ஒவியர் புகழேந்தி
குழந்தைவேலு புகழேந்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்திலும் நன்கு அறியப்பட்ட ஓவியர். பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார், பல விருதுகளை வாங்கியிருக்கிறார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப்பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் என்பதெல்லாம் அவரது Bio-data சமாச்சாரங்கள். அவரது ஓவியங்களின் தனித்துவம் அவற்றில் தெரியும் சமூக அக்கறையும், தார்மீகக் கோபமும், வீரியமுள்ள வெளிப்படையான உணர்ச்சிகளும்.
"பாதிக்கப்பட்டவர்களின் பெருமூச்சையே புகழேந்தி ஓவியங்களாய் விதைக்கிறார். பார்க்கிறவனோ பெருமூச்சையல்ல - புயலை அவர் ஓவியங்களிலிருந்து அறுவடை செய்கிறான். துன்பப்படுகிறவர்கள், தாழ்த்தப்படுகிறவர்கள், ஒடுக்கப்படுகிறவர்கள், மிதிக்கப்படுகிறவர்கள், கொல்லப்படுகிறவர்கள் பற்றியே அவரது ஓவியங்கள் துடிப்போடு பேசுகின்றன" என்கிறார் கவிஞர் காசி ஆனந்தன்.
சென்ற மாதம் ஈழத்தில் ஒரு கண்காட்சி நடத்தியிருக்கிறார்.
அவர் எனது நண்பர். ஹைதராபாத் கல்லூரியில் உடன் படித்தவர் (நான் கணினி, அவர் ஓவியம்). அவரது ஓவியங்களுக்காக ஒரு வலைத்தளத்தை சில காலமாக நான் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறேன். ரொம்பவும் பிரமாதமான வலைத்தளம் இல்லையென்றாலும், அவரது ஓவியங்கள் முழுவதையும் அதன் பார்வையரங்கில் (Gallery) ஏற்றி இருக்கிறேன்.
சமீபத்தில் அவரிடமிருந்து மூன்று புதிய தொகுப்புகள் என்னை வந்தடைந்தன. அவை:
- குஜராத் படுகொலை பற்றிய "புகைமூட்டம்" . மேலே இருப்பது புகைமூட்டத்திலிருந்து ஒரு ஓவியம்
- கோட்டோவியங்களாக "அதிரும் கோடுகள்"
- பல முக்கியமான பிரபலங்களின் முகங்களைச் சித்தரிக்கும் "முகவரிகள்"
இவற்றில் முகவரிகளுக்குள் நுழைவது சுலபம். புகைமூட்டமும், அதிரும் கோடுகளும் பெரும்பாலும் நவீன ஓவியங்கள். பொதுவாகவே, புகழின் நவீன ஓவியங்கள் இரு தளங்களில் இயங்குபவை. ஒன்று பார்வையாளருக்கு அணுக்கமாகவும், மற்றது ஓவியருக்கு அணுக்கமாகவும். ஓவியத்தைப் பார்த்ததும், அதன் கருப்பொருளும், முக்கியக் கருத்தும் புரிந்து விடும். அதைக் கடந்து இருக்கும் அர்த்தங்கள் - வண்ணங்கள், கோடுகளின் போக்கு போன்றவற்றின் உள்ளர்த்தங்கள் - புரிய நேரமாகும்.
இவற்றைத் தவிர அவரது முந்தைய தொகுப்புக்களான உறங்கா நிறங்கள், எரியும் வண்ணங்கள், திசைமுகம் ஆகியவையும் இவ்வலைத்தளத்தில் உள்ளன. புகழ் போன்ற சமூக அக்கறையும், அற்புதத் திறமையும், தைரியமான நேர்மையும் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பது தமிழர்களின் கடமை என்று சமர்ப்பிக்கிறேன்.
மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
5 Comments:
ஸ்ரீகாந்த்,
புகழேந்தியைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், உங்களின் மூலமே அவரையும், அவரது ஓவியங்களின் முழு வீச்சையும் அறிய வந்தேன். புகழின் புகழ் பரப்பும் இந்த அருமையான தளத்தை உருவாக்கியதன் மூலம் தற்பொழுது உலகுக்கும் அறியச் செய்திருக்கிறீர்கள்.
மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
குறிப்பாக, புகழேந்தி, காசி ஆனந்தன் அவர்களின் ஈழநிலை தொடர்பான அரசியற்சார்புநிலை தெரிந்துங்கூட, உங்களிடமிருந்து நான் இந்த விதந்தோதலை எதிர்பார்க்கவில்லை. (இதை நீங்கள் எப்படியாகப் புரிந்துகொண்டாலும் எதிர்வினை தந்தாலும் (தராவிட்டாலுங்கூட) அதை ஏற்றுக்கொள்வேன்).
பதிவுக்கு நன்றி.
சிறீகாந்த்.ஈழத்தில் புகழேந்தி நடத்திய ஓவியக் கண்காட்சிப் படங்களை இங்கே வலையேற்றியுள்ளார்கள்.இந்தப் பதிவுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி.
http://www.tamilnaatham.com/photos/pukal20050518/
ஈழ நாதன் - சுட்டிக்கு நன்றி. பெயரிலி - நான் புகழுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபடுவது உண்மை தான். அவற்றிற்கு இப்பதிவில் இடமில்லை என்று தோன்றியதால் தவிர்த்து விட்டேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், புகழின் நட்பை நான் இழக்க விரும்பவில்லை. இதை உணர்ந்த போது தான், கருத்து வேறுபாடுகள் நட்பிற்கு பெரும் தடையல்ல என்ற முதிர்ச்சி சார் புரிதல் எனக்கு ஏற்பட்டது. மேலும், அவருடன் நடந்த விவாதங்கள் மூலமாக எனது பல கருத்துக்கள் பண்பட்டிருப்பதும் உண்மை.
பதிவுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி!
Post a Comment
<< Home