<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, August 11, 2005

மதியிறுக்கம் (Autism) - ஒரு எளிய அறிமுகம் - 5 (நிறைவு)

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி

'திண்ணை'யில் முழுக் கட்டுரையும்

சமுதாயத்தின் பங்கு

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, இந்த நோயின் தீவிரமும், தன்மையும், இதை ஒரு சமூக அளவில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை ஆக்குகிறது. இது நமக்கு மிகவும் நெருக்கமான ஒரு குடும்பத்தை பாதித்திருக்கலாம், அல்லது ஒரு தூரத்து உறவினரோ, நண்பரோ பாதிக்கப்பட்டிருக்கலாம், எப்படி ஆயினும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நம்மால் உதவ முடியும்.

பல சமயங்களில் பாதிக்கப்பட்ட பெற்றோர் விரும்புவது, மற்றவர்கள் அவர்களது நிலையயும், படும் துன்பங்களையும் புரிந்து கொண்டு பேசிப் பழக வேண்டும் என்பதே. இந்தக் கட்டுரையை படித்திருக்கும் நீங்கள் கண்டிப்பாக அப்படிச் செய்ய இயலும். இந்த நோயினால் பாதிக்கப்படும் குடும்பங்கள் பல சமயங்களில் கடும் மன அழுத்தத்தை சந்திக்கின்றன. இந்த சமயங்களில் நண்பர்களது ஆதரவும், புரிந்துணர்வும் மிக அவசியம் தேவைப்படுகிறது.

குறிப்பாக, நண்பர்களும் உறவினர்களும் செய்யக் கூடிய சில விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

1. குழந்தையின் நோயினையும், பெற்றோர்களின் கவலையையும் அங்கீகரியுங்கள். நம்பிக்கை வார்த்தைகள் சொல்லும் போது கூட, 'குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்கிறீர்கள், கண்டிப்பாக சரியாகி விடும்' என்று சொல்வதற்கும், 'குழந்தை நன்றாகத் தான் இருக்கிறான், அநாவசியமாகக் கவலைப்படுகிறீர்கள்' என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பெற்றோர்களுக்கு முன்னதைக் கேட்பதற்கு ஆறுதலாகவும், பின்னதைக் கேட்பதற்கு வேதனையாகவும் இருக்கும்.

2. இந்தக் குடும்பங்கள் பல சமயம் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள். இது மேலும் மன அழுத்தத்திற்கும் தனிமைப்படுதலுக்கும் அக்குடும்பத்தை ஆளாக்குகிறது. தயவு செய்து முடிந்த வரை உங்கள் வீட்டு நன்னிகழ்ச்சிகளில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தமது குழந்தைகளைப் பராமரிப்பதில் வல்லவர்கள் இவர்கள். எந்த இடைஞ்சலும் இல்லாது கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.

3. உங்கள் குழந்தைகளுக்கு இந்த நோயைப் பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள். உங்களை விடவும் அதிகமாக இத்தகைய குழந்தைகளை அவர்கள் சந்திப்பார்கள் (பள்ளியில், நண்பர்கள் வீட்டில் என). அவர்களிடம் அதிக புரிந்துணர்வுடன் பழக அது உதவும்.

4. மதியிறுக்கம் பற்றி புதிய செய்திகள், கட்டுரைகள், தகவல்கள் வருகின்றனவா என்று முடிந்த வரை கவனமாக இருங்கள். ஏதாவது தென்பட்டால், உங்களுக்குத் தெரிந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் அது குறித்துத் தெரியப்படுத்துங்கள். நமக்காகப் நண்பர்கள் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்ற எண்ணம் மிகவும் ஆறுதலளிப்பதாகும்.

5. நீங்கள் அடிக்கடிச் செல்லும் குடும்பமென்றால், அந்தக் குழந்தை பற்றி சில விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, அந்தக் குழந்தையின் நோயின் தன்மை, அந்தக் குழந்தைக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள், பழகும் விதம் ஆகியன பற்றிக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நோய் முக்கியமாக பிறரோடு பழகுவதை சிக்கலாக்குகிறது. பழக்கத்தினால் அதைக் கொண்டு வருவதே பெரும் பிரயத்தனம். நீங்கள் அந்தக் குழந்தையின் வீட்டுக்குச் செல்லும் போது, முடிந்த வரை அந்தக் குழந்தையோடு பழக முயலுங்கள். முதலில் புறக்கணித்தாலும், மெல்ல மெல்ல, அந்தக் குழந்தை உங்களை ஏற்றுக் கொண்டு பழகும். அம்மா, அப்பா தவிர இன்னொருவரிடம் இத்தகைய குழந்தைகள் பழகுவது ஒரு முக்கியமான வளர்ச்சி மைல்கல்லாகும். உங்களால் அது கைகூடலாம்.

இதற்கு முக்கியமாக, அந்தக் குழந்தையின் பழகும் எல்லைகளைக் கண்டறியுங்கள் (பெற்றோர்களிடமிருந்து). பின்னர், அந்த எல்லையின் விளிம்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்ல முயல வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு அருகில் மற்றவர் உட்காருவது பிடிக்காது என்றால், ஒரு பக்கத்து இருக்கையில் அமர்ந்து, சில நாட்கள் கழித்து இன்னம் கொஞ்சம் நெருக்கமாகி, பின்னர், மெல்ல அருகில் சென்று அமர முயல வேண்டும். வேறு சில குழந்தைகளுக்கு தமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்பவர்களிடம் கொஞ்சம் நன்றாகப் பழக முடியும். உதாரணமாக, தட்டாமாலை சுற்றுவது பல மதியிறுக்கக் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படியெல்லாம் செய்வதன் மூலம், அம்மா, அப்பா தவிர்த்த வெளியுலகத்தின் மேல் ஒரு குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படுவதில் நீங்கள் உதவுகிறீர்கள் என்பது தான்.

6. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர், ஒரு குறிப்பிட்ட உணவு முறையில் உள்ளனர். பால் மற்றும் கோதுமை உணவுகளைத் தவிர்க்கும் இந்த உணவு முறையில் பொதுவாகக் குழந்தைகளுக்குப் பிடித்த பல விஷயங்கள் கிடையாது. உதாரணம் - சாக்லேட், பிஸ்கெட் ஆகியவை. ஆதலால், இந்தக் குடும்பங்களுக்கு நீங்கள் செல்லும் போது ஒரு வார்த்தை என்ன வாங்கிச் செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு விடுங்கள். அதற்கு அவகாசம் இல்லாவிடில், பத்திரமாக பழவகைகளை வாங்கிச் செல்லுதல் உத்தமம்.

7. அதே போல் விளையாட்டுப் பொருட்களும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில விளையாட்டுப் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஏனெனில், அந்தக் குழந்தைகள் சில வகையான விளையாட்டுப் பொருட்களோடு தீவிரமான (Obsessive) ஈடுபாடு வளர்த்துக் கொள்ளக் கூடியவர்கள். ஆதலால், இதிலும் பெற்றோர்களை ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது. மேலும், சில வகையான குணநல பழக்க சிகிச்சை முறைகளுக்கு, சில விளையாட்டுப் பொருட்கள் தேவைப்படும். அவற்றில் ஒன்றை வாங்கிக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக, குழந்தைகளுக்குப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்கு சமுதாயமும் ஆதரவாக இருந்தால், இந்த நோயையும், அது உண்டாக்கும் பக்க விளைவுகளையும் நாம் தேவையில்லாத சிரமங்கள் இன்றி எதிர்கொள்ள முடியும்.

முடிவு

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும், அந்த நம்பிக்கை பொய் நம்பிக்கையல்ல என்பதற்கான சான்றுகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமும் அறிவியலும் இந்தக் குழந்தைகளின் தேவைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைய வேண்டும். இது பிரார்த்தனை. அது வரையில் சமுதாயத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும், ஆசிரியர்களும், பள்ளிகளும் இந்தக் குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் அரவணைத்து ஆதரிக்க வேண்டும். இது விண்ணப்பம்.

இந்தப் பதிவுகளைப் பொறுமையோடு படித்தவர்களுக்கும், பின்னுட்டங்கள் மூலம் ஊக்கமளித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

சுட்டிகள்

http://www.vaporia.com/autism/autism.faq.html - மதியிறுக்கம் குறித்த முக்கியக் கேள்விகளும் விடைகளும்.
http://www.autisminfo.com - ஆழமான கட்டுரைகளும், புதிய கண்டுபிடிப்புகளும்
http://www.tacanow.com - நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் சிகிச்சை முறைகள் பற்றி பேசும் தளம்
http://del.icio.us/tag/autism - புதிய தளங்கள், ஏராளமான சுட்டிகள்
http://www.behavior.org - ABA பற்றிய விவரமான தளம்
http://www.rdiconnect.com - RDI பற்றிய விவரமான தளம்
http://www.autismwebsite.com/ari/treatment/form34q.htm - எந்த மருந்துகள் எவ்வளவு குழந்தைகளுகு பயனளித்தன என்பது பற்றிய புள்ளி விவரம்
http://kulanthaikal.blogspot.com/2004/11/blog-post_24.html - DOAST பற்றி குமுதம் கட்டுரை.
http://www.commondreams.org/views05/0616-31.htm - தைமரோசால் தான் வில்லன்
http://slate.com/id/2123647/ - தைமரோசாலில் எந்த பிரச்னையும் இல்லை

(நிறைவு)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger பத்மா அர்விந்த் said...

அருமையான பதிவு.

August 12, 2005 9:51 AM  
Blogger ரங்கா - Ranga said...

எளிமையாகவும் அழுத்தமாகவும் எழுதியிருக்கிறீர்கள் - நன்றி. முக்கியமாக சுட்டி கொடுத்ததற்கு நன்றி.

August 12, 2005 2:06 PM  
Blogger கிவியன் said...

சமுதாயத்தின் பங்கு மிக துள்ளியமாக எழுதியுள்ளீர்கள். ஐந்து பதிவுகளூம் விகடன்/குமுதம் போன்ற பத்திரிக்கையில் வந்தால் இது போய் சேரும் இடம் அதிகமாக இருக்கும் என்பது எனது தழ்மையான கருத்து.

August 14, 2005 6:26 PM  

Post a Comment

<< Home