புத்தகம்: ரஜினி: ச(கா)ப்தமா? - ஜெ. ராம்கி
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்சென்ற வருடம் இந்தியா சென்றிருந்த போது
ராம்கியை அவரது சில நண்பர்களோடு சந்தித்தேன். தங்கமான இளைஞர்; ஆர்வமுள்ள, உற்சாகமான, நல்லன பல செய்ய விரும்பும் துடிப்பானவர். சுனாமி சமயத்தில் அவர் மேற்கொண்ட பல நற்பணிகள் வலைப்பதிவுலகத்தில் பிரசித்தம். இப்படிப்பட்ட ஒரு நண்பர் எழுதியுள்ள புத்தகத்தை என்னால் ரொம்பவும் விமரிசனம் செய்ய இயலாது.
எப்படி ராம்கியால் ரஜினியை ரொம்ப விமரிசனம் செய்ய முடியாதோ, அதே போல :-).
அது பற்றி பின்னர். முதலில், புத்தகம் பற்றி. ரஜினி என்ற மனிதரின் வாழ்க்கை, அவரது ஆளுமை தமிழ்ச் சமுதாயத்தில் உண்டு பண்ணின தாக்கம், அதை அவர் எதிர் கொண்ட விதம் என்று கடந்த இருபத்தைந்து - முப்பது ஆண்டுகளில் நடந்த வரலாற்றை விவரித்து, அலசும் சுவை குன்றாத புத்தகம் இது. ரஜினியின் பூர்விகத்தில் தொடங்கி, அவரது கலையுலக வாழ்க்கை தொடங்கிய விதம், சென்ற பாதை, எதிர் கொண்ட சவால்கள், எடுத்த முடிவுகள் எனப் பல விஷயங்களை தொகுத்து வழங்குகிறது.
சமீபத்திய வரலாறை எழுதுவதில் சில சிரமங்கள் உள்ளன. படிக்கும் பலருக்கும் நடந்த நிகழ்ச்சிகள் பலவும் நன்கு நினைவிருக்குமாதலால், மிகவும் கவனமாக எழுத வேண்டும். தவறிருந்தால் சுட்டிக்காட்டிக் குட்டுவதற்கும், தவறே இல்லாவிட்டால், "என்ன புதிதாக சொல்லி விட்டான்" என்று சொல்வதற்கும் தலா ஒரு கூட்டம் காத்திருக்கும். இவற்றிலிருந்து தப்பிபதற்கு இரண்டே வழிகள் தாம் உள்ளன - ஒன்று எழுதும் விஷயத்தில், சில விசேட அனுமதிகளின் மூலமாகவோ, திருட்டுத்தனமாக துப்பறிவதன் மூலமாகவோ, படிப்பவர்களுக்கு தெரியாத விஷயங்களை புத்தகத்தில் வெளிக் கொண்டுவருவது. இது ராம்கி போன்ற தனி மனிதரால் செய்யக் கூடியது அல்ல. (இஷ்டத்துக்குப் பொய் சொல்லியிருக்கலாமே என்று நினைப்பவர்கள் கட்டுரையின் முதல் வரிகளை மீண்டும் படிக்கவும்). இரண்டாவது வழி, பல வருட காலத்தில் நடந்த விஷயங்களை, பல தகவல் தளங்களிலிருந்து சேகரித்து, ஒன்றுபடுத்தி, நீக்க வேண்டியவற்றை நீக்கி, மற்றவற்றைத் தொகுத்து, சுவையான சுலபமான நடையில் எழுதி, படிப்பவர்களுக்கு அனைத்தையும் ஒரு சில பக்கங்களில் ஒரு கதை போலப் படித்து அசை போட வசதியாக அமைப்பது. இந்தப் புத்தகத்தில் ராம்கி இதை சிறப்பாகச் செய்துள்ளார்.
புத்தகத்தின் முதல் அத்தியாயம் ரஜினியின் குடும்பம், அவரது இளமை, அதன் அலைச்சல்கள், பிரயாணங்கள், முயற்சிகள் ஆகியவற்றை விவரிக்கிறது. ரஜினி - பாலசந்தரின் முதல் சந்திப்பைப் படிப்பது, நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்குப் பின் ரஜினியின் பிரபலத்தின் அசுர வளர்ச்சி, ஒரு தற்காலிக தேக்கம், மீண்டும் வளர்ச்சி ஆகியவற்றை விவரித்து விட்டு அவரது ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் அலசுகிறது.
ராம்கிக்கு இயல்பாகவே ஒரு எளிமையான, சிக்கலில்லாத நடை வாய்க்கப் பெற்றிருக்கிறது. ஏகப்பட்ட தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கிறார். ரஜினியின் பல நேர்முகங்கள், பத்திரிக்கைத் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் புத்தகம் முழுவதும் பொருத்தமான இடங்களில் இடம் பெறுகின்றன. ஒரு நல்ல கட்டுரையாளனுக்கு அழகு, தான் எழுதுவதை விட மிக அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பது. ராம்கி அதைச் செய்திருக்கிறார் என்பது தெளிவு.
இப்புத்தகம் கீழ்கண்ட விதங்களில் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம்:
1. ஒவ்வொரு அத்தியாயமும் சுவையாக இருக்கிறது. ஆனால், முதல் அத்தியாயத்திற்குப் பின்னர், ஒரு தெளிவான கால வரிசைக்கிரமம் இல்லை. ஆதலால், சில இடங்களில், ஒரு முன்னும் பின்னும் அலை பாயும் தன்மை தென்படுகிறது.
2. அத்தியாயங்களுக்கு, ரஜினியின் படங்களின் பெயர்களை வைத்தது சுவையான சாமர்த்தியம். ஆனால் கூடவே ஒரு உப தலைப்பையும் வைத்திருந்தால் இன்னமும் தெளிவாக இருந்திருக்கும் (உதாரணம்: 'பாயும் புலி' - ரஜினிக்கு அரசியல்வாதிகளின் எதிர்வினைகள்)
3. ராம்கி தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதைக் கடந்து எழுத மிகவும் மெனக்கெட்ட்ருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் அது சுலபமில்லை. ரஜினியின் தனி மனித ஒழுக்கம், அவரது நல்லிதயம் ஆகியவற்றில் எனக்குக் (எனக்குத் தெரிந்த பலருக்கும்) கேள்வியில்லை. ஆயினும் அவரது அரசியல் மற்றும் சமுதாய நிலைப்பாடுகள் விமரிசனப் பொருள்தான். அவரது இதயத்தில் இடம் பெற்றிருக்கும் ரசிகர்களோடு அவர் எந்த அளவிற்கு நேரடியாகப் பழகி இருக்கிறார்? சூப்பர் ஸ்டார் என்ற பீடத்திலிருந்து இறங்கி வந்து மக்களோடு உறவாட அவர் தயாரா? அவரது அரசியல் தலையீடுகளும், தானோ, தனது திரைப்படங்களோ, தனது நண்பர்களோ பாதிக்கப்பட்ட போது தானே நிகழ்ந்துள்ளன? பலத்த பரிசீலனைக்குப் பின் நிகழும் தனி மனித உதவிகள் தவிர தனது செல்வத்தையும் புகழையும் சமுதாயத்திற்காக எப்படி செலவழித்துள்ளார்? இவையெல்லாம், இந்தப் புத்தகம் அணுகாத முக்கியமான கேள்விகளாகப் படுகிறது. புத்தகத்தின் ஓரிடத்தில், "தமது படங்களைக் காட்டிலும் தனது ரசிகர்களின் மேல் அவருக்கு அக்கறை இருந்து வந்திருக்கிறது. வலுக்கட்டாயமாக அரசியல் அவர் மீது திணிக்கப்பட்ட போதும் கூட, சரியான பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்ததும் அந்த அக்கறையின் ஒரு வித வெளிப்பாடே என்கிறார்கள் ரஜினியை நன்கு அறிந்தவர்கள்" என்றும், மற்றோரிடத்தில், "ரஜினியின் மவுனத்திற்குக் காரணம், அமைப்பின் மீது கோபப்பட்டு எவ்விதப் பலனும் இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டது தான் என்று தெரிகிறது" என்றும் சொல்வது ஒரு ரசிகனின் rationalization-ஆகவே தெரிகிறது.
ரஜினியின் ஆளுமை புதிர்த்தன்மை வாய்ந்தது. அதைப் புரிந்து கொள்வது கடினமானது. புரிந்து கொண்டது போல் நடிப்பது சுலபமானது. ராம்கி அந்தத் தவறைச் செய்யாமல், ஒரு கவனமான நேர்மையுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ரஜினியின் வாழ்க்கை ஒரு சுவையான கட்டத்தில் இருக்கும் இந்நேரத்தில் இதுவரை நடந்ததை முழுமையாகத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஒரு தொடர்கதையின் நடுவில் வரும் முன்கதைச் சுருக்கம் போல.
இன்னமும் பத்தாண்டுகளில், இந்தப்புதிரின் பல கேள்விகளுக்கு விடை தெரியும் தருணத்தில், மீண்டும் இத்தகைய ஒரு புத்தகத்தை ராம்கி எழுத வேண்டும். அதற்கு முன் இதே ஆற்றொழுக்கான நடையில் வேறு பல புத்தகங்களையும் எழுத வேண்டும்.
இந்தப் புத்தகத்தின், அச்சும், தரமும் அருமை. எழுத்துப் பிழைகள் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தின் ராகவன், பத்ரி ஆகியோருக்கு நன்றி.