<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, January 10, 2006

Munich: ஒரு பார்வை


Munich
இயக்கம்: ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

1972-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ம்யூனிக் நகரத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களின் போது, இஸ்ரேல் நாட்டின் பந்தயக் குழுவினைச் சேர்ந்த பதினோரு பேர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக சிறைபடுத்தப்பட்டனர். இத்தீவிரவாதிகள் எகிப்தில் இருக்கும் தமது சகாக்களின் விடுதலையைக் கோரினர். இஸ்ரேல் இவர்களோடு பேரம் பேச முற்றிலும் மறுத்தது. இரண்டு நாட்களுக்கும், சில விடுதலை முயற்சிகளுக்கும் இறுதியில் பதினோரு பேரும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் எட்டு பேரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். (மீதி மூவர் ஜெர்மனியால் கைது செய்யப்பட்டு, பின்னொரு நாள் ஒரு விமானக் கடத்தலின் போது தீவிரவாதிகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்).

இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று இஸ்ரேல் ஒரு ரகசியப் படை அமைத்தது. பதினோரு பேரை இந்தத் தாக்குதலின் திட்டமிட்டவர்களாக அடையாளம் கண்டு அவர்களைக் கொல்ல இப்படையை ஐரோப்பாவிற்கு அனுப்பியது. இந்தப்படம் அந்தப் படையைப் பற்றியும் அது நிகழ்த்தும் பழிவாங்குதல் பற்றியும். இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் இந்தப் பழிவாங்குதல் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைத் தவிர, அது அப்படை வீரர்களை எப்படி உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பது பற்றியும், பொதுவாக வன்முறைக்கு எதிராக வன்முறை நிகழ்த்துவதன் தார்மீகக் குழப்பங்கள் பற்றியும் பேசப்படுகின்றது.

வெறுமனே ஒரு பழிவாங்குதல் பற்றிய படம் என்று பார்த்தால், இது அவ்வளவு சுவாரசியமான படம் இல்லை - கற்பனையில் உருவாக்கப்பட்ட பழிவாங்கும் கதைகள் இதை விட வெகு விறுவிறுப்பாக இருந்திருக்கின்றன. ஆனால், சரித்திர நிகழ்வுகள் உருவாக்கும் கட்டுப்பாடுகளோடு எடுக்கப்பட்டதால், ஒரு சாதாரண படத்தை விட வெகு வித்தியாசமாக இருப்பதற்கான சூழ்நிலை படத்திற்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நாயகர்கள் பல சமயங்களில் தடுமாறுகிறார்கள்; திட்டங்கள் தோற்கின்றன; வெற்றி பெறும் திட்டங்களுக்கும் பக்க விளைவுகள் இருக்கின்றன; அவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணங்களும் உத்திகளும் ரொம்ப சாதாரணமாக இருக்கின்றன; பிறர் தயவை நாடி இருக்க வேண்டிய சூழ்நிலையில் அதிகம் இருக்கிறார்கள் என்று ஒரு கற்பனைக் கதையில் காண முடியாத அசாதாரண இயல்புகளோடு திரைக்கதை பயணிக்கிறது. படத்தின் முடிவும் அத்தகையதே.

ஸ்பீல்பர்க் தான் ஒரு மிகச் சிறந்த கலை நுட்ப விற்பன்னர் என்று மீண்டும் நிரூபிக்கிறார். திரைக்கலையின் மாணவர்கள் ஒவ்வொரு காட்சியிலும் கற்றுக் கொள்வதற்கு விஷயம் இருக்கிறது. வண்ணம் மற்றும் ஒளியின் வடிவமைப்பு, காட்சிக் களன்களின் கலை இயக்கம், ஒளிப்பதிவுக் கோணங்கள் போன்ற தொழில் நுட்ப விஷயங்களும் சரி; கொஞ்சமும் தொய்வில்லாத திரைக்கதை, கூர்மையான வசனங்கள், பாத்திரத்தேர்வு, நடிப்பு (குறிப்பாக கதாநாயகன் பானா) போன்ற மென்பொருள் அம்சங்களும் சரி - அனைத்தும் ஒரு முழுமையான கூட்டமைப்பில் இயங்கி படத்தை திசை மாறாத கப்பலாக ஒருமுகமாக நகர்த்திச் செல்கிறன.

அப்படிச் செல்லும் திசை என்ன என்பதில் கொஞ்சம் பிரச்னை இருக்கிறது.

இப்படம் ஒரு சரித்திர நிகழ்வைப் பற்றியதாயினும், அந்நிகழ்வின் தொடர்ச்சி இன்னமும் ஒரு தீராத பிரச்னையாக இருப்பதால், இப்படத்தை தற்போதைய சூழ்நிலைகளை மறந்து விட்டுப் பார்ப்பது இயலாத காரியம். இன்று இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னையில் தெளிவான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. ஆகையால் இவ்விஷயத்தை அடிப்படையாக வைத்து ஒரு யோக்கியமான படம் எடுக்க முயல்பவர் எவரும் எந்த ஒரு தீர்மானமான சாய்மானத்தையும் கொண்டிருக்கவும் கூடாது, படத்தில் முன்வைக்கவும் கூடாது. அப்படிச் செய்தால் செயல்வேகம் ரீதியான சுவாரசியம் இல்லாத படத்தில் கருத்து ரீதியான சுவாரசியமும் இல்லாமல் போய்விடும்.

ஸ்பீல்பர்க் கண்டிப்பாக ஒரு யோக்கியமான படம் எடுக்கவே முயன்றிருக்கிறார். படம் முழுவதும் பல தர்க்கங்கள் நடக்கின்றன. வன்முறை பற்றிய தார்மீக தர்க்கம், அடிப்படை பிரச்னை குறித்த அரசியல் தர்க்கம், அடையாளங்கள் - மதம், தேசம் - குறித்த தர்க்கங்கள், உளவியல் ரீதியான தர்க்கங்கள் என்று பல அருமையான வசனங்களுடனான வாதங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒரு இஸ்ரேலியும் ஒரு பாலஸ்தீனியனும் நடத்தும் உரையாடல்:

(நினைவிலிருந்து)

இஸ்ரேலி: நீங்கள் இப்படியே கடத்தல், கொலை என்று செய்து கொண்டிருந்தால் உங்களை உலகம் மிருகங்கள் என்றுதான் கருதும்.

பாலஸ்தீனியன்: செய்யட்டுமே! கூடவே இப்படி எங்களை மிருகங்கள் ஆக்கிய இஸ்ரேலைப் பற்றியும் அறிவார்களே!

இஸ்ரேலி: எவ்வளவு காலம் தான் இப்படியே சண்டை போடப் போகிறீர்கள்?

பாலஸ்தீனியன்: இஸ்ரேல் அழியும் வரை, எங்கள் நாடு கிடைக்கும் வரை. நாங்கள் காத்திருப்போம்! (இளக்காரமாக) யூதர்கள் தங்கள் சொந்த நாட்டை அடைய எவ்வளவு நாட்கள் காத்திருந்தனர் என்பது நினைவிருக்கிறதா?

[இஸ்ரேல் யூதர்களின் பல்லாயிரக்கணக்கான வருடங்களின் கனவு]

படத்தில் கதாநாயகனுக்கு முக்கிய உதவி ஆற்றும் ஒரு குடும்பம் சர்வதேச அரசியல் சார்பு நிலைகளற்றதாக சித்தரிக்கப்படுகிறது. அவர்கள் பேசும் வசனங்கள் வாயிலாகவும் பல நடுநாயகமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதெல்லாம் இருந்தும், படம் பார்த்து முடித்தவுடன் தீர்மானமான சாய்மானங்கள் இல்லாமல் படம் பார்க்கும் எவருக்கும் சற்று இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுக்கத்தான் தோன்றும் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம், படத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் எல்லாமே தர்க்க ரீதியாகவும், சொற்களாகவும், வசனங்களாகவுமே இடம் பெறுகின்றன. ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்கள் அவ்வகையில் மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும், காட்சிகள் வாயிலாகவும் இடம் பெறுகின்றன. திரைப்படம் என்ற பார்வை ஊடகத்தில் வசனங்களுக்கும் வார்த்தைகளுக்கும் அதிகமான சக்தி காட்சிகளுக்கும் நடிகர்களின் முகபாவங்களுக்கும் உண்டு. இந்தப் படத்தில் இஸ்ரேலியர்களின் குடும்பங்கள் ஏராளமாக காண்பிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண், கணவன்-மனைவி உறவு, பிள்ளைப் பேறு, அதை நண்பர்களோடு கொண்டாடுதல், கதாநாயகனின் குடும்பப் பின்புலம் என்று பல காட்சி அமைப்புகள். எனக்கு நினைவிலிருக்கும் வரை பாலஸ்தீனியர்களின் குடும்பங்கள் இரண்டு இடங்களில் காட்டப்படுகின்றன. ஒன்று, ஒரு விரைந்து செல்லும் காட்சியில் ஒரு தீவிரவாதி கொல்லப்படும் போது வருந்தும் பெண்மணி. இன்னொன்றில் ஒரு பாலஸ்தீனியப் பேராசிரியரின் வீட்டில் அவரது மனைவியும் குழந்தையும். அந்த மனைவியும் அப்பேராசிரியரைப் போலவே அரசியல் சார்புகளும் வாதங்களுமாய் இருப்பது போல.

இதை விட முக்கியமாக, ம்யூனிச் நிகழ்ச்சிக்கு பாலஸ்தீனியர்கள் தரப்பிலான பின்புலம் என்ன என்பது பற்றி ஒரு வார்த்தையோ காட்சியோ கூட இல்லை. ஆனால் படத்தைப் பார்ப்பவர்கள் இப்பழிவாங்குதலுக்குக்கு ஆதாரமான அந்நிகழ்ச்சியை மறந்து விடக் கூடாது என்பதற்காக அந்நிகழ்வு துண்டு துண்டாக படம் நெடுக (முடியும் வரை) காட்டப்படுகின்றது. மீண்டும், மீண்டும் அது நினைவூட்டப்படுகிறது. இத்தனை சரித்திரச் சுமைகளில்லாத படமாக இருந்தால் அத்தகைய திரைக்கதை அமைப்பை சாதுரியமான ஒன்றாய் கருதலாம்; ஆனால் அதுவே இந்தப் படத்தின் தார்மீக சமச்சீர்தன்மையை பாதிப்பதாக உள்ளது.

இது படம் எடுக்கப்பட்ட விதத்தில் உள்ள கோளாறு இல்லை, படம் வடிவமைக்கப்பட்ட விதத்திலேயே உள்ள கோளாறு. உணர்வு ரீதியாக ஒருபக்கச் சார்பு உள்ள வடிவமைப்பு அது என்று உணரும் போது ஸ்பீல்பர்க் ஒரு யூதர் என்பதை உதாசீனம் செய்ய முடியவில்லை. அதே சமயம் ஒரு இஸ்லாமியரோ ஒரு பாலஸ்தீனியரோ இது பற்றி ஒரு படம் எடுத்தால்/எடுத்திருந்தால் அதில் வேறு வகையிலான சாய்மானங்கள் இருக்கும்/இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.

இந்த முக்கியமான குறைபாட்டை ஒதுக்கி விட்டுப் பாராட்டுவது கடினம் என்றாலும், இது ஒரு பரிந்துரைக்கப்பட வேண்டிய படம் என்பதில் எனக்கு ஐயமில்லை. திரைக்கதை, வசனம், நடிப்பு ஆகியவற்றிற்கு மட்டுமாகவேனும் கண்டிப்பாகப் பார்க்கப்பட வேண்டிய படம்.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger பூனைக்குட்டி said...

ரொம்ப நன்றிங்க ஸ்ரீகாந்த், உங்களின் விமர்சனத்திற்கு, இங்க எப்ப வெளிவருமாம்???(India-la)

January 10, 2006 10:41 PM  
Blogger Narain Rajagopalan said...

நன்றி இந்த படத்தின் டிரைய்லர் பார்த்தபோதே ஸ்பீல்பர்க் தன் வழக்கமான பிரமாண்டமான, கதாபாத்திரங்களை தூக்கிப் போட்டுவிட்டு, வாழ்வினுள் நுழைந்து படமெடுத்திருப்பார் என்று யூகிக்க முடிந்தது. நன்றிகள்.

January 11, 2006 12:05 AM  
Blogger வானம்பாடி said...

விரிவான விமர்சனத்திற்கு நன்றி.

January 11, 2006 4:12 AM  
Blogger வஜ்ரா said...

Excellent review, என்னைப் பொருத்தவரையில் மிகவும் சுவாரஸ்யமான படம்.

//
அதே சமயம் ஒரு இஸ்லாமியரோ ஒரு பாலஸ்தீனியரோ இது பற்றி ஒரு படம் எடுத்தால்/எடுத்திருந்தால் அதில் வேறு வகையிலான சாய்மானங்கள் இருக்கும்/இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.
//

உண்மை தான். ஆனால், இஸ்ரேலில் படத்துக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது தெரியுமா உங்களுக்கு?

படத்தில் தர்க ரீதி யான வசனங்கள், மற்றும், இஸ்ரேலியர்கள், செய்யவேண்டிய கட்டய நிலையினைக் குறிக்கும் வசனங்களும் உள்ளன. உதாரணமாக, பிரதமர் கோல்டா மேயர், Every civilization finds it necessary to negotiate compromises with its own values. மற்றும் Forget peace for now. We have to show them we're strong.

மற்றும், கதாநாயகன் ஆவ்னரின் தாய், (இஸ்ரேல் உருவானதைப் பற்றி) We had to take it, because no one would ever give it to us.

ராபர்ட் என்ற மொஸாத் ஏஜண்ட்: We are supposed to be righteous. That's a beautiful thing. And we're losing it. If I lose that, that's everything. That's my soul.

எனக்கு மிகவும் பிடித்த வசனம், ஆவ்னர் சொல்லும் இந்த வசனம் தான்: We can't afford to be that decent anymore.


2000 வருஷம் டீசண்டாக இருந்துதான் எல்லாத்தையும் இழந்தார்கள். இப்போது திருந்தி, எங்களை அடிச்சீன்ன, திருப்பி அடி வாங்க ரெடியாக இறு. என்பது போல் மாறிவிட்டனர்.

ஷங்கர்.

April 30, 2006 6:04 AM  
Blogger வித்யார்தி said...

மிக அற்புதமான படம். திரைக்கதை, பின்னணி இசை என்று எல்லாவிதத்திலும் அதீத கவனத்துடன் எடுக்கப்பட்ட படம்.

இஸ்ரேலி, பாலஸ்தீனியின்(அலி) உரையாடலில், "இன்னும் எவ்வளவு நாள் போராடுவீர்கள்?" என்று கேட்கும்போது, பாலஸ்தீனி "எவ்வளவு நாள் வேண்டுமானாலும். எங்களுக்கு பிள்ளைகளுண்டு, அவர்களுக்கும் உண்டு சண்டைபோடுவதற்கு" என்று கூறுவான்.

ஆனால் இஸ்ரேலியர்கள் மீதான மிதமிஞ்சிய வெறுப்பிற்கான காரணத்தை எங்கும் தொடவில்லை. யாராவது ஒரு முஸ்லிம் இந்த படத்தை எடுத்திருந்தால் அப்பட்டமாக, இஸ்ரேலியர்களை அயோக்கியர்களாக காண்பித்திருப்பார்கள்.

By the by, நீங்கள் "Black friday" என்ற ஹிந்தி படம் பார்த்திருகீர்களா.

July 11, 2007 6:34 AM  

Post a Comment

<< Home