<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Friday, January 13, 2006

'Blink': உள்ளுணர்வுகளை நம்பலாமா?

Blink
Malcolm Gladwell
Little, Brown Publishers


இந்தப் புத்தகத்தைப் பற்றியும் அது முன்வைக்கும் முக்கிய சித்தாந்தத்தைப் பற்றியும் முதலில் கேள்விப்பட்ட போது, அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவில்லை. பலராலும் பாராட்டப்பட்டு, பெருமளவில் விற்பனையான போதும் எனது எண்ணம் மாறவில்லை. ஆனால் சுயமுன்னேற்றம், pop psychology எனப்படும் வெகுஜன உளவியல் ஆகியவை பற்றிய புத்தகங்களை என்னை விட அதிகம் வெறுக்கிற நண்பன் ஒருவன் இதைக் நான் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று சொன்ன போது, தட்ட முடியாமல் படிக்கத் தொடங்கினேன்.

1. சுவாரசியமான புத்தகம், நான் படிக்கக் கூடாது என்பதற்குக் கொண்டிருந்த காரணங்கள் பிழையானவை.
2. ஆனால், இந்தப் புத்தகம் தரும் அறிவுரையைப் பின்பற்றியிருந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்திருப்பேனா என்பது கேள்விக்குரியது.

முதலிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

நாம் தினம் தினம் மதிப்பீடுகள் செய்த வண்ணம் இருக்கிறோம். சில சில்லறைத்தனமான விஷயங்கள், சில வாழ்வா சாவா பிரச்னைகள். மனிதர்களை, பொருட்களை, உணவுகளை, உடைகளை, பிறர் எண்ணங்களை எனத் தொடர்ந்து செய்யும் மதிப்பீடுகள் நமது சுகதுக்கங்களையும், வெற்றி/தோல்விகளையும் நிர்ணயிக்கின்றன. சில சமயம் பிறரது சுகதுக்கங்களையும், வெற்றி/தோல்விகளையும் கூட நமது மதிப்பீடுகள் நிர்ணயிக்கின்றன. இந்த மதிப்பீடுகளின் ஆதார குணாதிசியம் என்ன? இவற்றை எப்படிச் செய்கிறோம்? இவற்றை இன்னமும் சிறப்பாக, விரைவாகச் செய்வது எப்படி? நமது உள்ளுணர்வுகளை எவ்வளவு, எப்போது நம்பலாம்? இது போன்ற கேள்விகளுக்கு பல உதாரணங்களோடு விடைகாணும் புத்தகம் 'Blink'. எழுதிய எழுத்தாளர் க்ளாட்வெல் நியூயார்க்கர் பத்திரிக்கையில் எழுதுபவர். அப்பத்திரிக்கையின் (எனக்கு மிகவும் பிடித்த) சரளமான, அலுப்பு தட்டாத நடையில் எழுதி இருக்கிறார்.

புத்தகத்தின் அடிப்படைக் கோட்பாடு இது தான்: ஒரு துறையில் அனுபவமும், தேர்ச்சியும் பெற்ற ஒருவர், தனது முன் தீர்மானங்களுக்கு இடம் கொடுக்காத ஒரு சூழ்நிலையில், அத்துறையைச் சார்ந்த ஒரு விஷயத்தில் மதிப்பீடு செய்யும் போது, அவரது உள்ளுணர்வுகள் அவருக்கு நொடி நேரத்தில் தெரிவிக்கும் கருத்து தான் சரியானது. தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்து ஒரு மதிப்பீட்டிற்கு அவர் வருவாரேயானால் அவரது உள்ளுணர்வு சொல்லும் கருத்தை விட சரியாக/சிறப்பாகவும் இருக்காது, சில சமயம் தவறாகவும் இருக்கலாம். இந்தக் கோட்பாட்டை இப்புத்தகம் பல உதாரணங்கள், பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் ஆகியவை வாயிலாக நிலைநாட்டுகிறது.

புத்தகத்தின் உதாரணங்கள் மிக சுவாரசியமானவை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு உதாரணத்துடன் துவங்கி, ஒரு கேள்வியை முன்வைத்து, பிறகு பல ஆராய்ச்சிகள், மேலும் சில உதாரணங்கள் என்று விரிந்து, கடைசியில் அக்கேள்விக்கு விடை காண்பதில் முடிகிறது. முதல் அத்தியாயமே ஒரு அமெரிக்க அருங்காட்சியகம் ஒரு கிரேக்க சிலையை உண்மையா போலியா என்பதை நிர்ணயிப்பதிலிருந்து துவங்குகிறது. பல அறிவியற்சோதனைகள் அச்சிலையை உண்மை என்று சொல்ல, சில நிபுணர்கள் அதைப் பார்த்த உடனேயே 'ஏதோ சரியில்லை' என்று சொல்கிறார்கள். அறிவியல் சோதனைகளை நம்பி அருங்காட்சியகம் பல மில்லியன் டாலர்கள் கொடுத்து அச்சிலையை வாங்கிய சில வருடங்களில் அது போலி என்று நிரூபணமாகிறது. எத்தகைய சூழ்நிலையில் உள்ளுணர்வுகள் நம்பப்படலாம்/நம்பப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆரம்பத்திலேயே இக்கதை வருகிறது.

பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உள்ளுணர்வுகள் நம்பப்படலாம் என்பதைப் புத்தகம் ஆராய்கிறது. முதலாவது மனச்சாய்மானங்களுக்கு இடம் தராத சூழ்நிலைகள். உதாரணமாக, கறுப்பர் குறித்த மனச்சாய்மானங்கள் இருப்பவர், ஒரு கறுப்பரை நேர்முகத்தேர்வு செய்தால், அவருடைய துறை சார்ந்த பயிற்சிகள் தரும் செய்திகள் அவரது சாய்மானங்களால் மழுங்கடிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில் அவரது உள்ளுணர்வு தரும் மதிப்பீடு நம்பத்தகுந்ததல்ல. மேலும் துறை சார்ந்த பயிற்சி முழுமையாகவும் அனுபவ ரீதியாகவும் இருக்க வேண்டும். இந்தக் கடைசிக் கருத்தை நியூயார்க் நகரத்தில் நடந்த டியால்லோ படுகொலை வாயிலாக விளக்குகிறார் க்ளாட்வெல். மிகக்குறைந்த நேரத்தில் பெரும் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் காவல்துறையினர் எத்தகைய கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பிரமிப்பூட்டுவதாகவும், அப்படிப் பயிற்சி பெற்றவர்களும் தவறிழைப்பது எத்தனை சுலபமானது என்பது அச்சமூட்டுவதாகவும் இருக்கின்றன.

புத்தகத்தின் இத்தகைய தாத்பர்யங்கள் மொத்தமும் அதன் கடைசி அத்தியாயத்தின் உதாரணத்தில் தெளிவாகிறது. ஐரோப்பாவில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் ட்ராம்போன் வாசிக்க விரும்புபவர்களுக்கான தேர்வு நடக்கிறது. மிகவும் தேர்ச்சி பெற்ற இசை வல்லுனர்கள் தேர்வு செய்கிறார்கள். தேர்வுக்கு வந்திருப்பவர்கள் ஒரு திரைக்குப் பின்னாலிருந்து வாசிக்கிறார்கள். ஒருவர் வாசிப்பதைக் கேட்டவுடன், வல்லுனர்கள் 'அபாரம், அற்புதம்' என்று சொல்லி மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். திரை விலகுகிறது. ட்ராம்போன் வாசித்தது ஒரு இளம்பெண்! தேர்வு செய்தவர்களுக்கு அதிர்ச்சி! ஒரு பெண்ணால் இப்படி வாசிக்க முடியாது என்று நிராகரித்து விடுகிறார்கள். பல வருடங்களும், நீதிமன்ற விசாரணைகளும், மருத்துவ மற்றும் இசைச் சோதனைகளுக்கும் பிறகு அந்தப் பெண்ணுக்கு நியாயமும் ஆர்க்கெஸ்ட்ரா நாற்காலியும் கிடைக்கின்றன. சாய்மானங்களற்ற சூழ்நிலையில் வல்லுனர்களின் உள்ளுணர்வு சொன்ன கருத்தே சரியானது என்று சொல்லி புத்தகம் முடிகிறது.

இத்தகைய நம்பத்தகுந்த உள்ளுணர்வுகளைப் பயிற்சி மூலம் வளர்த்துக் கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வி. முடியும் என்று ஆசிரியர் சொன்னாலும், அவரது கோட்பாட்டை நிறுவுவதற்கு மேற்கொண்ட முயற்சியை இக்கேள்விக்கு விடை சொல்வதில் மேற்கொள்ளவில்லை. அதாவது, எப்படி இம்முயற்சிகளை செயல்படுத்துவது என்பதை வெறுமனே கோடி மட்டும் காட்டுகிறார்.

இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். 'Don't judge a book by its cover' என்பது போல், 'Don't judge a book's content by its topic' என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். :-)


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger இலவசக்கொத்தனார் said...

நம்ம மனசுல அடிக்கடி வர கேள்விக்கு பதில் சொல்லற மாதிரி இருக்கு. கட்டாயம் இந்த புத்தகத்தை படிக்கணும்.
பதிவுக்கு நன்றி.

January 13, 2006 3:48 PM  
Blogger Boston Bala said...

Freakanomics படித்தாகி விட்டதா? இந்தப் புத்தகத்திற்கும் The Wisdom of Crowds-க்கும் சம்பந்தம் உண்டா :-?

January 13, 2006 6:56 PM  
Blogger Srikanth Meenakshi said...

Freemason,

நன்றி. எங்காவது நீண்ட விமானப் பயணம் சென்றால், இப்புத்தகம் நன்கு உதவும்...

BB,

Freakonomics படித்து விட்டேன், சில மாதங்களுக்கு முன்பு...எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், கை வரவில்லை. அதுவும், சுவையாக, சுறுசுறுப்பாகச் செல்லும் புத்தகம். பற்றற்ற கண்ணோட்டத்தோடு, சாய்மானங்களின்றி தர்க்க ரீதியாக, அறிவியற் முறைகளோடு சமூகக் கேள்விகளை ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் விடைகள் நாம் எதிர்பாராததாய் இருக்கும் என்பதை சுவையான உதாரணங்களோடு விளக்கும் புத்தகம்.

Wisdom of crowds இன்னம் படிக்கவில்லை. ஆனால், நானறிந்த வரை, அது வெகு ஜனப் பார்வைகளில் அடிக்கடி உண்மையும் சரியான மதிப்பீடுகளும் இருக்கும் என்னும் கோட்பாட்டை நிறுவ முயலும் புத்தகம். அதற்கும் Freakanomics-க்கும் சம்பந்தம் இருக்கும் என்று தோன்றவில்லை.

January 13, 2006 10:01 PM  
Blogger நிலா said...

பயனுள்ள பதிவு
நன்றி

January 14, 2006 12:09 AM  
Blogger நாமக்கல் சிபி said...

இந்த நூல் சொல்வதைப்போல சிலசமயம் நமது (சாய்மானமில்லத)உள்ளுணர்வின் முடிவுகள் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. பல சமயங்களில் நம்மை அறியாமலேயே நாம் எடுக்கும் சில முடிவுகளும் இதன் அடிப்படையே ஆகும்.

நான் இந்த நூலைப் படிக்கப் போகிறேனோ இல்லையோ உங்கள் பதிவு ஒரு நல்ல நூலை எனக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறது.

January 19, 2006 12:09 PM  

Post a Comment

<< Home