<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, February 12, 2006

ரங்க் தே பசந்தி - ஒரு அரசியல் பார்வை

(Warning: spoilers ahead)

ரங்க் தே பசந்தி நல்ல படம் தான் - தொழில் நுட்ப ரீதியாகவும், கலை ரீதியாகவும் ரொம்பவும் ரசிக்கத்தகுந்த படம் தான். இருப்பினும் அதில் இரண்டு முக்கியமான குறைகள் உள்ளன.

1. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செய்திகளைத் தாங்கி வரும் இப்படம் கட்சி சாய்மானங்களுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் அரசியல் கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் காட்டப்படுவது சந்தேகமில்லாமல் பிஜேபியைக் குறிக்கும் ஒரு காவிக்கரைக் கட்சி. நம் நாட்டில் லஞ்சமும் ஊழலும் கட்சி பேதமில்லாத குறைபாடுகள் என்ற உண்மையை இத்தகைய சித்தரிப்பு மறைக்கிறது. ஒரு காவிக்கரைக் கட்சியைக் காண்பித்ததில் தவறில்லை - அதுல் குல்கர்னியின் (லக்ஷ்மண்) பாத்திரப்படைப்பிற்கும், கலாச்சாரக் காவலர்களின் நடத்தைக்கு எடுத்துக்காட்டாகவும் அது தேவைப்பட்டதாகக் கொள்ளலாம். ஆனால், ஒரு அராஜகமான, நேர்மையற்ற அரசாங்கமும் அவர்களாலேயே நடத்தப்படுவதாகக் காட்டுவது நாட்டின் குறைபாட்டைக் காட்டுவதாக இல்லாமல், ஒரு கட்சியின், அமைப்பின் குறைபாட்டைக் காண்பிப்பதாக முடிகிறது. தீவிர தேசியவாதிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் கூட மோசமான அரசியலுக்கும் தேசத்துரோகத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று காண்பிப்பதற்காக இது பயன்பட்டாலும், படத்தின் பரந்த கருத்திற்கு எதிராகவே இது செயல்படுகிறது. அதாவது, நாடு தழுவிய விழிப்புணர்ச்சியும், தியாகசிந்தனையுடன் கூடிய போராட்டமும் தேவை என்ற கருத்திற்கு இந்தக் குறுகிய சித்தரிப்பு முரணாக இருக்கிறது.

2. மிக் ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதும், அவை குறித்த சர்ச்சைகளும் சமீப வரலாற்றுச் செய்திகள். அவ்விபத்துக்களின் பின்புலனில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கு ஆதாரபூர்வமான செய்திகளோ அறிக்கைகளோ எவையும் இல்லை. இப்படத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஊழல் நடந்திருக்கலாம் என்று எனக்கு பலத்த ஐயப்பாடு இருந்த போதிலும், ஒரு தனி மனிதனின் சிந்தனை என்பதற்கு அப்பால் என்னிடம் எதுவும் இல்லை. இந்நிலையில் இப்படத்தில் இது குறித்து ஒரு ஊழல் குற்றச்சாட்டை வைப்பது மட்டுமில்லாமல், வெளிப்படையாக அதில் ராணுவ மந்திரிக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல் காண்பித்திருக்கிறார்கள். இது தவறு. ஒன்று அடையாளம் தெரியாத இடைத்தரகர்களை கெட்டவர்களாகக் காண்பித்து விட்டு, வேண்டுமானால் அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் பூடகமாகக் காட்டியிருக்கலாம். அல்லது குறிப்பாக மிக் ரக விமானங்களின் விபத்துக்களைப் பயன்படுத்தாமல், வேறு ஒரு கற்பனை ராணுவ ஊழலைச் சித்தரித்திருக்கலாம். இரண்டையும் செய்யாமல், நிஜச் செய்திக்குப் பின்னால் குற்றமிருப்பதாகக் காட்டி விட்டு, ஒரு "கற்பனை" ராணுவ மந்திரியைக் குற்றவாளியாகச் சித்தரித்திருப்பது யோக்கியமற்ற செயல். இதில் குற்றம் சாட்டப்படும் மந்திரி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என்பதை மேலும் ஊர்ஜிதம் செய்யும் விதமாக படத்தில் மந்திரி ஒரு மிக் விமானத்தில் பொது மக்களின் காட்சிக்காக பயணப்படுவது குறித்துப் பேசுவதாக ஒரு காட்சி வேறு (ஃபெர்னாண்டஸ் அது போல ஒரு பயணம் மேற்கொண்டார்). மேலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை - மாறாக, நேர்மையானவர், எளிமையானவர் என்று பெயரெடுத்தவர். அவர் இதையெல்லாம் செய்திருக்கவே மாட்டார் என்று சொல்ல வரவில்லை - ஊழல் நடந்தது என்பதற்கோ, அன்றைய ராணுவ மந்திரிக்குத் தொடர்பு இருந்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அத்தகைய சித்தரிப்பு தவறு என்று மட்டுமே சொல்கிறேன்.

படம் வெளியாவதற்கு முன்னால், இன்றைய மந்திரி ப்ரணாப் முகர்ஜி படத்தைப் பார்த்து விட்டு ஓகே சொன்னாராம். ஏன் சொல்ல மாட்டார்? முந்தைய ஆளும் கட்சிக்கு ஒரு மட்டையடி, முந்தைய ராணுவ மந்திரிக்கு ஒரு சாட்டையடி, டபுள் ஓகே!!

ஒரு விவாத முழுமைக்காக மிக் விமான விபத்துகள் குறித்து ஒரு பழைய செய்தி.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

6 Comments:

Blogger Santhosh said...

நீங்க செல்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அப்படி பாத்தா எல்லா அரசியல் படங்களும் யாராவது ஒருத்தரை நினைவுபடுத்தும், நீங்க செல்கிற மாதிரி காந்தி தொப்பி போட்டா காங்கிரஸ் காரன் காவி வேட்டி கேட்டா பிஜேபிகாரன் அப்படின்னு செல்லிவிடமுடியாது. படத்தை பார்க்கும் போது அப்படி தோன்றவில்லை. நீங்க இரண்டாவதாக் செல்லி இருப்பது போல பாத்தா எந்த அரசியல்வாதியையும் குற்றம் சாட்ட முடியாது, எவ்வளவு படங்களில் பிரதமர் தீவிரவாதிகளுக்கு துணைபோவது போலவும், உள்துறை அமைச்சர் தீவிரவாதி தலைவர் போலவும் காட்டப்பட்டு உள்ளனர். நீங்க செல்வதற்கும் ஆதி படத்தை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம் நடத்தியதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. படைப்பாளிகளை கருத்துக்களை சுதந்திரமா செல்ல விடுங்க சார்.

February 12, 2006 11:13 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சந்தோஷ் கருத்தில் எனக்கும் உடன்பாடு..
மயிலாடுதுறை சிவா...

February 12, 2006 11:27 PM  
Blogger dvetrivel said...

அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைசியில் ஆயுதத்தை கையில் ஆந்துவது தான் வழி என காண்பித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படம் குறித்து நானும் ஒரு தகவலை பதிவு சொய்துள்ளேன்!

February 13, 2006 12:06 AM  
Blogger Amar said...

மிக்-21 ரக விமாங்கள் மட்டும் இந்தியாவிடம் சுமார் 400க்கும் மேல் இருக்கின்றன்.

பொதுவாக ஆயிரம் விமாங்கள் இருக்கும் ஒரு விமான்படையில் வருடம் பத்து விமாங்கள் கீழே விழும்.
Attrition.

அதுவும் 1970களில் வாங்கிய விமாங்கள்.கொஞ்சம் வயசாகிவிட்டது.

மிக்-21 Attrition ratesகளை பற்றிய ஒரு சிறந்த ஆய்வு இங்கே உள்ளது.

The cinema peopel merely milk our money in the name of our Country and our patriotism.

Observe how Amir Khan waxes eloquent in TV shows as to how "national boundaries" are disappearing and world is getting transformed into a "global village"

February 13, 2006 12:43 AM  
Blogger Srikanth Meenakshi said...

சந்தோஷ், சிவா,

இது படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் பற்றிய கேள்வி இல்லை. இதே கதையை ஒரு கற்பனை ஊழலை வைத்துக் கொண்டு சொல்லியிருக்க முடியும். அல்லது ஒரு அடையாளம் காணாத மந்திரியைச் சுட்டுவதாகவும் சொல்லியிருக்க முடியும். அப்படியெல்லாம் செய்யாமல், ஒரு நிஜ நிகழ்வை வைத்து ஒரு குறிப்பிட்ட மந்திரியைக் குற்றம் சாட்டியது சரியில்லை. வக்கீல்/டாக்டர்களுள் நேர்மையற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கும், இந்த வக்கீல்/டாக்டர் நேர்மையற்றவர் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. Fahrenheit 9/11 போலவோ, Why we fight போலவோ இந்த நிகழ்ச்சியை வைத்து ஆதாரங்களோடு ஒரு ஆவணப்படம் தயாரிக்கட்டும், கண்டிப்பாக அதை ஆதரிப்பேன். ஆனால், கற்பனை, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், குறிப்பிடக் கூடிய ஒருவரின் பேரில் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது Slander.

நீங்கள் சொல்லும் உதாரணங்களில் (பிரதமர்/உள்துறை அமைச்சர்) ஒரு குறிப்பிட்ட உண்மை நிகழ்ச்சிக்குப் பின்னால் அவர்கள் இருந்ததாகக் காண்பித்திருந்தால், அதுவும் தவறே. அப்படி இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. பொதுவாக பிரதமர் என்று சொன்னால் அது எந்தப் பிரதமராகவும் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு நிஜ நிகழ்வோடு முடிச்சுப் போடும் போது ஒரு குறிப்பிட்டவரைச் சுட்டுவதாக அமைகிறது. அந்த முக்கிய வித்தியாசத்தில் தான் தவறு இருக்கிறது.

February 13, 2006 8:19 AM  
Blogger வெளிகண்ட நாதர் said...

//படம் வெளியாவதற்கு முன்னால், இன்றைய மந்திரி ப்ரணாப் முகர்ஜி படத்தைப் பார்த்து விட்டு ஓகே சொன்னாராம். ஏன் சொல்ல மாட்டார்? முந்தைய ஆளும் கட்சிக்கு ஒரு மட்டையடி, முந்தைய ராணுவ மந்திரிக்கு ஒரு சாட்டையடி, டபுள் ஓகே!!//

இந்த படத்தை பாதுகாப்பு துறை மந்திரியன்றி, இந்திய ராணுவத்திற்கும் போட்டு காண்பிக்கப்பட்டது, அவர்களின் தணிக்கைக்குப் பிறகே படம் வெளியடப்பட்டது என்பதை அறிந்தேன். உண்மை சம்பங்களை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களின் மையகருத்து எப்படி கையாளப்படுகிறத்தென்பதை பார்ப்பது நன்று. கதை சம்பந்தப்பட்டிருக்கும் தனிநபர்களை அந்த கோணத்தில் வைத்து பார்ப்பதென்பது காண்பவர்களை பொறுத்தது. அப்படி பார்த்தால், மணிரத்தனம் போன்றோர் எடுக்கும் படங்களை எப்படி சொல்வது? உங்களை போன்ற உணர்ச்சி வெடிப்பே, அவர் வீட்டில் குண்டு வெடிப்பு உண்டாகக் காரணமாயிற்று! சினிமாவின் நிழல் பிம்பங்களை தாக்கத்துடன் விமரிசனம் செய்துவிட்டு, வாழ்க்கையின் பொழுது போக்கு அம்சமாக கொண்டாடுவதே நன்று.

February 13, 2006 12:05 PM  

Post a Comment

<< Home