சங்கரபாண்டியின் கட்டுரை
நானிருக்கும் வாஷிங்டனிலும் ஒரு தமிழ் சங்கம் உள்ளது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக இயங்கி வரும் இதன் வரலாற்றில் ஒரு மெகா சீரியலுக்கான சரக்கு இருக்கிறது. ஒரு சமயத்தில் இதற்கு நான் தலைவராகவும் இருந்திருக்கிறேன். இன்றும் வலைப்பதிவர்கள் சிலர் இதை நிர்வகிக்கிறார்கள். இதன் துணைத்தலைவர் மணிக்கூண்டு சிவா, இதன் பத்திரிக்கையான 'தென்றல்-முல்லை'யின் (அதென்ன வினோதமான தலைப்பு என்று தோன்றுகிறதா? - கேட்காதீர்கள், அப்புறம் வருத்தப்படுவீர்கள்) ஆசிரியர் சங்கரபாண்டி. துணை ஆசிரியர் 'சிறகுகள்' தாரா.
இப்பத்திரிக்கையின் சமீபத்திய இதழில் சங்கரபாண்டி அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் பற்றி ஒரு சுவாரசியமான கட்டுரை எழுதியுள்ளார். அவர் சொந்தமாக வலைப்பதிவு ஆரம்பிக்காமல் அழிச்சாட்டியம் செய்து வருவதால் அந்தக் கட்டுரையை இங்கே அவர் அனுமதியோடு மறுபிரசுரம் செய்கிறேன்.
இதோ அந்த கே.வா.போ.க (கேட்டு வாங்கி போட்ட கட்டுரை - remember? :-) )
--------------------------------------
தமிழ்ச் சங்கமும், பேரவையும் தேவைதானா?
சொ. சங்கரபாண்டி
என்னடா தலைப்பே இப்படி எதிர்மறையாக இருக்கிறதே என்று கவலையாக இருக்கிறதா. அதைவிட கவலைப் படவேண்டியது உண்டு - அது, தமிழ்ச் சங்க நிர்வாகிகளாகவும், பேரவை நிர்வாகிகளாகவும் பதவி வகிப்பவர்களில் பெருவாரியானோர், தமிழ்ச் சங்கங்களை ஏன் நடத்தி வருகிறோம் என்றும், தாங்கள் ஏன் அந்தப் பதவிகளுக்கு வந்தோம் என்றும் அறியாமல் இருப்பது.
அடிப்படைப் பணியும், அலட்சியமும்
கடந்த சில வருடங்களாக நான் தமிழ்ச்சங்கங்களையும், பேரவை(FETNA)யையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒரு சில நிர்வாகிகள் மட்டும் தங்கள் நேரத்தை முழு மூச்சாக செலவிட்டு, எடுத்துக் கொண்ட பணியினைச திறம்படச் செய்து வருகின்றனர். ஆனால் மீதிப் பெரும்பாலோர் தமிழ்ச் சங்கப் பெயர்ப் பட்டியலிலும், வெளியீடுகளிலும் தங்கள் பெயரும், புகைப் படமும் வந்தால் போதும், ஒன்றும் செய்யாமலே மற்ற சில பயித்தியக்காரர்கள் செய்யும் பணியினால் தம் பெயரும் உலகத்துக்குத் தெரிந்தால் போதும் என்று நினைகிறார்களோ எனத் தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் இவர்களால் மிக அடிப்படையான பணியான நிர்வாகக் கூட்டங்களில் கூட கலந்து கொள்ள முடியாது என்பது வெட்கக் கேடு. இத்தனைக்கும் தற்காலத்திலுள்ள தொழில் நுட்ப மலிவால் கூட்டங்கள் நேரடியாக சந்திக்கத் தேவையில்லாமல் தொலை பேசி வழியாக (conference calls) நடக்கின்றன.
இந்த இலட்சணத்தில் இந்தப் பதவிகளுக்குப் பெரும் போட்டியும் தேர்தலும் வேறு. ஏதோ தமிழ் மக்கள் கட்டாயப்படுத்தி நீங்கள் இருந்து நடத்தித் தாருங்கள் என்று வற்புறுத்தி பதவிக்கு நியமிக்கப் பட்டு வந்தால் பரவாயில்லை. அவர்களுக்கு முழு விருப்பமில்லாமலோ, நேரமில்லாமலோ மறுத்த பின்னும், வேறு ஆட்களில்லாத நிலையில், பிறரால் நியமிக்கப் பட்டவர்கள் செயலாற்றாமல் இருந்தால் குறைப் பட்டுக் கொள்ள முடியாது. அது அவர்கள் பிழையில்லை. மாறாக, செயல் படாத நிர்வாகிகளில் பெரும்பாலோர் அவர்களே பெரிதும் ஆர்வம் காட்டியோ அல்லது தேர்தலில் வெற்றி பெற்றோ பதவிக்கு வந்தவர்கள். இதன் மூலம் அவர்கள் போட்டியில் கந்து கொண்ட மற்றவர்களின் வாய்ப்பைத் தட்டிச் சென்றவர்கள். அவ்வாறு பதவிக்கு வந்தபின் மிக அடிப்படையான நிர்வாகக் கூட்டங்களுக்குக் கூட வர முடியாது என்றால் பின் எப்படி தமிழ்ச்சங்கங்கள் வளரும்?
பெரும்பாலான தமிழர்களின் எதிர்பார்ப்பு
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ச் சங்கங்களை நம் முன்னோர்கள் ஏன் தோற்றுவித்தார்கள், நாம் ஏன் இன்னும் நடத்தி வருகிறோம் என்று அறியாமல், வெறுமனே பொழுது போக்கு மன்றங்களாகக் கருதுவதால்தான், வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் ஒரே சொத்தான ஒலி பெருக்கிகளை பூட்டி வைக்கக் கூடிய ஒரு சிறு பாதுகாப்புக் கூடம் கூட இல்லாத அவல நிலை நமக்கு. இதுதான் பெரும்பாலான தமிழ்ச்சங்கங்களின் நிலை, தமிழ்ச்சங்கப் பேரவையின் நிலை.
கடந்த சில வருடங்களாக கீழ்க்கண்ட மூன்று வகைத் தமிழர்களை பார்த்து வருகிறேன்:
1. தமிழ்ச்சங்கங்களின் நோக்கங்களாக சிலவற்றை தாமாகவே கற்பனை செய்து கொண்டு அச்சங்கங்களில் விரும்பி இணைந்தவர்களும் உண்டு
2. அந்நோக்கங்களை தாங்கள் விரும்பியபடி செயல் படுத்தத் தடையாக வேறு சிலர் நடந்து கொள்வதாக நினைத்து அவர்களிடம் சண்டையிட்டோ அல்லது கோபித்துக் கொண்டோ தமிழ்ச்சங்கங்களை விட்டே ஓடிப்போனவர்களும் உண்டு;
3. தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராவதையே குறுகிய மனப்பான்மையாகவோ அல்லது அதைவிட மேலேயும் போய் ஏதோ அறுவறுப்பானதாகக் கருதி தமிழ்ச்சங்கங்களை முற்றிலும் புறக்கணிக்கும் தமிழர்களும் உண்டு.
இவர்களிடம் தமிழ்ச்சங்கத்தைப் பற்றிப் பேசும் பொழுது, அவர்களிடமிருந்து நான் அறியும் அல்லது கேள்வியுறும் நோக்கங்களையும், அவை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதையும் முதலில் ஆராய்வோம். அப்பொழுது நம் எதிர்பார்ப்பில் உள்ள பிழையும், அந்த எதிர்பார்ப்புகள் பொய்க்கும் பொழுது ஏற்படும் ஏமாற்றமும் புலப்படும்.
1. தமிழ் மொழி வாழவும், வளரவும் புலம் பெயர்ந்தவர்கள் நடத்தும் தமிழ்ச்சங்கங்கள் உதவும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மொழியான தமிழ்மொழியை புலம் பெயர்ந்தவர்கள் வாழ வைக்கமுடியும் என்பது நல்ல கற்பனையே. இது தவறான கணிப்பு. அதற்கு மாறாக, தாயகத்தில் வாழும் மக்கள் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் பொழுது வீழ்ச்சியும், தாயக மக்கள் அன்றாட புழக்கத்தில் எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது வளர்ச்சியும் ஏற்படும் என்பதே உண்மை.
அதனால் தமிழ் மொழியை வாழ வைப்பது நம் தமிழ்ச்சங்கங்களின் நோக்கம் என்பதெல்லாம் சரியாகப் படவில்லை.
2. தமிழ்ச்சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து கலந்து கொள்வதன் மூலமோ அல்லது பொறுப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் தீவிர பங்கேற்பதன் மூலமோ நம் குழந்தைகளுக்கு நம்முடைய கலாச்சாரத்தோடும், மொழியோடும் தொடர்புடன் இருப்பதற்கு உதவும்.
இதில் ஓரளவு உண்மையுண்டு. தமிழ்ப் பண்பாட்டை நாம் வீட்டில் திணிக்கும் பொழுது, இயல்பான எதிர் வினையாக நம் குழந்தை அதிலிருந்து மீற நினைக்கும். ஆனால் தன்னையொத்த மற்றக் குழந்தைகளும், இளைஞர்களும் வெளிப்படுத்தும் கலாச்சாரக் கூறுகளை இயல்பாக உள்வாங்கிக் கொள்ளும்.
இருந்தாலும் இது முழுக்க வெற்றியில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. அதனால் தான் சிறுவர்களாக இருக்கும் பொழுது தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இளைஞர்களாகும் பொழுது விலகிப் போய் விடுகிறார்கள். இதற்கு விதி விலக்காக ஒரு சில இளைஞர்கள் உண்டு, அதற்குக் காரணம் அவர்களின் வீட்டிலும் குழந்தைகளுக்குப் பண்பாட்டையும், மொழியையும் இயல்பாகக் கற்றுத்தர பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.
3. மேற்கூறிய இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறதோ இல்லையோ, சரியோ தவறோ நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் மூன்றாவது ஒரு நோக்கமும் மிகச்சிலரிடம் உண்டு, அது தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பொறுப்பை வகிப்பதன் மூலம், தனக்கு ஒரு பெயரை, புகழை அல்லது அங்கிகாரத்தை தேடிக்கொள்ள விழைவது. இதில் சுயனலம் இருப்பதாகத் தோன்றினாலும் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்குப் பயன் படுமானால் நல்ல நோக்கமாக எடுத்துக் கொள்ளலாம். மாறாக பதவியிலிருந்து கொண்டு எதுவும் செய்யாமல் தன்னுடைய பெயரை எல்லா இடத்திலும், குறிப்பாக தாய்நாட்டில் இருப்பவர்களிடம் பெருமை அடிப்பதற்காக பதவி வகிப்பது. இப்படி இருப்பவர்களால் எப்படி அடிப்படைப் பொறுப்பான நிர்வாகக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும். எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்வது கடினம்தான். ஆனால் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாத நிர்வாகிகள் ஏன் அப்பதவிகளில் தொடர வேண்டும். இப்படிப் பட்டவர்களின் பொறுப்பில் தமிழ்ச்சங்கம் வரும் பொழுது வளர்ச்சி பெறாது. மேலே சொன்ன இரண்டு நோக்கக்களுக்காக வரும் உறுப்பினர்களும் வெளியேறி விடுகின்றனர். மேலும், இப்படி பட்ட நிர்வாகிகளில் சிலர், தன்னுடைய பதவி முடிந்த உடன் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியின் பார்வையாளராகக் கூட வராமல் காணாமல் போய்விடுவதும் உண்டு. இன்னும் சிலர், தமிழ்ச்சங்கப் பதவிகளில் இருந்து கொண்டு தன்னுடைய சுய வளர்ச்சிக்கு மட்டுமே சங்கத்தின் பெயரைப் பயன் படுத்துவது.
தமிழ்ச்சங்கங்கள் ஏன் அவசியம்?
இந்த நாட்டில் நாமெல்லாம் வந்தேறிகள். எவ்வளவு திறமையிருந்தாலும், குடியுரிமை வாங்கி நீண்ட காலம் வசித்தாலும், இரண்டாவது தலைமுறையாக நம் குழந்தைகள் இருந்தாலும் வேற்று இனத்தவர்களாகத்தான் கருதப் படுகிறோம். செல்வம் குன்றாத வரையில், வேலை வாய்ப்புகள் ஓரளவு இருக்கும் வரையிலும் இந்த வேற்று இன மனப்பான்மையால் நமக்கு எந்தச் சிக்கலும் வராது. திண்டாட்ட சூழ்நிலை உருவானால்தான் ஐரோப்பியத் தோற்றமில்லாதவர்கள் எல்லோரையும் வேற்று இனம் மட்டுமல்லாது வெளியேற்ற வேண்டிய இனம் என்று கருதும் மனப்பான்மை வரும். இது வரலாற்றில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் ஏற்பட்டு வந்துள்ள நிலைமை. இதில் கறுப்பு, வெளுப்பு என்றெல்லாம் பேதம் கிடையாது. மலேயாவும், பர்மாவும், உகாண்டாவும் உணர்த்தும் பாடம் இது. மக்களாட்சிக் குடியரசு இல்லாத நாடுகளில் வெளியேற்றத்தையும், வன்முறையையும் நேரடியாகச் செயல் படுத்துவர். மக்களாட்சிக் குடியரசும், சட்டதிட்டங்களும் உள்ள நாடுகளில் முதலில் சட்டப் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கும் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு. அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம் தாய் நாடு நம்மைப் பாதுகாக்குமா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது. சமகாலக் கட்ட உலக அரசியல் நிர்ப்பந்தங்களின் அடிப்படையிலும் சுயநலத்தின் அடிப்படையிலும் தான் ஒவ்வொரு நாடும், இன்னொரு நாட்டுடன் முறித்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தாய் நாட்டை ஆள்வோர் நாணயமில்லாத அரசியல்வாதியாக இருந்தால், தங்களுக்கு வேண்டிய சிலரின் நன்மைக்காக மற்ற அனைவர் நலத்தையும் காவு கொடுக்கவும் செய்வர்.
ஒரே வழி - சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக, ஒரு அமைப்பாக தங்களின் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான நடை முறைகள் - தமிழ்ச்சங்கங்களை நல்ல முறையில் கட்டிக் காப்பது, பல்வித கலாச்சார நிகழ்ச்சிகள் , மாநாடுகள் போன்றவற்றை நடத்திக் கொண்டே இருப்பது.
எனவே தனிப்பட்ட சுயநலங்களை, வெறும் பெயருக்கும், புகழுக்கும் ஆசைப்படுவதை ஒதுக்கி வைத்து நம்முடைய சந்ததியினரின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் சுயநலம் கருதி தமிழ்ச்சங்கத்தையும், பேரவையும் நல்ல முறையில் நடத்த முன்வர வேண்டும். பல்வித வேலைகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையில் நமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகச் செய்ய முடியும் என்று சிந்திப்போம்.