<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, June 20, 2006

"ஒரு சதவிகிதம் வாய்ப்பிருந்தாலும்..."


செப்டம்பர் பதினொன்று தாக்குதலுக்குப் பின்னர் புஷ் அரசாங்கத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகள் பற்றிய ஒரு புதிய புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது. “The one percent doctrine” என்ற அப்புத்தகத்தப் பற்றி வாஷிங்டன் போஸ்டில் இன்றே ஒரு நூல் விமரிசனம் வெளியாகியியிருக்கிறது.

புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை என்றாலும், அது கூறுவதாக இவ்விமரிசனம் சொல்லும் செய்திகள் திகைக்க வைக்கின்றன. சில துளிகள்:

1. இது அடிப்படையில் அமெரிக்காவின் உளவுத்துறையில் (பெயர் வெளியிடப்படாது) உள்ளிருப்பவர்கள் சொல்லியதை வைத்து எழுதப்பட்ட புத்தகம். அன்றைய உளவுத்துறைத் தலைவர் ஜார்ஜ் டெனட்டை இப்புத்தகம் வெகுவாகப் புகழவில்லை என்றாலும், அவரை அதிகம் விமரிசனம் செய்யவில்லை. செப்டம்பர் பதினொன்று நிகழ்விற்கு டெனட்டின் மீது குற்றம் சாட்டி அவரைப் பதவியிலிருந்து விலக்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே, டெனட் புஷ்ஷிடம் மிகுந்த விசுவாசத்துடன் இருந்ததாக மட்டும் கூறுகிறது. இருப்பினும், இப்புத்தகம், சென்ற சில வருடங்களின் அமெரிக்க வரலாற்றை இந்நாட்டு உளவுத்துறை எப்படிப் பார்க்கிறது என்பதற்கான ஆவணமாகக் கருதப்படும் என்று தோன்றுகிறது.

2. செப்டம்பர் பதினொன்றிற்கு முன்பு புஷ் அரசாங்கம் எத்தனை மெத்தனமாக இருந்தது என்பதற்கு ஒரு நிகழ்ச்சி உதாரணம் காட்டப்படுகிறது: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏதோ நடக்கப் போகிறது, அல் கைதா ஒரு பெரு முயற்சியில் ஈடுபடுவதாக உளவுத்துறை கண்டறிந்ததாகவும், அதை புஷ்ஷிடம் சென்று விவரித்த போது (“Bin Ladin Determined to Strike in US” என்ற மெமோ), அதைக்கேட்ட புஷ் “சரி, உன் வேலை முடிந்தது, ஏதாவது நடந்தால் உன்னை இனி யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள்" (”All right, you have covered your ass, now“) என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

3. புத்தகத்தின் தலைப்பு, 2001-ஆம் வருடம் நவம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு சந்திப்பைப் பற்றியது. அந்த சமயத்தில், அமெரிக்க உளவுத்துறை பாகிஸ்தானில் இரண்டு அணு ஆயுத விஞ்ஞானிகள் பின் லேடனைச் சந்தித்ததாகவும், அவர்களிடம் பின் லேடன் அணுஆயுதம் தயாரிப்பது குறித்துத் தெரிந்து கொண்டதாகவும் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து ஜார்ஜ் டெனட் புஷ் உள்வட்டத்துடன் நடத்திய சந்திப்பில், சேனியின் கவனமெல்லாம் ஒரு விஷயத்தின் மீதே இருந்தது - அதிக இழப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு தாக்குதல் நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே இருந்தாலும், அப்படி ஒரு தாக்குதலைப் பற்றி அமெரிக்கா எப்படித் திட்டமிட வேண்டும் என்பது தான் அது. அந்த சந்திப்பில் முடிவான விஷயம் - ”பாகிஸ்தானிய விஞ்ஞானிகள் பின்லேடனிடம் அணுஆயுத ரகசியங்களைத் தந்தனர் என்பதன் சாத்தியக்கூறு ஒரு சதவிகிதமாகவே இருந்தாலும், அது கண்டிப்பாக நடந்த ஒரு விஷயமாகவே அமெரிக்கா பாவிக்க வேண்டும்". அதாவது, போர், படையெடுப்பு, தாக்குதல் இவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் தேவையில்லை, சாத்தியங்களே போதும், அதுவும் ஒரு சதவிகித சாத்தியமே போதும்! இரண்டு வருடங்கள் கழித்து ஈராக் விஷயத்தில் அவர்கள் எடுத்த முடிவுகளுக்கெல்லாம் முன்னோடியாக இந்த சிந்தனை இருந்திருக்கிறது என்பது இப்பொழுது புரிகிறது.

4. மார்ச் 2002-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அபு சுபைதா என்ற “தீவிரவாதியை" அமெரிக்கா கைது செய்தது. அமெரிக்கா அறிந்த வரை அவர் ஒரு மிக உயர்நிலை அல் கைதா தீவிரவாதி, பின்லேடனின் (எத்தனையோ) வலக்கரங்களில் ஒருவர். ஆனால், கைது செய்த பிறகு அப்படி எதுவும் இல்லை என்று மிகத் தெளிவாகப் புரிந்தது - காரணம், அபு சுபைதா ஒரு மனநிலை சரியில்லாதவர். சில சமயம் பின் லேடனின் சகாக்களின் குடும்பங்களுக்காக கார் ஓட்டியவர், அவ்வளவுதான். இருப்பினும் ஒரு பெரும் வெற்றியாக இது அறிவிக்கப்பட்டு, புஷ் உரை ஒன்றில் கொடுமையான தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர், டெனட்டை சந்தித்த புஷ், ‘என்ன, இவன் ஒரு முக்கியமான புள்ளி தானே, என் மானம் போகுமாறு ஆகி விடாதே?’ என்று கேட்டிருக்கிறார். டெனட் அதை ஆமோதித்த பிறகு, புஷ் சுபைதாவிடமிருந்து எப்படி ‘உண்மையை' வரவழைப்பது என்பதைப் பற்றி ஆலோசித்திருக்கிறார் - ‘இந்த சித்திரவதையெல்லாம் உண்மையிலேயே வேலை செய்யுமா?’ என்றும் கேட்டிருக்கிறார். இது நடந்த பிறகு சுபைதாவின் சிறைக்காவலர்கள் தன்னால் இயன்ற வரை ‘முயன்றிருக்கிறார்கள்'. மூழ்குவது போலச் செய்தல், கொலை மிரட்டல், மருந்துகளை நிறுத்துதல், அதீத வெளிச்சம், தூக்கமின்மை என்று பல நாட்களுக்குப் பின்னர், சுபைதா வாய்க்கு வந்தபடி இல்லாததையெல்லாம் கூற, அதைக் கேட்டு அமெரிக்காவில் Statue of liberty, Brooklyn bridge என்று தீவிரவாதத்துக்கு பயந்து அல்லாடியிருக்கிறார்கள்.

இவை உதாரணங்கள் மட்டும் தாம், புத்தகத்தில் மேலும் சங்கதிகள் இருக்கும் என்று தோன்றுகிறது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger சிறில் அலெக்ஸ் said...

ம்ம்ம்..
படித்துவிட்டு விரிவாக பதிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

June 20, 2006 10:58 PM  
Blogger Srikanth Meenakshi said...

சிறில்,

உத்தேசம் தான்...நூலகத்தில் துண்டு போட்டு வைத்திருக்கிறேன் - வரிசை எண் 46! கையில் கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகலாம்...

நன்றி,

ஸ்ரீகாந்த்

June 21, 2006 8:08 AM  
Blogger வஜ்ரா said...

அடுத்த வருஷம் paper back ல அமேசான்.காம் லெ வாங்கிட்டுபோய்விடலாம் என்று நினைக்கிறேன்...

அது சரி, அமேரிக்க லிபரல்கள் சுதாரித்துக் கொண்டு அமேரிக்காவின் அரசாங்க மெத்தனத்தால் தீவிரவாதம் வளர்கிறது என்பதை சுட்டிக்காட்டி புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டனர்...

Will indian liberals question the brand of secularism that they seem to champion ?

June 21, 2006 9:26 AM  

Post a Comment

<< Home