இன்று அமெரிக்காவில் ஈராக்கை விட சூடாக விவாதிக்கப்படும் விஷயம் குடியேற்றச் சட்டங்கள் (immigration laws). இது பற்றி கருத்தில்லாதவர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. வானொலியில் கருத்து விவாதங்களை நடத்துபவர்கள் “Immigration” என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுத் தூங்கப் போய் விடலாம் - மக்கள் நூற்றுக்கணக்கில் ஆக்ரோஷமாகப் பேச முன் வருகிறார்கள். இந்நிகழ்வுகளைக் குறித்த என்னுடைய பரவலான அவதானிப்புகளும், சில கருத்துக்களும் இங்கே:
பாரீசில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கும் மேலோட்டமான ஒற்றுமை தான் இருக்கிறது - இரண்டும் குடியேற்றத்தை அரசாங்கங்கள் எப்படி எதிர்கொள்கிறது என்பது பற்றியன, அவ்வளவுதான். பாரீசில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வண்ணம் அந்நாட்டின் மிக மோசமான தொழிற்ச்சட்டங்களை அரசாங்கம் மிக லேசாகத் தளர்த்தியதை மாணவர்கள் எதிர்க்கிறார்கள். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டிய தேவை குடியேற்றத்தால் உண்டான வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க. குடியேறிகள் எக்கேடு கெட்டால் என்ன என்பது மாணவர்களின் நிலைப்பாடு.
அமெரிக்காவில் குடியேறிகள் தங்கள் உரிமைகளுக்காகப்
போராடுகிறார்கள். சட்டபூர்வமாகவோ, சட்டத்தை மீறியோ அமெரிக்காவில் குடியேறியிருக்கும் (பெரும்பாலும் ஸ்பானிஷ் பேசும் லத்தீன் அமெரிக்க) மக்கள், தங்களுக்கு உரியதாகக் கருதும் உரிமைகளைக் கோரி நடத்தும் போராட்டங்கள்.
தற்போது அமெரிக்க பாராளுமன்றத்தில்
இரண்டு சட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன - ஒன்று கீழ் சபை நிறைவேற்றிய மசோதா - இது சட்டத்துக்குப் புறம்பான குடியேறிகளைக் கடுமையாக தண்டிக்கிறது. அப்படிச் செய்வதை ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அப்படி ஒருவருக்கு ஒரு நிறுவனம் வேலை கொடுக்குமானால், அந்நிறுவனத்தைக் குற்றவாளி ஆக்குகிறது. அப்படிப் பட்டவர்களுக்கு தங்க இடமோ ஆதரவோ கொடுப்பதைக் குற்றமாக்குகிறது. எல்லைக் கோடெங்கும் ஒரு சுவர்/வேலி கட்டுவோம் என்கிறது. ஒட்டு மொத்தமாக குடியேறிகளை கெட் அவுட் என்கிறது.
மேல்சபையில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சட்டம் இதை விட கொஞ்சம் இளகியது. தாற்காலிக வேலை வாய்ப்பு விசா ஒன்றை உருவாக்கி குடியேற்றத்தை முறைப்படுத்த முயல்கிறது. ஏற்கனவே இருப்பவர்களுக்கு குடிமக்களாகவோ வேறு விதமாகவோ சட்ட பூர்வமாக மாற வழி வகுக்கிறது (அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது). புஷ் இந்த மசோதாவை ஆதரிக்கிறார்.
போராடும் மாணவர்கள் இந்த மேல்சபை பரிந்துரையை எதிர்க்கிறார்கள். எதுவும் இன்னமும் சட்டமாகவில்லை. பாராளுமன்ற தேர்தல் ஆண்டான இந்த வருடத்திற்குள் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் தோன்றவில்லை.
******
குடியேற்றம் பொதுவாகவே ஒரு மிக மிக சிக்கலான பிரச்னைதான். இந்த ஒரு விஷயம்
அரசியல் (ஓட்டு வங்கி),
பொருளாதாரம் (நிறுவனங்களுக்கு குடியேறி = குறைந்த சம்பளம், நிறைய லாபம், மக்கள் பார்வையில் குடியேறிகள் = குறைந்த சம்பளம், பறிபோகும் வேலை),
மதம் (லத்தீன் அமெரிக்கக் குடியேறிகள் = மத உணர்வு நிரம்பிய கத்தோலிக்கர்கள், நிரம்பும் உண்டியல்),
மொழி (குடியேறிகள் = பள்ளிகளில் ஸ்பானிஷ்)
இனம் (குடியேறிகள் != வெள்ளைக்காரர்கள்)
என்று எல்லா ஜீவாதார விஷயங்களையும் பாதிக்கிறது.
*******
அனுதினம் அரிசோனா, நியூ மெக்ஸிகோ, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையான பாலைவன சீதோஷ்ண நிலைமைகளையும் மீறி பலர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்படுகிறார்கள். இதில் சிலர் இறக்கிறார்கள், சிலர் பிடிபடுகிறார்கள், பலர் வந்து சேர்கிறார்கள். இந்த விஷயத்தில் மெக்ஸிகோ அரசாங்கம் மெத்தனமாக இருக்கிறது என்பது அமெரிக்கர்களுக்கு ஒரு பெரும் குறை. இதன் பொருட்டு சமீபத்தில் மெக்ஸிகோ அரசாங்கம் வாஷிங்டன் போஸ்டில் ஒரு முழுப் பக்க விளம்பரம் கொடுத்திருந்தது. வினோதமான விளம்பரம். அதில் மெக்ஸிகோ நாட்டு மக்கள் சட்ட விரோதமாக எல்லை தாண்டிப் போகிறார்கள் என்றால், அதற்கு அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் தான் காரணம் என்கிறது. அமெரிக்கா விசா சட்டங்களை தளர்த்தினால், நாங்களும் எங்கள் எல்லைகளை நிர்வகிக்கிறோம் என்கிறது.
இதைப் பிறர் சொன்னால் பரவாயில்லை. ஒரு அரசாங்கமே இப்படிச் சொல்வது வெட்கக் கேடு இல்லை?
அது மட்டுமல்ல, அமெரிக்க எல்லையை எப்படி பாதுகாப்பாகக் கடப்பது என்பதற்கு ஒரு கையேட்டையும் தயாரித்து மக்களுக்கு இலவசமாக அளிக்கிறது இந்த அரசாங்கம்! தனது பொருளாதாரத்தை நிமிர்த்தி மக்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் அடுத்த நாட்டுக்குப் போய்ப் பிழைத்துக் கொள் என்று சொல்லாமலாவது இருக்கலாம்.
*******
சென்ற இரு நாட்களாக நடந்து வரும் மிகப் பெரிய போராட்டங்கள் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் குடியேறிகள் தங்கள் உரிமைகளுக்காக நடத்துபவை. இவற்றில் வினோதம் என்னவென்றால் இப்போராட்டங்களில் அவர்கள் உபயோகப்படுத்தும் கொடி மெக்ஸிகோ நாட்டுக் கொடி. மக்களே, நீங்கள் அமெரிக்காவில், அமெரிக்க சட்டங்களுக்காகப் போராடுகிறீர்கள்; உங்கள் நாட்டுப் பற்றை கொஞ்சம் நேரம் ஒதுக்கி வையுங்கள், அது தான் புத்திசாலித்தனம், ஏற்கனவே, ஸ்பானிஷ் பேசுகிறார்கள், சமூகத்துடன் ஒன்றுவதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வாய்க்கு இன்னமும் அவல் கொடுக்காதீர்கள்!
*******
இந்த விஷயத்தை தீவிரவாத அபாயங்களுடன் முடிச்சுப் போட்டுப் பேசுவதைப் போல ஒரு நாட்டுப் பற்றான விஷயம் வேறில்லை. எல்லைகளை பலப்படுத்திப் பாதுக்காப்பது அமெரிக்காவிற்கு ஒரு சர்வ ரோக நிவாரணி என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது/வேரூன்றப்பட்டுள்ளது.
********
இந்த ஜோக் கேட்டிருப்பீர்கள்: எல்லையில் ஒரு செக் போஸ்டில் ஒரு காவல்காரன் நின்று கொண்டிருந்தான். மெக்ஸிகோவிலிருந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒருவன் வந்தான். “ஏதாவது கடத்துகிறாயா?” காவல்காரன் கேட்டான். வந்தவன் “இல்லை சார்“ என்று சொன்னான். காவல்காரன் சைக்கிளை நன்கு பரிசோதித்துப் பார்த்தான். ஒன்றுமில்லை. ‘போய் வா' என்று அனுப்பி விட்டான். மறுநாளும் அதே ஆள் வந்தான், சைக்கிளில். இன்றும் பரிசோதித்து அனுப்பி விட்டான். இது போல் பல நாட்கள் கழிந்தன. காவல்காரனுக்குக் கடுமையான சந்தேகம் - இவன் கண்டிப்பாக எதையோ கடத்துகிறான் என்று. என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல், பல நாட்கள் கழித்து அவனிடம் ‘இதோ பார், நீ எதையோ கடத்துகிறாய் என்று தெரிகிறது, என்ன கடத்துகிறாய்? தயவு செய்து சொல்லி விடு, உன்னை மறுபடி பரிசோதிக்கவே மாட்டேன்’ என்று கெஞ்சிக் கேட்டான். வந்தவன் கொஞ்சம் தயங்கி விட்டுச் சொன்னான்:
‘நான் கடத்துவது சைக்கிள்களை!'
இப்பொழுது மக்கள் தம்மைத் தாமே கடத்திக் கொண்டிருக்கிறார்கள்..
********
என் தீர்வு:
1. வந்தவர்கள் வந்து விட்டார்கள் - அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குச் சட்ட பூர்வமாக தங்க அனுமதி அளித்து, பின் சொந்த நாடு திரும்புமாறு பணிக்க வேண்டும்.
2. தற்காலிக வேலை விசாக்கள் தாராளமாகக் கிடைக்க வேண்டும். விசா வழங்குதல் சீர்படுத்தப்பட்டு விரைவாக்கப்பட வேண்டும்.
3. சட்ட பூர்வமாக உள்ளே நுழைந்தவர்கள் குடிமக்களாக விரும்பினால் அதற்குப் பாதை வேண்டும்.
4. இவைகளைச் செய்து விட்டு எல்லைகளைக் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு கண்காணியுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை.
தமிழ்ப்பதிவுகள்