<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Monday, September 26, 2005

அமெரிக்காவில் ஈராக்

வடிந்து கொண்டிருக்கும் வெள்ளங்கள் விட்டுச் சென்றிருக்கும் செலவுகள் அமெரிக்காவில் மீண்டும் ஈராக் குறித்த விவாதங்களை நடுமேடைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. ஈராக் மண்ணை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பது போல், அமெரிக்க மனங்களை ஈராக் கவலைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. தள்ளாடிக் கொண்டிருந்த போர் வண்டி, காத்ரீனாவின் காற்றில் குடை சாய்ந்திருக்கிறது.

இந்த காலத்தின் கட்டாயக் கதாநாயகியாக உருவாகி இருப்பவர் சிண்டி ஷீஹன் என்னும் பெண்மணி. ஈன்ற மகன் போர்க்களம் சென்று வீர மரணம் எய்த, நீதி கேட்டு மன்னனின் அரண்மனை வாசலில் வந்து முறையிட்டுக் கொண்டிருக்கிறார். புறநானூறு meets சிலப்பதிகாரம். இவர் தலைமையில் வாஷிங்டனில் சென்ற வாரயிறுதியில் மிகப் பெரிய போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இதற்கு ஆதரவாக ஒரு லட்சம் பேருக்கு மேல் திரண்டதும், இவர்களை எதிர்த்து (போரை ஆதரித்து) சுமார் இருநூறு பேர் வந்திருந்ததும் எளிதில் புறக்கணிக்கக் கூடிய செய்தியில்லை.



அமெரிக்க சட்டப்படி ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான சட்டபூர்வமான உரிமை இந்த நாட்டின் பாராளுமன்றமான காங்கிரஸிற்குத் தான் உண்டு. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு, ஈராக் விஷயத்தில் காங்கிரஸ் இந்த உரிமையை ஜார்ஜ் புஷ்ஷிற்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. இந்தத் தாரை வார்த்தலில் எதிர்கட்சியின் பங்கும் உண்டு. ஆதலால், இது நாள் வரையிலும் ஈராக் போரை எதிர்ப்பதில் ஜனநாயகக் கட்சியின் குரல் இந்த ஓட்டை நியாயப்படுத்த வேண்டிய தர்மசங்கடத்தில் அமுங்கிக் கிடக்கிறது. அரசியல் எதிர்ப்பை ஒரு பெட்டிக்குள் பூட்டி வைக்க புஷ்ஷிற்கு வசதியாக இருந்தது.

ஆனால், இப்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருப்பது மக்கள் குரல். இவர்களில் சிலர் 'Make love, not war' வகை. அறுபதுகளிலிருந்து மீளாதவர்கள். இவர்கள் பிடித்திருக்கும் அட்டைகளை வாங்கி உதறினால் வியட்நாம் காலத்து புழுதி விழும். மற்றவர்கள் ஈராக் போரை எதிர்ப்பவர்கள் - ஈராக் போர் முழுத் தவறு, ஆதலால், அமெரிக்கப் படைகளை இன்றே வாபஸ் வாங்கு என்பவர்கள். முதலாமவர்களை உதாசீனப்படுத்துவது எளிது; ஆனால், இரண்டாம் வகையினரின் வாயை மூடுவது அவ்வளவு சுலபமில்லை. பாமரத்தனாமான வாதங்களை முன்வைத்து மக்களை முட்டாளடித்துக் கொண்டிருக்கும் புஷ் அரசிடம், 'மீளக் கட்டப் படவேண்டியது லூஸியானாவா? ஈராக்கா?" என்ற பாமரத்தனமான கேள்விக்கு விடையில்லை.

இன்றைய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வியட்நாம் வீடு என்று பெயர் வைக்கலாம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger Mookku Sundar said...

//இன்றைய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வியட்நாம் வீடு என்று பெயர் வைக்கலாம்.//

அய்யோ..அவ்ளோ அழுவாச்சி ஆயிட்டுதா..? ! :-)

September 27, 2005 5:56 PM  
Blogger பாபு said...

நல்ல பதிவு.

October 02, 2005 7:34 AM  

Post a Comment

<< Home