<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Saturday, June 25, 2005

ராம்கியின் 'ரஜினி: ச(கா)ப்தமா?' - ஒரு பார்வை

புத்தகம்: ரஜினி: ச(கா)ப்தமா? - ஜெ. ராம்கி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

சென்ற வருடம் இந்தியா சென்றிருந்த போது ராம்கியை அவரது சில நண்பர்களோடு சந்தித்தேன். தங்கமான இளைஞர்; ஆர்வமுள்ள, உற்சாகமான, நல்லன பல செய்ய விரும்பும் துடிப்பானவர். சுனாமி சமயத்தில் அவர் மேற்கொண்ட பல நற்பணிகள் வலைப்பதிவுலகத்தில் பிரசித்தம். இப்படிப்பட்ட ஒரு நண்பர் எழுதியுள்ள புத்தகத்தை என்னால் ரொம்பவும் விமரிசனம் செய்ய இயலாது.

எப்படி ராம்கியால் ரஜினியை ரொம்ப விமரிசனம் செய்ய முடியாதோ, அதே போல :-).

அது பற்றி பின்னர். முதலில், புத்தகம் பற்றி. ரஜினி என்ற மனிதரின் வாழ்க்கை, அவரது ஆளுமை தமிழ்ச் சமுதாயத்தில் உண்டு பண்ணின தாக்கம், அதை அவர் எதிர் கொண்ட விதம் என்று கடந்த இருபத்தைந்து - முப்பது ஆண்டுகளில் நடந்த வரலாற்றை விவரித்து, அலசும் சுவை குன்றாத புத்தகம் இது. ரஜினியின் பூர்விகத்தில் தொடங்கி, அவரது கலையுலக வாழ்க்கை தொடங்கிய விதம், சென்ற பாதை, எதிர் கொண்ட சவால்கள், எடுத்த முடிவுகள் எனப் பல விஷயங்களை தொகுத்து வழங்குகிறது.

சமீபத்திய வரலாறை எழுதுவதில் சில சிரமங்கள் உள்ளன. படிக்கும் பலருக்கும் நடந்த நிகழ்ச்சிகள் பலவும் நன்கு நினைவிருக்குமாதலால், மிகவும் கவனமாக எழுத வேண்டும். தவறிருந்தால் சுட்டிக்காட்டிக் குட்டுவதற்கும், தவறே இல்லாவிட்டால், "என்ன புதிதாக சொல்லி விட்டான்" என்று சொல்வதற்கும் தலா ஒரு கூட்டம் காத்திருக்கும். இவற்றிலிருந்து தப்பிபதற்கு இரண்டே வழிகள் தாம் உள்ளன - ஒன்று எழுதும் விஷயத்தில், சில விசேட அனுமதிகளின் மூலமாகவோ, திருட்டுத்தனமாக துப்பறிவதன் மூலமாகவோ, படிப்பவர்களுக்கு தெரியாத விஷயங்களை புத்தகத்தில் வெளிக் கொண்டுவருவது. இது ராம்கி போன்ற தனி மனிதரால் செய்யக் கூடியது அல்ல. (இஷ்டத்துக்குப் பொய் சொல்லியிருக்கலாமே என்று நினைப்பவர்கள் கட்டுரையின் முதல் வரிகளை மீண்டும் படிக்கவும்). இரண்டாவது வழி, பல வருட காலத்தில் நடந்த விஷயங்களை, பல தகவல் தளங்களிலிருந்து சேகரித்து, ஒன்றுபடுத்தி, நீக்க வேண்டியவற்றை நீக்கி, மற்றவற்றைத் தொகுத்து, சுவையான சுலபமான நடையில் எழுதி, படிப்பவர்களுக்கு அனைத்தையும் ஒரு சில பக்கங்களில் ஒரு கதை போலப் படித்து அசை போட வசதியாக அமைப்பது. இந்தப் புத்தகத்தில் ராம்கி இதை சிறப்பாகச் செய்துள்ளார்.

புத்தகத்தின் முதல் அத்தியாயம் ரஜினியின் குடும்பம், அவரது இளமை, அதன் அலைச்சல்கள், பிரயாணங்கள், முயற்சிகள் ஆகியவற்றை விவரிக்கிறது. ரஜினி - பாலசந்தரின் முதல் சந்திப்பைப் படிப்பது, நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்குப் பின் ரஜினியின் பிரபலத்தின் அசுர வளர்ச்சி, ஒரு தற்காலிக தேக்கம், மீண்டும் வளர்ச்சி ஆகியவற்றை விவரித்து விட்டு அவரது ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் அலசுகிறது.

ராம்கிக்கு இயல்பாகவே ஒரு எளிமையான, சிக்கலில்லாத நடை வாய்க்கப் பெற்றிருக்கிறது. ஏகப்பட்ட தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கிறார். ரஜினியின் பல நேர்முகங்கள், பத்திரிக்கைத் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் புத்தகம் முழுவதும் பொருத்தமான இடங்களில் இடம் பெறுகின்றன. ஒரு நல்ல கட்டுரையாளனுக்கு அழகு, தான் எழுதுவதை விட மிக அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பது. ராம்கி அதைச் செய்திருக்கிறார் என்பது தெளிவு.

இப்புத்தகம் கீழ்கண்ட விதங்களில் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம்:

1. ஒவ்வொரு அத்தியாயமும் சுவையாக இருக்கிறது. ஆனால், முதல் அத்தியாயத்திற்குப் பின்னர், ஒரு தெளிவான கால வரிசைக்கிரமம் இல்லை. ஆதலால், சில இடங்களில், ஒரு முன்னும் பின்னும் அலை பாயும் தன்மை தென்படுகிறது.

2. அத்தியாயங்களுக்கு, ரஜினியின் படங்களின் பெயர்களை வைத்தது சுவையான சாமர்த்தியம். ஆனால் கூடவே ஒரு உப தலைப்பையும் வைத்திருந்தால் இன்னமும் தெளிவாக இருந்திருக்கும் (உதாரணம்: 'பாயும் புலி' - ரஜினிக்கு அரசியல்வாதிகளின் எதிர்வினைகள்)

3. ராம்கி தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதைக் கடந்து எழுத மிகவும் மெனக்கெட்ட்ருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் அது சுலபமில்லை. ரஜினியின் தனி மனித ஒழுக்கம், அவரது நல்லிதயம் ஆகியவற்றில் எனக்குக் (எனக்குத் தெரிந்த பலருக்கும்) கேள்வியில்லை. ஆயினும் அவரது அரசியல் மற்றும் சமுதாய நிலைப்பாடுகள் விமரிசனப் பொருள்தான். அவரது இதயத்தில் இடம் பெற்றிருக்கும் ரசிகர்களோடு அவர் எந்த அளவிற்கு நேரடியாகப் பழகி இருக்கிறார்? சூப்பர் ஸ்டார் என்ற பீடத்திலிருந்து இறங்கி வந்து மக்களோடு உறவாட அவர் தயாரா? அவரது அரசியல் தலையீடுகளும், தானோ, தனது திரைப்படங்களோ, தனது நண்பர்களோ பாதிக்கப்பட்ட போது தானே நிகழ்ந்துள்ளன? பலத்த பரிசீலனைக்குப் பின் நிகழும் தனி மனித உதவிகள் தவிர தனது செல்வத்தையும் புகழையும் சமுதாயத்திற்காக எப்படி செலவழித்துள்ளார்? இவையெல்லாம், இந்தப் புத்தகம் அணுகாத முக்கியமான கேள்விகளாகப் படுகிறது. புத்தகத்தின் ஓரிடத்தில், "தமது படங்களைக் காட்டிலும் தனது ரசிகர்களின் மேல் அவருக்கு அக்கறை இருந்து வந்திருக்கிறது. வலுக்கட்டாயமாக அரசியல் அவர் மீது திணிக்கப்பட்ட போதும் கூட, சரியான பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்ததும் அந்த அக்கறையின் ஒரு வித வெளிப்பாடே என்கிறார்கள் ரஜினியை நன்கு அறிந்தவர்கள்" என்றும், மற்றோரிடத்தில், "ரஜினியின் மவுனத்திற்குக் காரணம், அமைப்பின் மீது கோபப்பட்டு எவ்விதப் பலனும் இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டது தான் என்று தெரிகிறது" என்றும் சொல்வது ஒரு ரசிகனின் rationalization-ஆகவே தெரிகிறது.

ரஜினியின் ஆளுமை புதிர்த்தன்மை வாய்ந்தது. அதைப் புரிந்து கொள்வது கடினமானது. புரிந்து கொண்டது போல் நடிப்பது சுலபமானது. ராம்கி அந்தத் தவறைச் செய்யாமல், ஒரு கவனமான நேர்மையுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ரஜினியின் வாழ்க்கை ஒரு சுவையான கட்டத்தில் இருக்கும் இந்நேரத்தில் இதுவரை நடந்ததை முழுமையாகத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஒரு தொடர்கதையின் நடுவில் வரும் முன்கதைச் சுருக்கம் போல.

இன்னமும் பத்தாண்டுகளில், இந்தப்புதிரின் பல கேள்விகளுக்கு விடை தெரியும் தருணத்தில், மீண்டும் இத்தகைய ஒரு புத்தகத்தை ராம்கி எழுத வேண்டும். அதற்கு முன் இதே ஆற்றொழுக்கான நடையில் வேறு பல புத்தகங்களையும் எழுத வேண்டும்.

இந்தப் புத்தகத்தின், அச்சும், தரமும் அருமை. எழுத்துப் பிழைகள் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தின் ராகவன், பத்ரி ஆகியோருக்கு நன்றி.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Jayaprakash Sampath said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீகாந்த். இந்த நூல் வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, வாங்கிப் படித்தேன். இந்த நூல் பற்றிய அபிப்ராயத்தை, நான் நேரடியாகவே, ராம்கி, பத்ரி, பா.ராகவன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டேன். நீண்ட நேரம் சென்ற அந்த விவாதத்தை, நான் என் பதிவிலேயே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒரு ஆச்சர்யம் என்ன என்றால், நீங்கள் சொன்ன பாய்ண்டுகளை எல்லாம் அவர்களுடன் நான் விவாதித்திருக்கிறேன்.

புத்தக வடிவமைப்பு, தகவல் பிழைகள், கருத்துப் பிழைகள் இல்லாமை, அச்சுத் தரம், நீரோட்டமான நடை, புதிய முயற்சி என்று புத்தகத்தில் பல நிறைகள் இருந்தாலும், எனக்குத் தோன்றிய சில குறைகள் ( நீங்கள் சொன்னதைத் தவிர்த்து)

1. ரஜினி ராம்கி ஆக அறியப்பட்டவர், இந்தப் புத்தகத்துக்காக தன் பெயரை ராம்கி என்று வைத்துக் கொண்டது, மோசமான செல்·ப் டி·பென்ஸ். ரஜினி ரசிகர்கள், சும்மா வெட்டி விவாதம், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் , போஸ்டர் ஒட்டுதல் என்பது மட்டும் தான் இல்லாமல், உருப்படியாக, பல கோணத்தில் சிந்திக்கவும், அதை தெளிவாக மக்களிடம் எடுத்துச் செல்லவும் வல்லவர்கள் என்பதை நிரூபித்திருக்கலாம். அந்தப் வாய்ப்ப்பைக் கோட்டை விட்டார் ரஜினி.

2. முதல் நாலைந்து அத்தியாயங்கள், மிகவும் விறுவிறுப்பாகவும், புதிய தகவல்களுடன் இருந்தது. ஆனால், அரசியல் விவகாரம் துவங்கிய உடன், எனக்கென்னமோ, நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் இதழ்களின் தொகுப்பைப் படிப்பது போலிருந்தது.

3. நாட்டில் பல சூப்பர்ஸ்டார்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ரஜினி ராம்கி, ஏன், ரஜினிகாந்தை ஒரு முக்கிய ஆளுமையாக நினைக்கிறார் என்பதற்கான விஷயத்தை, ஆசிரியர் கூற்றாக எங்கும் அடித்துச் சொல்லவில்லை.

4. நாம் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும்., ரஜினிகாந்தை, நல்ல நடிகர் என்று சொல்வதைக் காட்டிலும் நல்ல மனிதர் என்பதாகத்தான் புரிந்து வைத்து இருக்கிறார்கள். இதற்கான பலப்பல உதாரணங்கள் இருக்கின்றன. இவை மீடியாக்களிலும், அபூர்வமாகப் பதிவாகியுள்ளன. உதாரணமாக, கல்கி, ஆனந்த விகடன் போன்ற பெரு இதழ்களில் அனுபவத் தொடர் எழுதும் கலையுலகம், பொதுவாழ்க்கை தொடர்புள்ளவர்கள் பெரும்பான்மையானோருக்கு, ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஏதாவது சொல்ல விஷயம் இருந்திருக்கிறது. அந்த anecdotes எல்லாம் அங்கங்கே செருகி இருந்தால், சுவையாக இருந்திருக்கும். உதாரணமாக, சோழா ஷெராட்டன் தலைமை ஷெ·ப் ஆக இருந்த சுல்தான் மொய்தீன், பத்து வருடங்களுக்கு முன்பாக விகடனில் ஒரு அனுபவத் தொடர் எழுதினார். அதிலே, ரஜினிகாந்துடனான தன் அனுபவத்தை, சுவாரசியமாக ஒரு அத்தியாயத்துக்கு எழுதினார். அது போல, 25 வருடங்களுக்கு முன்பு, கமல், குமுதத்தில், 'களத்தூர் கண்ணம்மா முதல் கல்யாணராமன் வரை " என்று தொடர் எழுதி இருந்தார். அந்த தொடரில், அவர் ரஜினிகாந்த் பற்றிச் சொன்ன கருத்துக்கள் மிகவும் நேர்மையானவை, அந்நியோன்மையானவை. அவற்றை எல்லாம் மேற்கோள் காட்டி இருக்கிறார். இப்போது, இருவருமே, டிப்ளோமட்டிக்காகப் பேசத் துவங்கி விட்டார்கள் என்பது நினைவு படுத்திக் கொள்ளலாம்.

5.ரஜினிகாந்த் திரைப்படம் மக்களுக்கு சந்தோஷம் அளிப்பதற்காக வருபவை. அவர் ஒரு மெகா entertainer மட்டுமே. அவருடைய சுபாவத்துக்கு அரசியல் சரிவராது என்று சொந்தமாக நம்புகிற ரஜினிராம்கி, அதனை, ஆசிரியர் கூற்றாக, ஆணித் தரமாக, கொட்டை எழுத்தில் சொல்லி இருக்கவேண்டும்.

நன்றி

June 26, 2005 12:29 AM  
Blogger Kannan said...

ஸ்ரீகாந்த்,

நல்ல அறிமுகம். நன்றாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள், நன்றி.

June 26, 2005 4:54 AM  
Blogger Srikanth Meenakshi said...

பிரகாஷ்,

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்கள் முதல் கருத்துடன் நான் மாறுபடுகிறேன். ராம்கி என்று பெயர் மாற்றம் செய்திராவிட்டால், இந்தப் புத்தகத்தை உதாசீனப்படுத்துவதற்குப் பலருக்கு சௌகரியமாக இருந்திருக்கும். பதிப்பாளர், எழுத்தாளர் இருவருமே இதை விரும்ப மாட்டார்கள்.

மேலும் உங்கள் மூன்றாவது கருத்தும் வியப்பளிக்கிறது. ரஜினி தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்று நிறுவுவதற்காக ஒரு அத்தியாயத்தை செலவழித்திருந்தால், நான் கடுப்பாகி இருப்பேன் என்று நினைக்கிறேன்.

உங்கள் நான்காவது கருத்தையுமம், முக்கியமாக ஐந்தாவது கருத்தையும் நான் வழிமொழிகிறேன்.

நன்றி,

ஸ்ரீகாந்த்

June 26, 2005 7:44 AM  

Post a Comment

<< Home