ஒரு புத்தகமும் ஒரு புதிரும்
Mark Haddon
இது மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான புத்தகம்; நான் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தது.
மதியிறுக்க நோய் (Autism) பற்றி நான் முன்பு எழுதியிருக்கிறேன். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் மூளையில் வினோதமான பாதிப்புகளை உண்டாக்கி அவர்களது சொல், செயல், நடத்தை, பழக்க வழக்கங்களைப் பாதிக்கும் இந்நோயிற்கு இன்று வரை ஆதி அந்தம் தெரியவில்லை. இது பற்றி நான் எழுதிய அதே கால கட்டத்தில் சஞ்ஜீத் ஒரு அருமையான சிறுகதை ஒன்று எழுதியிருந்தார். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பார்வையில் எழுதப்பட்டது அக்கதை.
அந்தக் கதையைப் போலவே, இந்த நாவலும் முழுக்க முழுக்க ஒரு மதியிறுக்கச் சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டது. இங்கிலாந்தில் ஒரு சிறிய ஊரில் ஒரு தந்தையும் மகனும் வசிக்கிறார்கள். ஒரு நாள் அவர்களது வீட்டுக்கருகில் ஒரு வீட்டின் வாசலில் ஒரு நாய் இறந்து கிடக்கிறது. அந்த நாய் இறந்தது எப்படி என்பதை இந்தச் சிறுவன் துப்புத்துலக்குவதாக ஆரம்பிக்கும் இக்கதை மெல்ல மெல்ல அவனது வாழ்க்கை, பள்ளி, தந்தை, தாய் என அவனது உலகம் பற்றிய விவரங்களோடு விரிகிறது.
கதை அந்த நாயைப் பற்றியோ, அதன் மரணத்தைப் பற்றியோ இல்லை. மாறாக, மதியிறுக்கம் எப்படி ஒரு சிறுவனின் உலகப் பார்வையை மாற்றுகிறது, அவனது குடும்பத்தை பாதிக்கிறது, அவற்றை அச்சிறுவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பனவற்றைப் பற்றியது. சிறுவனின் பார்வையில் சொல்லப்படுவதால், அவனது சமூகத்தைப் பற்றிய புரிதல் அவனுக்கு வளர வளரத்தான் நமக்கு வளருகிறது. அவனது மனமும் உடலும் மேற்கொள்ளும் பயணங்களை நாமும் மேற்கொள்கிறோம். அவனுக்காகப் பரிதாபப்படுகிறோம், பதைபதைக்கிறோம், அவனது வெற்றிகளில் மிகவும் சந்தோஷம் கொள்கிறோம். கதையின் பிற்பகுதியில், அழத்தெரியாத அவனுக்காக மிகவும் அழுகிறோம்.
எளிமையாக சொல்லப்பட்ட அருமையான கதை. சிறிய புத்தகம் தான்; வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் படியுங்கள்.
புத்தகத்தில் வரும் சிறுவன் கணிதத்திலும் தர்க்கரீதியாக சிந்திப்பதிலும் மிகவும் கெட்டிக்காரன் (மதியிறுக்கக் குழந்தைகள் அனைவருக்கும் இத்தகைய விசேட சக்திகள் வாய்ப்பதில்லை). எந்த ஒரு விஷயத்தையும் உணர்வு பூர்வமாகப் பார்க்கத் தெரியாது தர்க்க ரீதியாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவன். புத்தகம் முழுவதும் கணக்குப் புதிர்களும் கேள்விகளும் நிறைய இடம் பெறுகின்றன. அவனது உலகத்தைப் புரிந்து கொள்வதற்கும் இப்புதிர்கள் அவனுக்கு உதவுகின்றன.
அப்படி வரும் ஒரு புதிர் கொஞ்சம் சுவாரசியமானது.
நமது சகுந்தலா தேவி போல், அமெரிக்காவில் மேரிலின் வான் சாவந்த் என்பவர் ஒரு புகழ் பெற்ற புதிர் மேதை. பல வருடங்களுக்கு முன்பு அவரிடம் இப்புதிர் சொல்லப்பட்ட போது அவர் ஒரு விடை சொன்னார். ஆனால், அவ்விடையை நாடு முழுவதிலும் பல கணிதப் பேராசிரியர்கள் தவறு என்று சொன்னார்கள். சில வாரங்கள் சச்சரவிற்குப் பின், மேரிலின் சொன்னது தான் சரி என்று நிரூபணமாயிற்று. இதைப் படித்த பின்னர், எனது நண்பர்களிடமும் இவ்விடையை ஸ்தாபிப்பதற்கு எனக்கு மிகவும் சிரமமாய் இருந்தது.
முஸ்தீபுகள் போதும். புதிர் இதோ:
"நீங்கள் ஒரு தொலைக்காட்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். போட்டியை நடத்துபவர், உங்களிடம் மூன்று மூடிய கதவுகளைக் காட்டுகிறார். ஒரு கதவின் பின்னால் ஒரு கார் இருக்கிறது என்றும் மீதி இரண்டு கதவுகளின் பின்னாலும் இரண்டு ஆடுகள் நிற்கின்றன என்றும் உங்களிடம் தெரிவிக்கிறார். ஒரு கதவைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறார். நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். உடனே அவர் மீதி இருக்கும் இரு கதவுகளில் ஒன்றைத் திறந்து, அதன் பின்னால் ஆடு நிற்பதைக் காட்டுகிறார். இப்பொழுது அவர் உங்களிடம் கேட்கிறார் - "உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன், நீங்கள் முதலில் சொன்ன கதவைத் திறக்கட்டுமா, இல்லை உங்கள் தேர்வை மாற்றிக் கொள்கிறீர்களா?" என்று. உங்கள் பதில் என்ன?"
அதாவது, உங்கள் தேர்வை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்கள் வெற்றி வாய்ப்பு கூடுகிறதா என்பது கேள்வி.
விடைக்கான சுட்டி கீழே இருக்கிறது. யோசித்து விட்டு சரி பாருங்கள்.
விடையும் விளக்கமும்.
தமிழ்ப்பதிவுகள்