<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Thursday, September 08, 2005

அன்பே சிவம்

எனக்குத் தெரிந்து எனது நண்பர்கள் (ஏன், தமிழ் வலைப்பதிவாளர்கள் கூடத்தான்) அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அனைவருக்கும், 'அன்பே சிவம்' படம் அவர்களது பிடித்த படப்பட்டியலில் இடம் பெறுவதுதான்.

எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம் அது. அது வந்த புதிதில் நான் எழுதிய விமர்சனத்திலிருந்து சில பகுதிகள்:


ஒரு தொழிற்சங்க சகாவிற்கும், ஒரு புதுப் பொருளாதாரம் சார்ந்த இளைஞனுக்கும் இடையே மோதலோடு உருவாகும் பழக்கம் எப்படி ஒரு பிரயாணத்தின் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என்பது கதை. நடுவில், ஒன்றிரண்டு விபத்துக்கள், கொஞ்சம் வெள்ளம், ஒரு வீதி நாடகம், சில கோஷங்கள், கிரண், ஒரு சண்டை, ஒரு டூயட் என இத்யாதிகள்.

முதலில் படத்தின் நல்ல விஷயங்களை பார்த்து விடுவோம். கமல்ஹாசனின் வித்தியாசமான முகத்தோற்றம் வெறும் ஒப்பனை சாகசமல்ல என்பது அவரது கன்னத்து தசைச் சொடுக்கிலிருந்தே தெளிவு. இது போன்ற ஒரு தோற்ற மாற்றத்தை கமல் போன்று ஒரு முழுமையான கலைஞனால் தான் உருவாக்க முடியும். இது சாகசத்தால் வந்ததல்ல; சாதகத்தால் வந்தது. மற்றபடி படத்தில் ஒளிப்பதிவு மிக அருமை. ஆரம்ப ஒரிஸ்ஸா நகர்ப்புற வெள்ளக் காட்சிகள், அந்த அத்துவான ஆந்திர ரயில் நிலையம், கடலோரப் பேருந்துப் பிரயாணம் எனப் பல உதாரணங்கள். இசையும் படத்திற்கு ஆர்ப்பாட்டமற்ற இனிமையைச் சேர்க்கிறது.

படத்தின் கருவும், அது சொல்ல வரும் கருத்தும் அதன் தலைப்பிலிருந்தே வெளிச்சம். வேறு பல விஷயங்களை விட அன்பு மனம் கொண்டிருத்தல் முக்கியம் என்பதை சில முரண்பாடுகளை முன்னிறுத்திச் சொல்ல வருகிறார்கள். பொருள் மற்றும் வணிக வெற்றி முக்கியமல்ல என்பதும் மாதவன் - கமல் இருவரது பாத்திரப் படைப்புக்களை வைத்து சொல்லப்படுகின்றன.

அதாவது மாதவனை ஒரு தாராளமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தை சார்ந்தவராகவும், கமலை கம்யூனிச சித்தாந்ததை பிரதிபலிப்பவராகவும் காண்பித்து, அவர்களது உரையாடல்கள் மற்றும் செயல்கள் மூலம், படத்தின் கருத்தை நிலை நாட்ட முயல்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற முக்கியமான தேவை, இந்த உரையாடல்கள் நேர்மையாகவும், அறிவொழுக்கம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மாதவனின் பாத்திரப் படைப்பு மகா மொண்ணையாக இருக்கிறது. ஒரு முட்டாளாக மட்டுமில்லை, கொஞ்சம் அல்ப குரூரத்தனமும் சேர்க்கப்பட்ட ஒரு குறை முதிர்ச்சிப் பாத்திரம். ஒரு ஆடு கூட இவரிடம் வாதம் பண்ணி வென்று விடும் என்பது போல் இருக்கிறது. இவரை நன்றாக துவைத்தெடுத்து விட்டு, கம்யூனிசத்தை அன்பிற்கு அடையாளமாக நிலை நாட்டி விட்டதாகச் சொல்கிறார்கள். கடுப்பு தான் மிஞ்சுகிறது.

உதாரணமாக, படத்தின் மத்தியில் வரும் ஒரு பிரபலமடைந்த வசனம்:

மாதவன்: என்ன சார், கம்யூனிசம், கம்யூனிசம்னுட்டு, அதான் சோவியத் யூனியனே உடைஞ்சிருச்சே, இன்னும் என்ன கம்யூனிசம்?

கமல்: ஏன் சார், தாஜ்மகால் இடிஞ்சிருச்சுன்னா காதல் செத்துடுச்சுன்னு அர்த்தமா?

<மேற்கூறிய வசனத்தில் மாதவனின் வரி சிறுபிள்ளைத்தனம், அதற்கு கமல் விடையும் அபத்தம். இருப்பினும் இவற்றைக்கூட மாற்ற வேண்டாம், இதே உரையாடல் அறிவொழுக்கத்துடன் மேலே தொடர்ந்தால் எப்படி இருக்கும்?>

மாதவன்: என்ன சொல்றீங்க, தாஜ்மகாலை 'காதலுக்குக் கல்லறை'ன்னு சொல்வாங்க, அப்போ, சோவியத்தை கம்யூனிசத்தின் கல்லறைன்னு சொல்றீங்களா? அது தவிர, ஒரு ராஜா ஏகப்பட்ட அடிமைகளை வச்சுக் கட்டின ஒரு கட்டிடத்தோட சோவியத் யூனியன ஒப்பிடறதுல இருக்கிற முரண்நகையை கவனிச்சீங்களா? சரி, அதல்லாம் விடுங்க...ஆயிரம் வருஷம் கழிச்சு இன்னிக்கு தாஜ்மகால் இடிஞ்சுதுன்னா, அது அந்தக் கட்டிடத்தின் பின்னால் இருந்த காதல்ங்கிற உணர்ச்சியோட தோல்வியில்ல, அந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பின் அல்லது அது கட்டப்பட்ட விதத்தின் தோல்வி தான். அதே மாதிரி, 70-80 வருடங்கள் கழித்து சோவியத் விழுந்ததுன்னா அது அதன் பின்னாடி இருந்த சித்தாந்தம் அல்லது அது செயல்படுத்தப்பட்ட விதத்தின் தோல்விதான்...இல்லையா?

கமல்: ம்ம்...நீங்க சொல்றது ஓரளவு உண்மை தான். நான் சொல்ல வந்தது என்னன்னா சோவியத்-ங்கிற முயற்சியுடைய தோல்வி, ஒட்டு மொத்த கம்யூனிச சித்தாந்தத்தின் தோல்வி இல்லைங்கிறதுதான்.

மாதவன்: சரி ஒத்துக்கறேன். ஆனால், கம்யூனிச சித்தாந்தப்படி அரசாங்கம் இருக்கற எங்க பார்த்தாலும், ஜனநாயகம் optional, பேச்சு சுதந்திரம் optional அப்டீன்னு இருக்கே, அத எப்படி ஒத்துக்கறது?

கமல்: ஏன் சார், ஜனநாயகம், பேச்சுரிமை இதெல்லாம் compulsory-ஆ இருக்கற நாடுகள்ளெல்லாம், சமத்துவம் optional, தொழிலாளர் நலன் optional, ஏன் வாழ உரிமையே optional-ன்னு இருக்கே, அது பரவாயில்லையா?

மாதவன்: இது ஒரு false choice. மேல புலி, கீழ பாம்பு எது வேணும்-ங்கிற மாதிரி...எனக்கு ரெண்டும் வேண்டாம், இது ரெண்டுல ஒண்ணு சரின்னு சொல்ற சித்தாந்தமும் வேண்டாம்.

கமல்: தம்பி, மக்கள் எல்லாரும் சமமா இருந்து, மதிக்கப்படற சமுதாயத்தில தான் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் இதுக்கெல்லாம் உண்மையான அர்த்தம் உண்டு, அதப் புரிஞ்சுக்கங்க...

மாதவன்: சரி சார், புரிஞ்சுடுத்து, போதுமா?

கமல்: ரொம்ப நல்லது, அப்ப படத்த இத்தோட முடிச்சுக்கலாமா?

மாதவன்: அப்போ, கிரண், நாசர் அவங்கெள்ளாம்?

கமல்: யோவ், இப்பொ சொன்ன டயலாகெல்லாம் படிச்சியா? படம் கண்டிப்பா ஊத்தப் போகுது, கொஞ்சம் காசாவது சேமிக்கலாம்...

படத்தின் மற்றுமொரு பெரும் குறைபாடு, அதன் பாத்திரப் படைப்புகளில் உள்ள செயற்கைத்தனம். மாதவனின் பலவீனமான பாத்திரம் பற்றி முன்னமே சொன்னேன். பொதுவாக கமல் படங்களில் அவரது பாத்திரம் மட்டுமாவது யோசனையோடு செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கமல் இரண்டு பாத்திரங்களாக அண்ணா கமல், தம்பி கமல் என்று இரட்டை வேடம் போடுவது போல் இருக்கிறது. முகத்தழும்புக் கமலின் அதீத வெகுளித்தனம் தனியே பார்க்கும் போது பொருத்தமாகத் தெரிந்தாலும், அது மீசைக் கமலின் தொடர்ச்சிப் பாத்திரம் என்று நம்புவதற்கு நிறைய கற்பனை தேவைப்படுகிறது.

நாசரின் பாத்திரம், இயல்பாக இருக்க முயற்சிக்கும் படத்தில் ஒரு நெருடலான மிகைச் சித்தரிப்பு. கிரண் கமல் படத்தில் கமலைக் காதலித்துத் தீர வேண்டும் என்ற திரை இலக்கணப்படி இயங்கும் பொம்மையாக வந்து போகிறார். சொல்லாமல் கொள்ளாமல் மனம் மாறி விடுகிறார்.

இந்தப் படத்துள் சென்றிருக்கும் உழைப்பை மட்டுமாவது கருதி, இதை ஒரு மோசமான படம் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. ஆயினும், ‘தேவர் மகனுக்கு’த் திரைக்கதை எழுதி, ‘குணா’, ‘மகாநதி’ போன்ற படங்களைத் தந்துள்ள கமல்ஹாசன், இதை விட யோக்கியமான, புத்திசாலித்தனமான படத்தை ‘வழங்க’ முடியும் என்பது நிச்சயம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

7 Comments:

Blogger ஜோ/Joe said...

தமிழில் வந்த ஒரு உருப்படியான படத்தையே கிழித்து தொங்கப்போட்டால் அறிவு ஜீவிகள் கூட்டத்தில் சேர்ந்து விடலாம் என்ற நப்பாசையில் எழுதப்பட்ட விமரிசனம்.

உங்கள் புத்திசாலித்தனத்துக்கு படம் எடுத்தால் இங்கு 2 நாள் கூட ஓடாது .இதை விட உருப்படியாக எடுக்க வேண்டும் என எழுதிக்கிழிப்பவர்களும் தியேட்டரில் போய் பார்க்கப் போவதில்லை .

ஏதோ கமல்ஹாசனை விட நீங்கள் புத்திசாலியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் .கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வந்தாலே ஏற்றுக்கொள்ளாத கூட்டத்திறகாக கூட்டத்திற்கு ,பெரிய சித்தாந்தங்களையும் அறிவு ஜீவித்தனத்தையும் உங்கள் எதிர்பார்ப்பு அளவுக்கு எடுத்து விட்டு ,தியேட்டருக்கு யாரும் போகாமல் ,அது பற்றிப்பேசும் உங்களை மாதிரி ரெண்டு பேர் VCD -க்காக காத்திருந்து பார்த்தால் போதும் ...நீங்கள் நினைக்குற மாதிரி படங்கள் வந்து குவிந்து விடாதா என்ன? ஏற்கனவே 'மகாநதி' யைவிட 'ரசிகன்' என்ற பக்திப்படம் அதிக நாள் ஓடியது தெரியாதா?

//இதை விட யோக்கியமான, புத்திசாலித்தனமான படத்தை ‘வழங்க’ முடியும் என்பது நிச்சயம்//

அவருக்கு வழங்க தெரியும் .நமக்கு வாங்க தெரியுமா? முதல்ல கூரையேறி கோழி பிடிப்போம் ..அப்புறம் வானம் ஏறி வைகுந்தம் போகலாம்.

September 08, 2005 10:11 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

அன்பே சிவம் தோற்றது ஏன்?

சந்தேகமில்லாமல் அன்பே சிவம் தமிழ்ச் சினிமாவில் ஒரு மாற்று முயற்சி. அத்தோடு என்னைப் பொறுத்தவரையில் சிறந்த படம். (உங்கள் விமர்சனம்கூட சிறந்த மாற்று முயற்சியென்று சொல்லப்படலாம்;-))
உப்புச் சப்பற்ற, அடிப்படையில் எந்தக் கதையுமில்லாத, நாயகர்களின் பராக்கிரமத்தையும் நாயகிகளின் உடம்பையும் பற்றிப் பேசுகிற, அருவருக்கத்தக்க நகைச்சுவைகள் தாங்கி வருகிற, கிட்டத்தட்ட ஒரே மாதிரி வந்துகொண்டிருக்கும் படங்களுள் இது நிச்சயமாக வித்தியாசமான படம்தான்.
குறைந்தபட்சம், பிரச்சாரத் தொனியில்லாது சர்ச்சைக்குரிய கருத்தைத் தொட்டதாவது பாராட்டப்பட வேண்டியதே.
தேவர் மகன் எந்தவிதத்தில் உயர்ந்தது, அன்பே சிவம் எந்தவிதத்தில் குறைந்ததென்று எனக்குப் புரியவில்லை.
ஆனால் திரைப்படங்கள் அவரவர் ரசனையைப் பொறுத்து மாறுபடும்.
எனக்குக்கூட மும்பை எக்பிரசை கோமாளிப் படமாகவும், சந்திரமுகியை ஆகா ஓகோ என்றும் போற்றி குறைந்தது 30 பதிவுகளாவது வந்தபோது ஆச்சரியமாய்த்தானிருந்தது.
பெரும்பான்மைக்குள் நானில்லையென்று இருந்துவிட்டேன்.

September 09, 2005 2:16 AM  
Blogger rajkumar said...

உங்கள் விமர்சனம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

மாதவன் பேசுவது சிறுபிள்ளைத்தனம் என்றால் அவ்வாறான சிறுபிள்ளைகளாகத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நாட்டின் ஆதாரப் பிரச்சனையை குறித்து ஒரு படம் வந்ததற்காக மகிழ்ச்சியடையாமல், மகாநதி, குணா என்று...

போங்க சார்.

அன்புடன்

ராஜ்குமார்

September 09, 2005 2:41 AM  
Blogger பூனைக்குட்டி said...

நல்ல ஒரு point of view.

September 09, 2005 3:26 AM  
Blogger Srikanth Meenakshi said...

ஜோ, நான் படத்தை தியேட்டரில் தான் சென்று பார்த்தேன். முதல் நாள், முதல் ஷோ. யாரையும் பெரிய சித்தாந்தத்தை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படிச் செய்தால் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பதும், இப்படம் அப்படி இல்லை என்பதும் என் கருத்து.

வசந்தன், தேவர்மகன் சிறந்த திரைக்கதை அமைப்புள்ள படம் என்பது என் கருத்து. அதன் தர்க்கத்துடனும், முடிவுடனும் எனக்குப் பிரச்னைகள் உண்டு. உங்கள் கருத்துப்படி 'அன்பே சிவம்' தமிழ்த் திரையுலகில் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதை ஏற்கிறேன். அந்த ஒரு காரணத்திற்காகவே அது பாரட்டப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ராஜ்குமர், நாட்டின் ஆதாரப் பிரச்னைகள் குறித்துப் பல படங்கள் வந்திருக்கின்றன, கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் பாராட்ட முடியாது. அப்படிச் சொன்னால், படத்திற்கு முன்னால் போடப்படுகின்ற 'பீகாரில் வெள்ளம்' டாக்குமெண்டரி தான் ஆகச்சிறந்த படம். மாதவன் போன்ற இளைஞர்கள் இருப்பதையும் மறுக்கவில்லை, அது போன்றவர்களை கிளைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தால் பரவாயில்லை, முக்கியப் பாத்திரம் மொண்ணையாகப் போனதுதான் எனக்கு வருத்தம்.

ராஜ், மோகந்தாஸ், நன்றி.

September 09, 2005 8:06 AM  
Blogger முகமூடி said...

எல்லாம் இருக்கட்டும்... அன்பே சிவம் வந்த புதிதில் எழுதிய விமர்சனத்திலிருந்து சில பகுதிகள, ஒரு யுகம் கழிச்சி இப்போ திடீர்னு திருப்பியும் தருவதற்கு காரணம் எதுவும் உண்டா..

September 09, 2005 9:37 PM  
Blogger Srikanth Meenakshi said...

முகமூடி, புதிதாய்க் காரணம் எதுவும் இல்லை. நான் வலைப்பதிவுகள் வாசிக்கத் துவங்கிய நாள் முதல் செய்ய வேண்டும் என்று நினைத்தது. சட்டென்று நினைவுக்கு வந்தது...அவ்வளவுதான்.

September 09, 2005 10:52 PM  

Post a Comment

<< Home