<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, February 15, 2006

சுஜாதாவின் 'பூக்குட்டி'


எழுத்தாளர் சுஜாதாவின் கையொப்பத்தோடு அவரது குழந்தைகளுக்கான புத்தகமான 'பூக்குட்டி' இன்று வீடு வந்து சேர்ந்தது (நன்றி: எனி இந்தியன்). அழகான, கைக்கடக்கமான புத்தகம் - இளஞ்சிவப்பு வண்ணத்தில் தடிமனான அட்டையும், வழவழப்பான உயர் ரகத் தாள்களும், பெரிய எழுத்துக்களும், மிக அழகான வண்னப் படங்களும் கூடி, "ஆங்கிலப் புத்தகங்களின் தரத்துக்கு ஈடாக தமிழ்ப் புத்தகங்கள் வர வேண்டும்" என்ற ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப இருக்கிறது.

புத்தகத்தின் கதை விம்மு என்ற ஒரு சிறுமியையும், வேலாயி என்ற அவளது புதிய தோழியையும் மற்றும் பூக்குட்டி என்ற அவர்களது நாய்க்குட்டியையும் பற்றியது. விம்மு ஒரு மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள்; தோழி ஒரு ஏழை குப்பத்துக் குழந்தை. இவர்களது நட்பை விம்முவின் பள்ளி மற்றும் குடும்பம் ஏற்க மறுக்கிறது. அந்த மறுப்பை இக்குழந்தைகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதாகக் கதை செல்கிறது. சுவாரசியமாகவும், சுபமாகவும் முடிகிறது.

இது கொஞ்சம் கனமான கதைதான். கதையின் மொழியும் உள்ளடக்கமும், இதை ஒரு 7-8 வயதுக் குழந்தைகளுக்குப் பொருத்தமாகச் செய்கிறது என்று நினைக்கிறேன். முதலில் இக்கதையைப் படித்ததும், குழந்தைகள் கதை இவ்வளவு ஆழமாக இருக்க வேண்டுமா, இத்தனைச் சமூகக் கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியமா என்றுதான் தோன்றியது. இன்னொரு புறம், இதில் என்ன தவறு, குழந்தைகள் தினமும் காணும் உலகைப் பிரதிபலிப்பதாக அவர்கள் படிக்கும் கதைகள் இருப்பது நல்லது தானே என்றும் தோன்றியது. இங்கே அமெரிக்காவில், குழந்தைகள் புத்தகங்கள் பிரச்னைகளைக் கூட ரொம்பப் பூடகமாகத் தான் சொல்லும், எரிச்சல், வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் வார்த்தைகளில் வரா. கோபம் கூட ஒரு மிகைச்சித்திரமாக, கார்ட்டூன் கோபம் போலத் தான் இருக்கும். 'பூக்குட்டி'யைப் படித்ததும் தோன்றிய முதல் எண்ணங்கள், அமெரிக்காவில் இவற்றைப் படித்ததன் விளைவாக இருக்கலாம். இப்புத்தகம் ஒரு குழந்தையிடம் எப்படி உரையாடுகிறது, அதுவும் முக்கியமாக இந்தியச் சூழலில், என்பதே இக்கதையின் கருவும் மொழியும் பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.

பல விதங்களில் இது வரவேற்கப்பட வேண்டிய, வாழ்த்தப்பட வேண்டிய முயற்சி. ஒரு மூத்த, பிரபலமான எழுத்தாளர் இதைச் செய்திருப்பது என் போன்றவர்களை மேலும் ஆர்வம் கொள்ளச் செய்யும் (செய்தது) என்பதும் உண்மை.

புத்தகத்தில் சில குறைபாடுகளும் உள்ளன:

1. புத்தகத்தின் பின்னட்டையில் "தமிழ் கற்றுத் தரவும் உதவக் கூடிய கதைப் புத்தகம் இது" என்று சொல்லியிருக்கிறார்கள். மொழிக் கல்விக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மிக, மிக கவனமாக பிழை திருத்தம் செய்யப்படும். இப்புத்தகத்தில் இன்னமும் கவனமாக இருந்திருக்கலாம்:

"விம்முக்கு நிறைய்ய பொம்மைகள் இருந்தன. அவற்றில் அழுக்கான ஒரு கரடிக் குட்டிதான் அவளுக்கு பிரியம்"

என்பதை

"விம்முவிடம் நிறைய்ய பொம்மைகள் இருந்தன. அவற்றில் (அவற்றுள்?) அழுக்கான ஒரு கரடிக் குட்டிதான் அவளுக்கு பிரியமானது"

என்றும் சொல்லலாம்.

"எதும் பூக்குட்டி மாதிரி வராது" என்பதை "எதுவும் பூக்குட்டி மாதிரி வராது" என்று.

2. ஒரு இடத்தில் பட பேதம் இருக்கிறது - பதினான்காம் பக்கத்தில் வீட்டு வாசலில் "ஒருவன் சாக்குப்பையுடன் வாசலில் நிற்க", படத்தில் ஒரு பெண்மணி நிற்கிறாள். குழந்தைகள் புத்தகங்கள் பல முறை படிக்கப்படும், இது போன்ற பிழைகள் ஒவ்வொரு முறையும் தெரியும்.

3. படங்கள் பொதுவாக நன்றாக இருக்கின்றன, குறிப்பாக விம்முவின் முக பாவங்கள். ஆயினும், சில படங்கள் (உதாரணம் பக்கம் 13) ரொம்பத் தெளிவு குறைவாக இருக்கின்றன.

4. சில சுஜாதா பாணிகளைத் தவிர்த்திருக்கலாம் - இது குழந்தைகள் புத்தகம். உதாரணங்கள் - "அந்தப் பெண் விம்முவை விரோதமாகப் பார்த்தாள்", "போலீஸ்காரங்க புடிச்சாங்கன்னா நம்ம மேல தான் பயி (sic) சொல்லுவான்".

இக்குறைகள் சரி செய்யப்பட்டால், குழந்தைகளைப் பற்றிய இப்புத்தகம், குழந்தைகளுக்கான, இன்னமும் சிறப்பானதொரு புத்தகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கையொப்பமிட்டு அனுப்பிய சுஜாதா அவர்களுக்கு நன்றி.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

0 Comments:

Post a Comment

<< Home