<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, December 13, 2005

பனி வருது, பனி வருது, ஷவல் கொண்டு வா...

(சம்பந்தமில்லாத முன்குறிப்பு: சன் டிவியின் 'தங்க வேட்டை' விளம்பரங்களை ஜெனீவா சித்திரவதைப் பட்டியலில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர் சொல்ல வேண்டுகிறேன்.)

(சம்பந்தமுள்ள முன்குறிப்பு: சிகாகோ, டெட்ராய்ட், டொரொண்டோ போன்ற ஏரியும் ஏரி சார்ந்த இடங்களிலும் இருப்பவர்களுக்கு கீழ்க்காணும் கட்டுரை எரிச்சலூட்டலாம்)

வாஷிங்டனில் குளிர்காலம் முகூர்த்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து விட்டது. பொதுவாக ஜனவரி பாதியில் துவங்கும் பனி பொழிவுகளுக்கு இந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்திலேயே ஜூட்ஸ். வீட்டு வாசலில் ஷவலும் கையுமாய் மாங்கு மாங்கென்று அள்ளிப் போடுகையில், சென்னையில் பக்கெட்டும் கையுமாய் மாங்கு மாங்கென்று மொண்டு ஊற்றுபவர்கள் கண நேரம் நினைவில் தோன்றி மறைந்தார்கள். சென்னையில் மறுநாள் சுள்ளென்று வெய்யில் அடித்திருக்கும்; இங்கு சூரியன் தெரிய இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்.

நான் இங்கு பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன், இருந்தாலும் குளிர்காலத்தோடு சமரசம் செய்து கொள்ளவே இல்லை. இந்த ஐந்து மாதங்களை பல்லைக் கடித்துக் கொண்டுதான் கடந்து கொண்டிருக்கிறேன் (கடித்துக் கொள்ளாவிட்டால் வெட வெடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடும், அது வேறு விஷயம்). சில பேர் நாக்கூசாமல் ஜம்பம் பேசுவார்கள் - 'ஆஹா, குளிர்காலம் எவ்வளவு அருமையாக இருக்கும்! பனியில் விளையாடலாம், பனிச்சறுக்கு போகலாம்..." என்று. அத்தனையும் பொய். இருந்தாலும் பரவாயில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமாளிப்பு யுத்தி என்று மன்னித்து விடுவேன்.

(இருந்தாலும் இந்தப் பனிச்சறுக்குக் கூத்து எனக்குப் புரிந்ததே இல்லை. லிஃப்டில் மலை உச்சியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அங்கே போய் நின்று கொண்டு, உடலில் முகத்தைத் தவிர எல்லா இடத்திலும் டபுள் போர்வை போர்த்திக் கொண்டு, அசந்தர்ப்பமான வினாடியில் கீழே தள்ளிவிடப்பட்டு, காற்று முகத்தில் அறைய, வெளியே தெரியும் அரை இன்ச் தோல் செந்தோலாகி கீழே வந்து சேரும் போது, 'இதற்குக் காசு வேறு கொடுத்தோமா?' என்று தோன்றும். கூட இருப்பவர்கள் 'சூப்பரா இருந்ததில்ல?' என்று சொல்வார்கள், நம்பாதீர்கள்.)

என்னுடைய சமாளிப்பு உத்தியில் வேறு மாதிரியான பாசாங்குகள் உள்ளன. இன்னும் ஐந்து மாதங்கள் குளிர்காலம் என்று நினைக்கத் துவங்கி விட்டால், அவ்வளவு தான் அம்பேல், எழுந்திருக்க முடியாது. மாறாகக் குறுகிய காலங்களாய்க் கணக்கிட வேண்டும். ஒரு நீண்ட பயணம் போல இது. உதாரணமாக, வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்வது நான்கரை மணிநேரம். அவ்வளவு நேரமா என்று ஆரம்பத்திலேயே யோசித்தால் முடியாது. ஒரு மணி நேரத்தில் பால்டிமோர் வந்துவிடும். பின்பு ஒருமணி நேரத்தில் டெலவேர், அப்புறம் நியூஜெர்சி என்று கொஞ்சம் கொஞ்சமாய் கணக்கு பண்ண வேண்டும்.

குளிர்காலத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக் காலம். கடை கண்ணி போய் வருவது, தேவையே இல்லாத பொருட்களை சீப்பாய் வாங்கிக் குவிப்பது, அலுவலகத்தில் அபரிமிதமாய்ப் புரளும் சாக்லேட்டுகளில் முங்கி எழுவது என்று புத்தாண்டை நோக்கிய எதிர்பார்ப்பில் இந்த மாதத்தைக் கழித்து விடலாம். ஜனவரி கொஞ்சம் கஷ்டம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்க வேண்டும் என்ற விபரீதமான எதிர்பார்ப்புகளை எதிர் கொள்ள வேண்டும். புட்பால் ரசிகர் என்றால் கொஞ்சம் வார இறுதிகளை ஒப்பேற்றலாம்.

பிப்ரவரி ஆரம்பம் தான் குளிர்காலத்தின் மத்தி. குறிப்பாக அந்த Ground Hog day. அந்தப் பெருச்சாளி என்ன சொல்கிறது என்ற அசட்டு ஆவலில் ஒரு நாள் கழியும். மேலும் Groundhog day திரைப்படத்தை USA சேனலில் மீண்டும் மீண்டும் போடுவார்கள் (Think about THAT!). அதற்குப் பிறகு பிப்ரவரியில் அவ்வப்போது தலை காட்டி மறையும் குளிர் குறைந்த நாட்கள் Shelley-ஐ நினைவுபடுத்தும். தைரியமாக வசந்தகாலத்தைப் பற்றி கனவு காணத் துவங்கலாம்.

அப்படிக் கனவு காணத்துவங்கிய மறுநாள் கன்னத்தில் அறைவது போல ஒரு பனிப்புயல் தாக்கும். அஞ்சக் கூடாது. இது குளிர்காலத்தின் கடைசிச் சவால். மார்ச் ஆரம்பத்தில் இப்படிப் பூச்சாண்டி காட்டுவது தான் இந்தப் பருவத்தின் sick sense of humor. ஒழியட்டும் என்று விட்டு விட்டால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகாட்டத் துவங்கும் டுலிப் பூக்கள் வசந்தத்திற்குக் கட்டியங் கூறும். செர்ரிப்பூக்கள் பூப்பதற்கு நல்ல நாள் பார்க்கும். அப்புறம் ஒரு ஆறு மாதங்கள் கவலையில்லை. செருப்புப் போட்டுக் கொண்டு வெளியில் போகலாம், ஷார்ட்ஸ் போடலாம், பேஸ்பால் பார்க்கலாம், காரில் ஜன்னலைத் திறந்து...Stop, stop...கூடாது, இப்பொழுது அவ்வளவு தொலைவில் யோசிக்கக் கூடாது. இப்பொழுதிற்கு கிறிஸ்துமஸ், ஷாப்பிங், புத்தாண்டு - அவ்வளவுதான்.

கஷ்ட ஜீவனம், சாமி!

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அட! என்னுடைய உத்தியை நீங்களும் கையாளுகிறீர்களா?

நானும் இப்போதைக்கு அடுத்த இரண்டரைச் சொச்ச வாரங்களையே முன்னிறுத்தி வண்டியை ஓட்டுகிறேன். :)

-மதி

December 13, 2005 6:39 PM  
Blogger Boston Bala said...

---சன் டிவியின் 'தங்க வேட்டை' விளம்பரங்களை---

இன்னும் டிவோ/டி.வி.ஆர் வாங்கவில்லையா!?

December 13, 2005 7:13 PM  
Blogger Srikanth Meenakshi said...

மதி, அட, என்னைப் போல் ஒருவர்... வாழ்க!

>>இன்னும் டிவோ/டி.வி.ஆர் வாங்கவில்லையா!?

தலைவா...ஒரு ரெண்டு மாசமாய் டி.வி.ஆர் சுளுக்கிக் கொண்டிருக்கிறது..அதிலிருக்கும் ஹார்ட் ட்ரைவை திருடிக் கொள்ள முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... :-)

December 13, 2005 8:13 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

நானும் அடுத்த இரண்டு மூன்று வாரங்களை மனதில் கொண்டுதான் நடத்துகிறேன். என்ன ஒன்று க்றிஸ்மசையும் புத்தாண்டையும் நான் செருப்புப் போட்டுக் கொண்டு கொண்டாலாம். "நானும் அதைச் செய்வேனே!" என்கிறீர்களா.. நான் சொன்னது செருப்புப் போட்டுக் கொண்டு வெளியிலே வெய்யிலிலே ஒரு BBQ சகிதம் :O)

அடிவிழ முதல் எஸ்கேப்.. ;O)

December 13, 2005 8:24 PM  
Blogger வானம்பாடி said...

:-)

December 14, 2005 3:59 AM  

Post a Comment

<< Home