<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Friday, December 09, 2005

மாற்றங்களும் நட்பும்

[உத்தரவாதமாக சொல்லக் கூடிய ஒரே விஷயம், கீழ்க்காணும் கட்டுரையைப் போல நான் அதிகம் எழுத மாட்டேன் என்பது தான்]

மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சில சமயம் இலக்கில்லாமல்; சில சமயம் இலக்குகளோடு. சில சமயம் காரணமில்லாமல்; சில சமயம் காரணத்தோடு. சில சமயம் தெரிந்து; சில சமயம் தெரியாமல்.

எதற்காக மாறுகிறார்கள், எப்படி மாறுகிறார்கள் என்ற கேள்விகள் சுவாரசியமான பாடுபொருட்கள் தாம். ஆனால் நான் எழுத முற்படுவது அவற்றைப் பற்றியல்ல; மாறாக இந்த மாற்றங்களை அவனது நட்புச்சுற்றம் எப்படி எதிர்கொள்கிறது, மாறும் மனிதர்கள் தமது நட்புச் சுற்றத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பவை பற்றி. எனது சித்தாந்தம் யாதெனில், பல சமயங்கள் ஒரு மனிதனின் நண்பர்கள் அவனது மாற்றத்திற்குத் தடைக்கற்களாக இருக்கிறார்கள் என்பதும் சில சமயம் நட்புக்காக மாற்றங்களும் சில சமயம் மாற்றங்களுக்காக நட்புக்களும் பலியிடப்படுகின்றன என்பதும், இது நல்லதல்ல என்பதும்.

மாறுதல்களெல்லாம் வளர்ச்சிகளல்ல தான். உதாரணமாக ஒருவர் திடீரென்று புகைக்க ஆரம்பித்தால், அதற்கு அவரது நட்பு வட்டம் ஆதரவளிக்காமல், அவர் அந்தப் பழக்கத்தை விட நேர்ந்ததென்றால் சந்தோஷமான விஷயம் தான். நான் சொல்வது அத்தகைய மாற்றங்களல்ல. மாறாக, சித்தாந்த ரீதியான, உளவியல் ரீதியான, ஆளுமை ரீதியான மாறுதல்கள்.

கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். ரொம்பவும் நகைச்சுவையாய் பேசுவான், பழகுவான். ஒரே ஒரு கெட்ட பழக்கம் - கொஞ்சம் திருடுவான். பெரிசாய் இல்லை, சின்னச் சின்ன விஷயங்கள் - பேனா, செருப்பு, சீப்பு, ஷாம்பூ, இப்படி. நிஜமாகவே ஒரு பொழுது போக்காகத் தான் அதைச் செய்தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவனது தேவைக்கும் மிக அதிகமாக அவன் திருடிய விஷயங்களே அவனிடம் இருந்தன - கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பேனாக்கள்! வெளிமாநிலத்தில் படித்ததால் தமிழ் மாணவர்களான் நாங்கள் ஒரு நெருக்கமான வட்டம் (சாம்பார்க் கூட்டம்!). எங்களிடம் இந்தப் பழக்கத்தை மறைக்க அவன் முயற்சித்ததே இல்லை - முற்றிலும் மாறாக பெருமையாகச் சொல்லிக் கொள்வான். இன்று இவரிடமிருந்து இதைச் சுட்டேன், இப்படிச் சுட்டேன் என்று. எங்களுக்கும் பொழுது போகும் (இக்கட்டான நிலைமையில் ஒரு சேமிப்புக் கிடங்காகவும் அவனது அலமாரி எங்களுக்குப் பயன்பட்டது என்பது வேறு விஷயம்). அவனைப் பொறுத்த வரையில் அது தான் அவனது அடையாளம் - சிரிப்புத் திருடன் சிங்காரவேலு மாதிரி என்று சொல்லலாம்.

அந்தக் கல்லூரிக்குப் பிறகு எல்லோரும் பலவாறாகப் பிரிந்து சென்றோம். அவன் வர்த்தகக் கல்லூரி சென்றான், நான் முன்னோர் போட்ட பாதையில் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். சில வருடங்கள் கழித்து முதல் முறை சென்னை திரும்பிய போது, நண்பர்களுடன் ஹோட்டல் போகலாம் என்று எல்லாரையும் திரட்ட முனைந்தேன். பலரைப் பிடிக்க முடிந்தது, இவனைப் பிடிப்பது பிரம்ம பிரயத்தினமாக இருந்தது. ஒரு நிதி சேமிப்பு நிறுவனத்தில் மேலாளராக இருந்தான். அப்படி இப்படி சாக்கு சொல்ல, நான் விடாமல் முனைந்ததால் கடைசியில் வர ஒப்புக் கொண்டான்.

ஹோட்டல் போய் உட்கார்ந்து கொண்டோம். 'பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ' பிரச்னையெல்லாம் இல்லை. பேச்சு, பேச்சு, பேச்சு தான். கிண்டலும், கேலியும் சீண்டலுமாய் பொழுது நகர்ந்தது. நண்பனைப் பற்றி பேசியவர்களெல்லாம் அவனது 'சேகரிப்புப்' பழக்கத்தைப் பற்றி விடாமல் நக்கலடித்தார்கள். ஒவ்வொரு முறையும் அவன் கொஞ்சம் அசௌகரியமாய் இருந்தது எனக்குப் பின்னால் தான் உறைத்தது. அப்போது தெரியவில்லை. ஒருவன், 'டேய், உன்ன எப்டிடா ஃபைனான்ஸ் கம்பெனிக்குள்ள விட்டான்? வீட்ல கலெக்ஷன் ஆரம்பிச்சுட்டியா?' என்ற போது விழுந்து விழுந்து சிரித்தவர்களுள் நானும் ஒருவன் தான். அவன் முகம் உண்மையிலேயே சுருங்கிப் போனது, இருந்தாலும் சமாளித்துக் கொண்டான்.

ஆனால், நான் பின்பு யோசித்துப் பார்த்தேன் - அவன் மாறியிருக்கிறான், வளர்ந்திருக்கிறான், தனது சிறுபிள்ளைத்தனத்திலிருந்து வெளி வந்திருக்கிறான். நாங்கள் தான் அதை உணரவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை. முன்பும் மற்ற நண்பர்களைச் சந்தித்த போது அவர்கள் இவ்வாறு பேசியிருக்க வேண்டும், அதனாலேயே வரத் தயங்கியிருக்கிறான் என்று புரிந்தது. கஷ்டமாக இருந்தது.

அதன் பிறகு பல முறை இந்தியா சென்றும் அவனைப் பார்க்க முடியவில்லை. எனது நண்பர்களும் அவன் தொடர்பு அற்றுப் போனதாகக் கூறி விட்டார்கள்.

இன்னொரு நண்பன் இருந்தான் (இருக்கிறான்). முன் சொன்னவனை விடவும் எனக்கு நெருக்கமானவன். இவனோடு நான் தர்க்கம் செய்யாத விஷயங்களே கிடையாது. புதிதாய் ஒரு சிந்தனை தோன்றினால் முதலில் வெள்ளோட்டம் பார்ப்பது அவனிடம் தான். டென்னிஸ் சுவர் பயிற்சி மாதிரி. சில சமயம் நான் சுவர், சில சமயம் அவன். குறிப்பாக நீண்ட நேரம் தர்க்கித்த ஒரு விஷயம் - வேறென்ன? - கடவுள் இருப்பைப் பற்றி தான். நான் தீவிர ஆத்திகன் இல்லையென்றாலும் இறை நம்பிக்கை உள்ளவன், அவன் நாத்திகன். இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறோம் - கல்லூரி நாட்களிலும் சரி, அதன் பின்னரும் சரி.

அவனும் அமெரிக்கா வந்தான், பின்பு வாஷிங்டன் வந்தான். எங்கள் வாதங்கள் தொடர்ந்தன. எங்கள் நிலைப்பாடுகள் அதிகம் மாறவில்லை, கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தினோம், அவ்வளவுதான். திருமணங்கள் நடந்தன. வாஷிங்டனுக்கு வடக்கே அவனும் மேற்கே நானும் குடி பெயர்ந்தோம். அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும் போது வாதம் செய்ய நேரமில்லாமல் போனது.

பின்பு ஒரு நாள் இங்குள்ள கோவிலுக்கு மனைவியோடு சென்றிருந்தேன். சுற்றி முடித்து விட்டு வரும் போது, சத்தியநாராயணர் சன்னிதியில் சம்பிரம்மமாக மனைவியோடு உட்கார்ந்து பூஜை செய்து கொண்டிருந்தான் இவன்! அவன் என்னைப் பார்ப்பதற்குள் எனது ஆச்சரியத்தை மறைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து வந்து அமரும்படி சைகை செய்தான். நாங்களும் அமர்ந்து பூஜை முடித்துக் கொண்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு சம்பிரதாயமாகப் பேசி விட்டு வந்து விட்டோம்.

கோவிலில் அவனைப் பார்த்த போது எனக்கு முந்தைய நண்பனைப் பற்றி திடீர் ஃப்ளாஷ் பேக்கெல்லாம் வந்து விடவில்லை. அவனிடம் பல கேள்விகள் கேட்டிருக்கலாம், பல வார்த்தைகள் சொல்லியிருக்கலாம், ஏதோ சொல்லவில்லை.

அப்பொழுதும் சரி, பிறகு அவன் வீட்டில் பூஜையறையைப் பார்த்த போதும் சரி, அவனது நெற்றியில் அவ்வப்போது தோன்றும் சின்னங்களைப் பார்த்த போதும் சரி, எதுவும் சொல்லாமலிருந்தது தான் சரி என்று தோன்றியது. அவனாக இதைப் பற்றி ஒரு நாள் பேசுவான், அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்.

இந்த சிந்தனையைக் கொஞ்சம் உள்நோக்கியும் திருப்ப முடியும். நீண்ட நாட்கள் கழித்து நான் சந்திக்கும் நண்பர்கள் என்னிடம் தவறாமல் கூறுவது - 'நீ மாறவே இல்லடா, அப்பிடியே இருக்க...".

ஏன் என்று யோசிக்கிறேன்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

1 Comments:

Blogger பரி (Pari) said...

இது மாதிரி நிறைய எழுதுங்க. அனுபவஸ்தங்க(வயசானவங்க :) ) சொன்னா சரியாத்தான் இருக்கும் :)

December 12, 2005 5:06 PM  

Post a Comment

<< Home