

பெற்றோர்களின் இத்தகு ஏற்றுக்கொள்ளமறுக்கும் தன்மை புரிந்துகொள்ளக்கூடியதாகவிருப்பினுங்கூட, ஏற்கனவே வருந்தும் குழந்தைகளுக்கு அத்தன்மை செய்யும் கெடுதல் இன்னும் அதிகமாகவிருக்கின்றது. நண்பர்கள் பல சந்தர்ப்பங்களிலே அந்நிலையைப் பெற்றோர்களுக்குச் சுட்டிக்காட்டவும் முடியாதிருக்கின்றது.

August 10, 2005 1:59 PM  
Blogger கிவியன் said...

ஸ்ரீகாந்த்,

மேற்கத்திய நாடுகளில் இந்நோய் பற்றிய புரிதல் சற்று பரவாயில்லை. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பலருக்கு Autism என்றாலே என்னவென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட "சுனாமி" என்றால் என்ன என்பதை அது வந்த பின்புதான் பலருக்கு அப்படி ஒரு வார்த்தையிருப்பதே தெரிய வந்தது.
பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது இதனால்தான்.

I am Sam என்ற படம் வந்தது. சற்றே மிகையான பாத்திரப்படைப்பென்றாலும், Autism உள்ள ஒருவரை சமுகம் எப்படி பார்க்கிறது என்ற ஒரு கோணத்தை காட்டினர். இதையே ஹிந்தியில் "மே ஐசாயி ஹும்" என்று அஜய் தேவ்கன்னை வைத்து சொதப்பியிருந்தார்கள். மக்களூக்கு இது பற்றின குறைந்த பட்ச விழிப்புனர்வை பல வழிகளில் செய்யத்தான் வேண்டும்.
வலைப்பதிவு அதில் ஒன்று.

இந்த குறைபாடு பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது என்று எங்கோ புள்ளிவிவரம் படித்த நினைவு. இது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

August 10, 2005 5:42 PM  
Blogger Srikanth Meenakshi said...

சுரேஷ்,

உண்மைதான். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு நான்கு மடங்கு அதிகம் பாதிப்பு.

இது பற்றிய படங்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஒரு விதி விலக்கு - Black - நல்ல படம் என்றாலும், நுணுக்கமான சில விஷயங்களைச் சொதப்பியது கூட எனக்கு எரிச்சலாக இருந்தது.

August 10, 2005 8:52 PM  
Blogger arulselvan said...

ஸ்ரீகாந்த்,
நண்பரொருவர் தம் பெண் குழந்தைக்கு இத்தகைய அறிகுறிகளைக்கண்டு, தம் தொழிலில் இயல்பையே மாற்றி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். குடும்பம் முழுவதும் தன்னை இவ்வாறு மாற்றி அமைத்துக் கொண்டால்தான் இத்தகைய குழந்தைகளுக்கு அவர்கள் வழியில் இயல்பான வாழ்கை அளிக்க முடிகிறது. கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிப்போன இன்றைய நிலையில் வேலைக்குச் செல்லும் இளம் கணவன் மனைவியின் வாழ்க்கையே தலைகீழாக்கும் சந்தர்பங்கள் இவை. இவற்றை அத்தகைய தம்பதியினர் எதிர்கொள்ள உறவினர் தவிர்த்த வேறு விதமான சமுதாய நிறுவனங்களும் இந்தியா போன்ற நாடுகளில் அரிது. இத்தகைய குழந்தைகள் சில விதங்களில் நிகரற்று சாதனை செய்யக்கூடிய திறன் வாய்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எல்லோரும் சாதனையாளராகவேண்டும் என்று வாழ்கையில் 'வெற்றி'களையே கொண்டாடும் மனோபாவத்தில் இதை சொல்லவில்லை. சிலசமயம் இழந்ததற்கு ஈடும் உண்டு என்றே காட்ட விரும்பினேன். நல்ல தொடராக இதை எழுதி இருக்கிறீர்கள்.
அருள்.

August 11, 2005 1:37 AM  
Blogger vin said...

இது தொடர்பாக திரு சஞ்சீத் அவர்கள் எழுதியுள்ள ஒர் அற்புதமான, நெகிழ்ச்சியான அனைவரும் படிக்க வேண்டிய சிறுகதை இங்கே:
http://throughmylookingglasses.blogspot.com/2005/08/blog-post.html

-Vinodh

August 11, 2005 2:31 AM  
Blogger Srikanth Meenakshi said...

அருள், ரொம்ப உண்மை. கிட்டத்தட்ட அது எங்கள் குடும்பம் போலவே உள்ளது.

வினோத், சுட்டிக்கு நன்றி. படிப்பதை பாதியில் நிறுத்தி விட்டேன்.

August 11, 2005 8:37 AM  
Blogger ரங்கா - Ranga said...

ஸ்ரீகாந்த்,

நீங்கள் செய்யும் இப்பணி பாராட்டுக்குறியது. என் அனுபவத்தில் இந்தக் குழந்தைகள் அதிகம் வேண்டுவது ஆதரவு; பயிற்சி. நடைமுறையில் இதற்கு நிறைய தடங்கல்கள், சங்கடங்கள் இருக்கின்றன.

முதலில் "மறுப்பு". நீங்கள் சொன்னது போல நிறைய பெற்றோர் இதை நம்ப மறுக்கிறார்கள் - வீட்டுப் பெரியவர்கள் (மாமனார், மாமியார், அப்பா, அம்மா மற்றும் பெரிசுகள்) அதிகம் தெரிந்து கொள்ளாமல், 'எங்க காலத்திலே அடம் பிடிச்சா ஒரு அடி கிடைக்கும்; இப்போதெல்லாம் செல்லம் ஜாஸ்தியா இருக்கு! என்னமோ உலகத்தில் இல்லாத குழந்தை' என்றெல்லாம் விமர்சனம் செய்வது அதிகம்.

பயிற்சிக்காக மற்ற நண்பர்கள் வீட்டு குழந்தைகளோடு விளையாட விடுவதும் சங்கடமே! இங்கிதமற்ற கேள்விகள் பெற்றோர்களின் மனதை புண்படுத்துவது சகஜம். நாம் வளரும் போது இயல்பாக நடந்த செயல்களை குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல. உங்கள் பதிப்பு இது போன்று சங்கடப்படும் குடும்பங்களுக்கு உதவுவது மிகவும் மகிழ்சி.

August 11, 2005 10:49 AM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நல்ல பதிவு

August 12, 2005 4:04 PM  

Post a Comment

<< Home