இட ஒதுக்கீடு குறித்து வலைப்பதிவுகளில் மக்கள்
ஏராள தாராளமாக எழுதி முடித்து விட்டதால், ஆட்டத்திற்கு மிகவும் லேட்டாக வருவது போல் ஒரு பக்கம் தோன்றுகிறது. ஆனால், இன்னொரு பக்கம், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த விவாதங்களின் படிமங்கள் துளியும் மாறாமல், அதே வார்த்தைகள் கொண்டு இன்றளவும் விவாதங்கள் நடப்பதைப் பார்க்கும் போது அவ்வளவொன்றும் தாமதமாகி விடவில்லை என்றும் தோன்றுகிறது.
மேலும், இந்த விஷயத்தில் எல்லாரும் ஆயாசமுற்றிருக்கும் இவ்வேளையில், என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுத் தப்பி விடலாம் என்ற மனக்கணக்கும் உண்டு :-)
For what it’s worth:
1. ‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறாயா, இல்லையா?’ என்ற கேள்வியை நான் நிராகரிக்கிறேன். அது ஒரு false choice. சாதியைப் பெருமளவில் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆனால் அதை மட்டுமே கணக்கில் கொள்ளாத
எஸ்.பி.உதயகுமாரின் முறையை முழுமையாக ஆதரிக்கிறேன். என் பார்வையில், இடஒதுக்கீடு என்பது ‘reparation’னோ, ‘restitution’னோ அல்ல. மாறாக, இன்றைய சமுதாயத்தை ஒரு சமச்சீரான ஒன்றாக மாற்ற அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உபாயங்களுள் (முக்கியமான) ஒன்று. அம்முயற்சியை வெறும் சாதி அடிப்படையில் மட்டும் நிகழ்த்தினால், அது வெற்று அரசியலே அன்றி வேறில்லை.
2. இடஒதுக்கீட்டால் தரம் தாழும், நாட்டின் வளர்ச்சி குறையும் என்பதெல்லாம் புல்ஷிட்.
3. தகுதி என்ற வார்த்தை வெற்றிகரமாக கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டு விட்டது. இடஒதுக்கீட்டினை முழுமையாக எதிர்ப்பவர்கள் அவ்வார்த்தையைக் கையாண்ட விதமே இதற்கு முக்கியக் காரணமென்றாலும், அவ்வார்த்தைக்கு இந்த அவப்பழி தேவையில்லை. இடஒதுக்கீடு அமலிலிருக்கும் சூழலிலும், தேவைக்கதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், தகுதி அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். வேறு வழியில்லை. ‘தகுதி' என்ற வார்த்தைக்கு பதில் ‘உழைப்பு' என்ற வார்த்தையை மாற்றிப் பயன்படுத்தினால் என்ன? ‘நான் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்து பரிட்சை எழுதினேன், எனக்கு இடம் கிடைக்கவில்லை' என்று சொல்லும் மாணவனிடம் வெளிப்படுவது தனது தகுதி அவமதிக்கப்பட்டது குறித்த கோபமில்லை, தனது உழைப்பு விரயமானதே என்ற விரக்தி தான்.
4. சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள் ‘creamy layer’ விவாதத்தின் போது மட்டும் ஏன் பின் வாங்குகிறார்கள், அல்லது தடுமாறுகிறார்கள்?
உதாரணம் - 1: பத்ரியின்
பதிவிலிருந்து:
பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?
பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.
உதாரணம் -2: ஞாநியின்
கட்டுரையிலிருந்து:
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் சின்னச் சின்ன பிரச்னைகள் உண்டுதான். பிற்படுத்தப்பட்ட சாதியிலும், தாழ்த்தப்பட்ட சாதியிலும் முதல் தலைமுறையாகக் குடும்பத்தில் படிக்க வருபவருக்கும், அந்தந்த சாதிக்குள் இருக்கும் ஏழைக்கும் முன்னுரிமை தேவைப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்னைகள் சாதி அடிப்படையை நீக்குவதால் தீரக்கூடியவை அல்ல. சாதி அடிப்படை ஒதுக்கீட்டைக் கொடுத்துவிட்டு, அதில் மேலும் என்ன சீர்திருத்தம் தேவை என்று யோசிப்பதே நியாயமானது.
உதாரணம்-3: பேராசிரியர் ராகுல் வர்மனின்
கட்டுரையிலிருந்து:
Let’s put the creamy layer argument also in perspective now. Point is that such elite education which has so many barriers – expensive and time consuming coaching, expensive education, elite culture, etc. is under the present order going to be a preserve only of a select few. All we are saying is whether it is going to be the preserve of a few higher castes or some of the other castes can also find an entry. Even if it is backward IAS’s daughter, so be it, finally many others are also IAS’s wards, so how does it make a difference? As has been rightly said by the critiques, it’s a populist measure for the votes. etc. But so is every single policy of the govt. and so it will be in a ‘vote bank democracy’ – either for the votes directly, or for generating resources for the next election. When an Ambani or an Enron is granted abominable concessions, why don’t we come on streets and say, “it is for money for the next elections.”
ஆக, பத்ரி ஜகா வாங்குகிறார், ஞாநி ஒத்திப்போடுகிறார், பேராசிரியரோ சுத்தமாக குழப்பி அடிக்கிறார்.
எனக்கு இதில் குழப்பமில்லை. இன்று இந்தியாவில் மிகத்தரமான உயர்கல்வி பெறத்தேவை இவ்வளவு, அதற்கு ஒரு குடும்ப வருமானத்தின் தேவை இவ்வளவு என்று மிகவும் தாராளமான கணக்குகளை முன்வைத்து, இதை விட அதிகம் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதில் என்ன தயக்கம்? உதாரணமாக, இன்றைய அளவில் மாதம் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சொல்வதில் யாருக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?
5. ஒட்டு மொத்த இடஒதுக்கீடு விஷயத்திலும் வடக்கிந்தியர்களின் கடுமையான பிற்போக்குவாதம் எரிச்சலளிக்கிறது. இங்கே (அமெரிக்காவில்) எனது அலுவலக நண்பரொருவர் (வடக்கிந்தியர்) எனக்கு மின்னஞ்சலில் ஒரு “ஜோக்“ அனுப்பினார். இந்தியாவில் இடஒதுக்கீட்டை கிண்டல் செய்யும் மோசமான துணுக்கு. நானும் அவரும் இட ஒதுக்கீடு குறித்துப் பேசியதே இல்லை. நான் கண்டிப்பாக இடஒதுக்கீட்டை எதிர்ப்பவனாகத் தான் இருப்பேன் என்ற அனுமானம் அவருக்கு ஏற்பட்டது எப்படி? இவ்விஷயத்தில் (இடஒதுக்கீட்டிற்கு எதிரான) ஒருமித்த கருத்து ஒன்று இருப்பதான பிரமை உண்டானது எதனால்?
6. அமெரிக்க அரசாங்கத்தின் ‘affirmative action’ மற்றும் ‘diversity’ திட்டங்களால் பயனடையும் இந்தியர்கள் அநேகம். குறிப்பாக வாஷிங்டனில் அரசாங்க காண்டிராக்டுகளுள் இவ்வளவு சதவிகிதம் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று சட்டங்கள் உண்டு. அவற்றிற்காக க்யூவில் நிற்கும் இந்தியர்களிடம் போய் இடஒதுக்கீடு பற்றி கருத்துக் கேட்க வேண்டும்.