<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, April 02, 2006

Good Night and, Good Luck

Good Night and, Good Luck
2005
இயக்கம்: ஜார்ஜ் க்லூனி

இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன், அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நீண்டதொரு சண்டையில்லாப் போர் (Cold war) துவங்கியது. ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளில் இப்போர் மிகவும் தீவிரமாக இருந்த சமயத்தில், கம்யூனிசம் அமெரிக்க நாட்டிற்குப் பெரியதொரு எதிரியாகக் கருதப்பட்டது. அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளாகக் கருதப்பட்டவர்கள்/சந்தேகிக்கப்பட்டவர்கள் பல ஜனநாயகத்திற்கு விரோதமான முறைகளில் வேட்டையாடப்பட்டனர். ஒருவர் கம்யூனிஸ்ட் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீதே சுமத்தப்பட்டது. வெளிப்படுத்தப்படாத ‘ஆதாரங்கள்', கேள்வி கேட்கப்படாத ‘சாட்சிகள்', பாதுகாக்கப்பட்ட ‘ரகசிய ஆவணங்கள்' - இவற்றின் பேரில் ஏராளமானோரது வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டன. இந்தப் படலத்தில் பலர் வேலையிழந்தனர், பலர் அவப்பெயர் பெற்றனர், சிலர் சிறையிடப்பட்டனர். உண்மையில் சோவியத்தின் கைக்கூலியாக இருந்தவர்களில் வெகு சிலர் பிடிபட்டனர்.

அந்த காலத்தையும், அதன் அநியாய முறைகளையும் இன்றளவும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகக் கருதப்படுபவர் அன்று அமெரிக்க செனட்டில் (மேல்சபை) அங்கம் வகித்த ஜோசஃப் மெக்கார்த்தி என்பவர். இவர் ‘அமெரிக்க விரோதச் செயல்களை' பற்றிய கமிஷன் ஒன்றின் தலைவராகச் செயல்பட்டக் குற்றம் சாட்டப்பட்டவர்களை செனட்டிற்கு இழுத்து வந்து மிக மோசமான விசாரணை முறைகளுக்கு உட்படுத்தியவர். இப்பொழுதும், மெக்கார்த்தியிசம் என்றால், ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது, தேசப்பற்றை ஆபத்தான முறைகளில் பயன்படுத்துவது, மக்களிடையே பீதி உண்டாக்குவது போன்ற செயல்களுக்கான ஒற்றை வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்களிடையே பயத்தை உண்டு பண்ணி, அதன் பயனாக விளையும் ஓட்டுக்களின் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவது என்பதும் ஜனநாயகத்தின் ஒரு அம்சமே என்பதால், ஒரு விதத்தில் மெக்கார்த்தியும் ஜனநாயகத்தின் விளைவுதான். ஆனால், ஜனநாயகம் உருவாக்கிய இந்த வில்லனுக்கு மாற்று மருந்தாக, ஜனநாயகத்தின் இன்னொரு கூறான பேச்சுச் சுதந்திரம் ஒரு ஹீரோவையும் உருவாக்கியது. அவரது பெயர் எட்வர்ட் மர்ரோ - சிபிஎஸ் தொலைக்காட்சியின் பிரதான செய்தியாளர். தனது செய்தி அறிக்கைகளை முடிக்கும் போது ஒவ்வொரு முறையும் அவர் சொல்லும் சொற்றொடர் - Good night and, Good luck.

இந்தச் சொற்றொடரைத் தலைப்பாகக் கொண்டு, அந்தக் காலத்தைப் பற்றியதாய் வெளிவந்திருக்கும் திரைப்படத்தை ஜார்ஜ் க்லூனி இயக்கி இருக்கிறார். இயக்கம் உட்பட பல ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்ற இப்படம், மெக்கார்த்தியின் முறைகளை எதிர்த்து மர்ரோவும் அவரது செய்திக் குழுவும் நிகழ்த்திய போராட்டத்தை விவரிக்கிறது. ஒன்றரை மணிநேரமே நீளம் கொண்ட இப்படம், மெக்கார்த்தி, மர்ரோ, சிபிஎஸ் என்ற கட்டுக்கோப்பான வட்டத்துக்குள் சுழன்று செயல்படுகிறது.

படத்தின் துவக்கத்தில், அமெரிக்க விமானப்படை ஒரு வீரனை, அவனது தந்தை ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி (ஆதாரங்களைக் காட்டாமல்), படையிலிருந்து விலக்கி வைக்கிறது. சின்னஞ்சிறிய பெட்டிச் செய்தியாக மறைய இருந்த இந்த செய்கையின் அநியாயத்தை தொலைக்காட்சியில் வெளிக்கொண்டு வருவதன் வாயிலாக, மெக்கார்த்தியின் கடைக்கண் பார்வைக்கு மர்ரோவும் அவரது செய்திக் குழுவும் இலக்காகின்றனர். இந்நிலையில், நாடெங்கும் பரவி வரும் கம்யூனிச அச்ச அலை தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளும் நுழைகிறது. இரண்டாம் உலகப் போரின் மூலம் மிகவும் பிரபலமடைந்த மர்ரோவை நேரடியாக எதிர்க்கப் பலர் தயங்கினாலும், மெக்கார்த்தியை எதிர்ப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தப்படுகிறார். அத்தகைய பேச்சுக்களை மர்ரோ உதாசீனம் செய்வதோடு மட்டும் நிற்காமல், ஒரு படி மேலே போய், தனது அணுகுமுறையை இன்னமும் கடுமைப்படுத்தி மெக்கார்த்தியை நேரடியாக எதிர்க்கிறார். மெக்கார்த்தியின் சொந்த வார்த்தைகளை மட்டுமே கொண்டு மெக்கார்த்தியின் அநீதியான முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் செய்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிடுகிறார். சில நாட்களுக்குப் பின் தனது நிகழ்ச்சியிலேயே மெக்கார்த்திக்கும் பதில் உரை கொடுக்க அனுமதிக்கிறார். எதிர்பார்த்தது போலவே, மெக்கார்த்தி, ஆதாரமின்றி, மர்ரோவையும் கம்யூனிச ஆதரவாளர் என்று குற்றம் சாட்டுகிறார். மர்ரோ அக்குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு மறுக்கிறார். இவை நடந்த சில நாட்களில், மெக்கார்த்தியையே செனட் விசாரணைக்குள்ளாக்குகிறது, அவரது முறைகளுக்காகக் கண்டிக்கப்படுகிறார், அவரது ஆட்டம் அடங்குகிறது. மெக்கார்த்தியின் முடிவு, மர்ரோவினால் மட்டுமல்ல என்றாலும், அரசியல் ரீதியாக மெக்கார்த்திக்கு எதிராகச் செயல்பட செனட் உறுப்பினர்களுக்கு தைரியம் வழங்கியதில் மர்ரோவின் செய்தி அறிக்கைகளின் பங்கு கணிசமானது என்ற அளவில் படம் முடிகிறது.

படத்தில் அருமையான விஷயங்கள் மூன்று:

1. வசனம்: அற்புதமான ஆங்கிலத்தில் மிகத்தெளிவாக பேசப்படும் வசனங்கள். கருத்துக்களை சுருக்கமாகவும், குழப்பத்திற்கு இடமளிக்காமலும், மிகச்சரியான வார்த்தைகளில் முன்வைக்கும் இவ்வசனங்களுக்காக மட்டுமே இப்படத்தைப் பார்க்கலாம். உதாரணம்:

Murrow: We must not confuse dissent from disloyalty. We must remember always, that accusation is not proof, and that conviction depends upon evidence and due process of law. We will not walk in fear, one of another, we will not be driven by fear into an age of unreason. If we dig deep into our history and our doctrine, we will remember we are not descendant from fearful men. Not from men who dared to write, to speak, to associate, and to defend causes that were for the moment unpopular. This is no time for men who oppose Sen. McCarthy's methods to keep silent or for those who approve.

2. டேவிட் ஸ்ட்ரேதர்ன் நடிப்பு: மர்ரோவாக நடித்த இவரது முகபாவங்களும் உடல் மொழியும் படத்தை நிறுத்துகின்றன. ஜார்ஜ் க்லூனி தயாரித்து இயக்கிய இப்படத்தில் சுலபமாக அவரே மர்ரோவாக நடித்திருக்கலாம். ஆனால், ஒரு இரண்டாம் ஹீரோ ரோலை ஏற்றுக் கொண்டு டேவிட்டை மர்ரோவாக்கியது புத்திசாலித்தனமான முடிவு. க்லூனி இவ்வளவு சீரியஸான ரோலை செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.

3. ஒளிப்பதிவு: கறுப்பு-வெள்ளையில் உருவாக்கப்பட்ட இப்படம், பெரும்பாலும் மிக நெருங்கிய கோணங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வேறு எங்கும் கவனம் சிதறாமல் பேசுபவர்களின் வார்த்தைகளை உள்வாங்க முடிகிறது. அடிப்படையில் படம் பேசுபவர்களையும் அவர்களது நம்பகத்தன்மையைப் பற்றியதும் என்பதால், இந்த அணுகுமுறை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

படத்தில் குறை என்று சொல்ல வேண்டுமென்றால், ஒன்று மட்டும் சொல்லலாம். மெக்கார்த்தி இவ்வாறு இயங்கிய காலகட்டத்தில் அமெரிக்கப் பொதுமக்கள் மற்றும் சமுதாயம் எப்படி எதிர்வினையாற்றியது என்பது பற்றி படம் மிக மேலோட்டமாகவே சொல்கிறது. மெக்கார்த்தி - மர்ரோ போராட்டத்திற்கு வெளியானவை அவை என்று விட்டிருக்கலாம் என்றாலும் படத்திற்கு அவை ஒரு முழுமையைக் கொடுத்திருக்குமோ என்று தோன்றுகிறது.

உபரியாக சில அவதானங்கள்:

1. படத்தில் எல்லாரும் சதா சர்வ காலம் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள் - நிஜமாகவே அந்தக் காலத்தில் அலுவலகங்களுக்கு உள்ளே அவ்வளவு புகைத்தார்களா, இல்லை கறுப்பு-வெள்ளைப் படத்தில் அழகாக வரும் என்று இவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை. Fog of war போல, படம் முழுக்க ஒரு Fog of truth என்பதற்காகவும் பயன்பட்டிருக்கலாம்.

2. அலுவலகங்களில் பெண்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும் தெரிகிறது. ‘ஷர்லி, காப்பி கொண்டு வா', ‘மில்லி, பேப்பர் வாங்கி வா' - இவ்வளவுதான்.

படம் முழுவதும் பேசப்படாத பொருள் ஒன்றுதான் இப்படத்தை சுவையான படம் என்பதிலிருந்து, முக்கியமான படம் என்பதாக உயர்த்துகிறது. அது என்னவென்றால், இப்படத்தில் சொல்லப்பட்டிருப்பவை இந்தக் காலத்திற்கு எத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது என்பது. உண்மையில் படத்தில் வரும் சில வசனங்களை மிகச் சரியாக இன்றைய நாளில் நடப்பவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

அவ்வளவு ஏன், இந்த விமரிசனத்தின் முதல் சில வாக்கியங்களை இப்படியும் மாற்றி எழுதலாம்:

9/11 நிகழ்ந்த உடன், அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே நீண்டதொரு போர் (War against terror) துவங்கியது. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போர் மிகவும் தீவிரமாக இருந்த சமயத்தில், தீவிரவாதம் அமெரிக்க நாட்டிற்குப் பெரியதொரு எதிரியாகக் கருதப்பட்டது. அமெரிக்காவில் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டவர்கள்/சந்தேகிக்கப்பட்டவர்கள் பல ஜனநாயகத்திற்கு விரோதமான முறைகளில் வேட்டையாடப்பட்டனர். ஒருவர் தீவிரவாதி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீதே சுமத்தப்பட்டது. வெளிப்படுத்தப்படாத ‘ஆதாரங்கள்', கேள்வி கேட்கப்படாத ‘சாட்சிகள்', பாதுகாக்கப்பட்ட ‘ரகசிய ஆவணங்கள்' - இவற்றின் பேரில் ஏராளமானோரது வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர், பலர் சிறையிடப்பட்டனர், சிலர் உயிரிழந்தனர். உண்மையில் அமெரிக்காவிற்கு எதிராகச் செயல்பட முனைந்தவர்களில் வெகு சிலர் பிடிபட்டனர்.

More things change, more they remain the same.

ஜோசஃப் மெக்கார்த்தி பற்றி மேலதிகத் தகவல்களுக்கு.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

6 Comments:

Blogger Narain Rajagopalan said...

நிறைவாக இருக்கிறது. இங்கே கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். மற்றபடி உங்கள் டிவிடி நூலகத்தில் Magnolia இருக்கிறதா என்று பாருங்கள். தவறவிடாதீர்கள். இதைப் பற்றி பதிவெழுதும் எண்ணமிருக்கிறது. மிக முக்கியமான படம்.

April 03, 2006 6:18 AM  
Blogger Srikanth Meenakshi said...

நாராயண், Magnolia பார்த்திருக்கிறேன். வித்தியாசமான, அருமையான படம். அதன் Deus ex Machina-த்தனமான இறுதிக் காட்சிகள் மறக்க முடியாதவை.

கண்டிப்பாக அதைப்பற்றி எழுதுங்கள்.

April 03, 2006 8:42 AM  
Blogger வஜ்ரா said...

Excellent review. I saw the movie and almost felt what you say.

//
இப்படத்தில் சொல்லப்பட்டிருப்பவை இந்தக் காலத்திற்கு எத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது என்பது. உண்மையில் படத்தில் வரும் சில வசனங்களை மிகச் சரியாக இன்றைய நாளில் நடப்பவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
//

ஏன் என்றால், அன்றய எதிரி கம்மியூனிசத்திற்கும் இன்றய எதிரி இஸ்லாமியத் தீவிரவாதத்திர்க்கும் வேறுபாடுகளைவிட ஒற்றுமைகள் நிறையவே உள்ளன.

அதனால் தான் "More things change, more they remain the same."

நன்றி.
ஷங்கர்.

April 03, 2006 11:02 AM  
Blogger முகமூடி said...

// க்லூனி இவ்வளவு சீரியஸான ரோலை செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை //
தாராளமாக செய்திருக்க முடியும்.. ஆனால் என்னதான் கதாபாத்திரத்தோடு ஒன்றினாலும் சில இடங்களில் கமல் "வெளி"ப்பட்டுவிடுவது போலவே க்ளூனியும் தனிப்பட்ட சில மேனரிஸங்களால் "வெளி"ப்பட்டுவிடுவார்.. (இதை உணர்ந்தோ இல்லையோ) க்ளூனியை விட டேவிட் ஸ்ட்ரேதர்ன் தேர்வு படத்தோடு ரசிகர்களை ஒன்ற வைக்க எடுக்கப்பட்ட நல்ல முடிவு..
*
// மெக்கார்த்தி இவ்வாறு இயங்கிய காலகட்டத்தில் அமெரிக்கப் பொதுமக்கள் மற்றும் சமுதாயம் எப்படி எதிர்வினையாற்றியது என்பது பற்றி படம் மிக மேலோட்டமாகவே சொல்கிறது. //
நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. காப்பி ரூம் பணிப்பெண்ணையும் செனட்டுக்கு இழுத்ததன் மூலம் பொதுமக்கள் என்றாலும் சரி, குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப முடியாது என்ற தோற்றத்தை உருவாக்கியதன் மூலமும், FBI பொதுமக்கள் இடையிலும் ஊடுருவியிருக்கலாம் என்ற வதந்தியின் மூலமும் சமுதாயம் பெரிய அளவில் இதை பற்றி வெளிப்படையாக பேச/எதிர்வினையாற்றவில்லை என்றே படம் பார்த்தபோது எனக்கு தோன்றியது
*
// அந்தக் காலத்தில் அலுவலகங்களுக்கு உள்ளே அவ்வளவு புகைத்தார்களா // புகைத்திருக்கலாம்... மிக சமீபம் வரை நான்-ஸ்மோக்கிங் செக்சன் தனியாக இருந்தாலும் ரெஸ்டாரெண்டுகள் உள்ளே புகை மண்டலங்களாகத்தானே இருந்தது.. மேலும் சில கறுப்பு-வெள்ளை படங்களும் இதை உறுதி செய்கின்றன.
*
மற்றபடி படம் பார்த்து 10 நாட்கள் ஆகிறது. பார்ததவுடன் தமிழ் வலைப்பதிவுலகமும் Good Night and Good Luckம் (உம்மை தொகை) என்று ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்து பின்பு pendingல் இருந்த படங்களை பார்க்க ஆரம்பித்து அந்த எண்ணமே காணாமல் போய்விட்டது... சரி வந்தது வந்தோம், ஒரு ஸ்டாண்டர்டு பின்னூட்டம் போட்டுக்கறேன் :: "நான் எழுதலாம் என்று இருந்தேன். நீர் முந்திவிட்டீர்" :))))

April 03, 2006 1:05 PM  
Blogger Srikanth Meenakshi said...

//பார்ததவுடன் தமிழ் வலைப்பதிவுலகமும் Good Night and Good Luckம் (உம்மை தொகை) என்று ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்து பின்பு pendingல் இருந்த படங்களை பார்க்க ஆரம்பித்து அந்த எண்ணமே காணாமல் போய்விட்டது... சரி வந்தது வந்தோம், ஒரு ஸ்டாண்டர்டு பின்னூட்டம் போட்டுக்கறேன் :: "நான் எழுதலாம் என்று இருந்தேன். நீர் முந்திவிட்டீர்" :)))//

excuse me...உம்மைத்தொகைப் பதிவுகள், ் பிகேஎஸ் மற்றும் என்னுடைய 50-50 காப்பிரைட். 'நான் எழுதலாம் என்று..' பாஸ்டன் பாலாஜியின் காப்பிரைட். ஏதோ ஒரு ஸ்மைலி போட்டீர்கள் என்பதற்காக மன்னித்து விடுகிறேன்...

April 03, 2006 1:20 PM  
Blogger Boston Bala said...

சென்னையில் இருந்து பாஸ்டன் வரும் பயணத்தில் இரண்டு நல்ல படங்கள் பார்க்க கிடைத்தது.

Derailed & கு.நை.கு.ல. ரொம்ப நாள் கழித்து கதை தெரியாமல் விமர்சனம் எல்லாம் படித்து தீர்க்காமல் பார்த்த படங்கள். (முதல் படத்தை கூட உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்து பக்கத்துசீட்காரி, 'இது கூட கண்டுபிடிக்கவில்லை யென்றால் நீயெல்லாம் எதற்கு லாயக்கு???' என்று கேள்வி கேட்குமளவு அதிர்ச்சி அடைந்தேன் ;-))

துணையெழுத்துக்களின் உதவியுடன் படம் பார்க்கும் எனக்கு, இரண்டு படத்திலும் காப்ஷன் வராதபோதும் துல்லியமாகப் புரிந்தது \:D/

தமிழ் வலைப்பதிவர்களும் மெக்கார்த்திகளும் என்று பதிவு எழுதவிருந்தேன் ;-)) அப்புறம் டேஜாவூ வந்து தொலைக்க 'தம்பி' & ரங் தே பஸந்தி என்று மசாலாவில் மூழ்கிவிட்டேன்.

But the line between investigating and persecuting is a very fine one என்று சொல்வது போல் உங்களுடைய பதிவில் சுய பரிசோதனைக்கும் குற்றச்சாட்டுக்கும் இடையே உள்ள நுண்ணிய வித்தியாசங்கள் இயல்பாக விழுந்திருக்கிறது.

நான் எழுத நினைத்ததை விட அருமையாக எளிமையாக உள்ள திரைப்பார்வைக்கு நன்றி :-)

April 03, 2006 2:16 PM  

Post a Comment

<< Home