சின்னக் கதைக்குப் பின்னால்...
அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு குழந்தைகளுக்கான சேனலில் ஒளிபரப்பான இந்தக் கதையைக் குறித்த எனது வாசிப்பு தவறா என்று சொல்லுங்களேன்.
Noggin என்ற சேனலில், '64 Zoo Lane' என்பது விலங்குகளின் விளையாட்டாய் காண்பிக்கப்படும் ஒரு கார்ட்டூன் நிகழ்ச்சி. இதன் ஒரு அத்தியாயத்தில் ஒரு காண்டாமிருகம் ஒரு சிறுமியிடம் சொல்வதாய் அமைந்த கதை இது.
ஒரு குளத்தருகே ஒரு பெலிகன் (ஒரு வகை வாத்து - படத்தைப் பார்க்கவும்) வசித்து வந்தது. ஒரு நாள் அதற்கு மீனெதுவும் கிடைக்காமல் வாடியிருக்கையில், அதே குளத்தில் கொக்கு ஒன்று ஏகப்பட்ட மீன்களைப் பிடித்து விட்டது. அந்தக் கொக்கு தான் பிடித்த மீன்களையெல்லாம் ஒரே சமயத்தில் தனது வசிப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல், ஒரு மீனை கரையில் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டுச் செல்கிறது. அந்த மீனைப் பார்த்த பசித்திருக்கும் பெலிகன் அதைத் திருடி தனது அலகில் பதுக்கி விடுகிறது. பின்னர் ஒரு பன்றி ஒளித்து வைக்கும் தர்பூசணியையும், ஒரு சிங்கம் சுவைத்துக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டு ஆகியவையையும் திருடி விடுகிறது. இத்திருட்டையெல்லாம் வேறு சில மிருகங்கள் பார்த்து விடுகின்றன.
பெலிகன் தான் திருடியவையெல்லாம் சுமக்க முடியாமல் சுமந்து, பறக்க முடியாமல் நடந்து, தனது வீட்டிற்கு வருகிறது. அது வந்த சில நிமிடங்களிலேயே நாரை, பன்றி, சிங்கம் ஆகியவை வந்து தனது உணவுப் பொருட்கள் திருடு போய் விட்டதாகச் சொல்லி பெலிகனை கவனமாக இருக்கச் சொல்கின்றன. அவை சென்றதும் பெலிகன் மனம் வருந்தி தான் திருடியவற்றை திரும்பவும் திருடிய இடங்களிலேயே திருப்பி வைத்து விடுகிறது. திருப்பி வைக்கும் போது தூங்குவது போல பாவனை செய்து கொண்டிருக்கும் நாரை, பன்றி, சிங்கம் ஆகியவை பெலிகன் சென்றதும் விழித்துப் பார்த்துப் புன்னகைக்கின்றன.
பெலிகன் வீடு திரும்பி பசியோடு தூங்குகிறது. மறு நாள் விழித்ததும், நாரை, பன்றி, சிங்கம் மூன்றும் பெலிகன் வீட்டிற்கு ஒரு பெரிய கேக்கைக் கொண்டு வந்து 'எங்களிடம் அதிகம் உணவிருப்பதால், உனக்கும் கொஞ்சம் கொடுக்கலாம் என்று கேக் செய்து கொண்டு வந்தோம்' என்கின்றன. பெலிகன் நன்றியுடன் கேக்கை உண்கிறது.
கதை இது தான். எந்த ஒரு சாய்மானமும் இல்லாமல் தான் சொல்ல முயன்றிருக்கிறேன். "கற்பனையே யானாலும் வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க" இதில் இடமிருக்கிறது என்று எண்ணுகிறேன். ரொம்பவும் தோண்டிப் பார்க்கத் தேவையில்லாமலே, இந்தக் கதை சொல்லும் மறைபொருட்களாக எனக்குத் தோன்றுபவை:
1. பசிக்குத் திருடத் துவங்குபவன் சீக்கிரமே, பேராசை பிடித்து, பழக்க தோஷத்தில் திருடத் தொடங்குவான்.
2. அப்படித் திருடித் தின்பதை விட பசியோடிருப்பதே மேல்.
3. சமூக மாந்தர் மிகவும் நல்லவர்கள்; திருடனாய்ப் பார்த்துத் திருந்தி விட்டால், ஏற்று அரவணைத்துக் கொள்வார்கள்.
நான் இடது சாரியோ, வலது சாரியோ, காட்டன் சாரியோ இல்லை. இருப்பினும், இப்பூடகச் செய்திகள் எனக்கு ஒரு ரோசா வசந்த் ரீதியான குமட்டலைத் தான் ஏற்படுத்துகின்றன.
இதைப் பார்க்கும் குழந்தைகள் 'திருடுவது தவறு' என்ற எளிய பாடத்தை மட்டுமே கவனத்தில் பதித்துக் கொள்வர் என்று நம்புவோம்.
மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
2 Comments:
பாண்டி,
நீங்கள் சொல்வது விளங்கவில்லை; அவை இரண்டுமே எனது வலைப்பதிவில் உள்ளன. உங்களுக்குத் தெரியவில்லையா?
ஸ்ரீகாந்த்,
சற்றுமுன் தான் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருந்தபோது 'தியாகமூர்த்தி' கதையை இன்னொரு முறைபடித்தேன். இந்த கொக்கு கதையின் ஒருபாதி ராமசாமி பத்தர் ரங்கராஜூலு நாயுடுவிடம் திருடப்போனது மாதிரியான கதை. இரண்டாம் பகுதி இதை எழுதியது ஒரு Republican ஆகவோ அல்லது Bill Gates ஆகவோ இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.
உங்கள் பதிவில் 'voting pad' தெரியவில்லை
Post a Comment
<< Home