<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, January 03, 2006

நெரிசல் மரணங்கள்: ஞாநியின் கட்டுரை

வெள்ள நிவாரண விநியோகத்தின் போது நிகழ்ந்த நெரிசல் மரணங்கள் குறித்து பத்திரிக்கையாளர் ஞாநியின் கட்டுரையை ஜூனியர் விகடனிலிருந்து மறுபதிக்கிறேன். (கட்டணப் படிப்பிடமான விகடன் வலைத்தளத்தின் பதிப்பாளர்கள் மன்னிக்கவும்)

---------------------------------------------------

நிவாரண சோகம்...மரணமல்ல படுகொலைகள்!

ஞாநி


வியாசர்பாடி, எம். ஜி.ஆர் நகர் என்று தொடரும் நிவாரண நெரிசல் படுகொலைகளுக்கு யார் காரணம்?

விபத்துகள் என்று அறிவிக்கப்பட்டாலும், உண்மை யில் இவை, படுகொலைகள்தான். அரசாங்க நிர்வாக எந்திரத்தின் தவறுகள் முதல், மக்களின் சுயமரியாதையற்ற அடிமை புத்தி வரை பல விஷயங்கள் இந்த மரணங்களுக்குக் காரணமென்றாலும், அடிப்படைக் காரணம் கழகங்களின் அரசியல்தான்!

இலவச வேட்டி, இலவச சேலை, இலவச அரிசி, இலவசப் பணம் என்ற அணுகுமுறை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க-வும் தி.மு.கவும் மாறிமாறி ஆட்சி நடத்தும் சமயங்களில் எல்லாம் விரிவாக்கப்பட்டு, இன்று முக்கியமான அரசியல் ஓட்டு வசூல் உத்திகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது. மக்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் மனோபாவத்தின் வெளிப்பாடே இது!

வெள்ள நிவாரணம் யாருக்குத் தரப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகள் நாளுக்குநாள் தளர்த்தப்பட்டு, வெள்ளம் பாதித்த பகுதி முழுவதும் நிவாரணத்துக்குரிய பகுதியாகப் பிரகடனம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் எல்லாக் குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணம் பெறத் தகுதியுடையவர்களாகி விடுகின்றனர்.

குடும்ப அட்டைகள் எல்லாம் உண்மை யான தகவல்களுடன் இருப்பதில்லை. லட்சலட்சமாக சம்பாதித்து வருமான வரி கட்டிக் கொண்டிருப்பவர்கூட, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஒரு குடும்ப அட்டையை வாங்கி வைத்திருப்பதுதான் இங்கே வழக்க மாக இருக்கிறது. இப்படிப்பட்ட அட்டைகள் புழக்கத் தில் இருப்பதால், மாதம் சுமார் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் பதவியில், தலைமைச் செயலகத்தில் செக்ஷன் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட இந்த நிவாரண உதவியைப் பெற்றிருக்கிறார்கள். பெசன்ட் நகரில் சொந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஓர் அதிகாரியிடம் அந்தப் பகுதியில் வசிக்கும் வசதியான இன்னொருவர், ‘உங்களுக்கும் நிவாரணம் உண்டே? நீங்கள் இன்னும் போய் பெற்றுக் கொள்ளவில்லையா? என்று விசாரித்ததை வேதனையுடன் என்னிடம் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நகரில் இறந்தவர்கள், காயம டைந்தவர்களில் சிலர் நிச்சயம் ஏழைகள் அல்ல. பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில், அவர்களின் தோற்றமே இதைக் காட்டும். பேட்டியளித்தவரில் ஒருவர் மளிகைக்கடை உரிமையாளராக இருந்து, சினிமா தயாரிப்பாளராக மாறி, அதில் பணத்தை இழந்துவிட்டு, இப்போது இரும்புக்கடையில் வேலை செய்பவர். அவருடைய சகோதரர் காய்கறிக்கடை நடத்துபவர். இந்த நிவாரணத்தை வாங்கப் போக வேண்டாம். தேவையானால், நானே உனக்கு அந்த 2 ஆயிரம் ரூபாயைத் தருகிறேன் என்று அண்ணனிடம் அவர் சொல்லியும், இரும்புக் கடைக்காரரின் மனைவி, நிவாரணம் வாங்கச் சென்று நெரிசலில் சிக்கி இறந்திருக்கிறார் என்பது இந்த சோகத்துக்கு நடுவில் தெரியும் கசப்பான உண்மை.

நமது நடுத்தர வர்க்கமும், வசதியுடையவர்களும் எந்த தார்மீக நெறியும் இல்லாமல் சீரழிந்து... பேராசை, பணத்தாசையால் உந்தப்பட்டு எங்கே.. எது... இலவசமாகக் கிடைத்தாலும் அதைத் தாங்களும் அடையவேண்டும் என்று நினக்கும் அவலம், இங்கும் சில இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அசல் ஏழைகளும் நிஜமாகவே பாதிக்கப்பட்ட பஞ்சை பராரிகளும் இதனால் உதவிபெற முடியாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

மெய்யான ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய இந்த உதவியை, இப்படி போலி ஏழைகளுக்கும் அரசு அறிவிப்பதன் மர்மம் என்ன? முதலாவது... பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்தால்தான் மொத்த நிவாரணத் தொகையை அதிகரிக்க முடியும். அடுத்து, அந்தத் தொகையை அந்தப் பகுதியில் இருக்கும் தங்கள் கட்சிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ள வழி வகுப்பது. அரசுப் பணம் கட்சிக்காரர்களுக்கு கைமாற்றப்படுவதற்கு வசதியான உத்தியாக அரசியல் கட்சிகள் இதை நீண்டகாலமாக செய்து வருகின்றன.

இப்போதைய அரசு இதைப் பல மடங்கு விஸ்தரித்துவிட்டது. அத னால்தான் நிவாரண விநியோகத்தை சர்வ கட்சிக் குழுவைக் கொண்டு செய்யும்படி தி.மு.க. கூட்டணி கோரிக்கை எழுப்புகிறது. தான் ஆட்சி யில் இருந்தபோது, இப்படி அது செய்ததில்லை. ஆனால், இப்போது பெரும் தொகைகள் அ.தி.மு.கவின் முழுக் கட்டுப்பாட்டில் விநியோக மாவதை அதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லாக் கட்சிகளுக்கும் இதில் பங்கு வேண்டும் என்பதுதான் பின்னணியில் உள்ள அசல் கோரிக்கை.

நெரிசல் ஏற்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று டோக்கன் பெற்றவர்கள் முதலில் பொருட்களைப் பெறவும் டோக்கன் வாங்காதவர்கள், முதலில் டோக்கன் வாங்கவும் போட்டிப் போட்டனர் என்பது வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், டோக்கன்களை எல்லாம் குறிப்பிட்ட கட்சியினரே சுருட்டி விட்டதாக எண்ணிய மாற்றுக் கட்சியினர், அடுத்த முறையாவது முந்திக்கொண்டு தாங்கள் டோக்கன்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக முண்டியடிக்கிறார்கள் என்பது களத்திலிருந்து வரும் நிரூபிக்க முடியாத தகவல்.
நிவாரண உதவி பெற முண்டியடிக்கும் கூட்டம்...

நிவாரணம் கிடைக்காமல் போய் விடும் என்ற பதற்றத்தை மக்களிடம் சில விஷமிகள் பரப்பி, மக்களைக் குவியச் செய்ததில்தான் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கின்றன என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கிறது. ஒரே வாரத்தில், முதல் முறை சுமார் ஏழாயிரம் குடும்பங்களுக்கு டோக்கன் தரப்பட்டபோது எந்த நெரிசலும் ஏற்படாமல், அடுத்த சில தினங்களில் அடுத்து இன்னொரு ஏழாயிரம் பேருக்குத் தரும்போது மட்டும் நெரிசல் ஏற்படுகிறது என்றால் அதில் நிச்சயம் வதந்தியும் அரசியலும் கலந்திருக்கிறது.

இந்த முறை இந்த வெள்ள நிவாரண உதவி விநியோகத்தைப் பெரும் அரசியலாக ஆக்குவதில் தி.மு.க&வும் அ.தி.மு.கவும் முனைந்திருப்பதற்கு முக்கிய காரணம், சில மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்.

உதவி செய்து நல்லப் பெயரையும் ஓட்டையும் சம்பாதிக்கவும், தன் கட்சியினர் கையில் கணிசமாக அரசுப் பணம் போய்ச் சேரவும் அ.தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது என்பது தி.மு.கவின் குற்றச்சாட்டு.

அசம்பாவிதங்கள் ஏற்பட்டு ஆட்சிக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக வதந்திகளையும் மீடியாவையும் பயன் படுத்துகிறது தி.மு.க. என்பது அ.தி.மு.க&வின் குற்றச்சாட்டு.

இன்றைக்கு நாட்டு நடப்புகளைப் பொறுத்தவரை, உண்மை என்பது எப்படி சன் டி.வி&க்கும் ஜெயா டி.வி&க்கும் நடுவில் இருக்கும் சராசரியாக இருக்கிறதோ... அதேபோல நிவாரண விஷயத்திலும் இரு தரப்பு கூற்றுக்கும் நடுவில்தான் உண்மை இருக்கிறது. அதை வைத்துப் பார்த்தால், இரு கழகங்களுமே முதன்மையான குற்றவாளிகள்!

நியாயப்படி ஒவ்வொரு பகுதியிலும் அரசு எந்திரம் நினைத்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பு போல, வீடு வீடாகச் சென்று நேரில் பார்த்து, பாதித்த வீடு எது என்று கண்டறிந்து, அங்கேயே நிவாரணத்தை விநியோகம் செய்துவிட்டு வருவது ஒன்றும் கடினமான காரியமல்ல. ஆனால், மக்களைப் பிச்சைக்காரர்களாக& சுயமரியாதையற்றவர்களாக ஆக்கும் டோக்கன், க்யூ வரிசை முறை, ஊழலுக்கு வசதியானது.

வெள்ள நிவாரணத் திட்டத்தின் மூலம் மக்களைக் கேவலப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும்... வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்பட்டதற்கே இரு கழகங்களும்தான் பொறுப்பு.

சென்னையில் நடைபெற்றிருக்கும் ஏரி ஆக்ரமிப்புகள் முதல், தமிழகமெங்கும் ஆற்று வெள்ளத்தைத் தீவிரப் படுத்திய மணற் கொள்ளைப் பிரச்னை வரை யார் காரணம்? கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு பல்கலைக்கழகம் கட்டடம் கட்டியதும், போரூர் ஏரியை ஆக்ரமித்து ஒரு கல்வி நிறுவனம் உருவானதும் கழகங்களின் ஆட்சிக் காலத்தில்தான். தமிழகம் முழுவதும் எல்லா ஏரி ஆக்ரமிப்புகளும், மணற்கொள்ளைகளும் அரசியல் பலம் படைத்தவர்களால் நடத்தப்பட்டதே! இக்கட்சிகளின் வட்டாரப் பிரமுகர்கள் பலர் ஆங்காங்கே இவற்றில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் செய்திகள் கடந்த இருபதாண்டு காலத்தில் புலனாய்வு இதழ்கள் முழுக்க நிரம்பியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றத்தின் தயவால் இப்போது அம்பலமாகி வரும் ஏரி, குளம், ஆற்றுப்படுகை ஆக்ரமிப்புகள், கொள்ளைகள் நடந்து வந்தபோது அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் பெயர்கள் தொகுக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் சுட்டிக்காட்டும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

கழிவுப் பாதைகளாக அரசாங்கத்தால் மாற்றப் பட்ட கூவமும், அடையாறும் இயற்கையின் பெரு வெள்ளத்தால் இப்போது சுத்தப்படுத்தப் பட்டிருக்கின்றன. சமூகத்தையே ஊழல், மோசடிகள், பொய், புனைச்சுருட்டுகளால் நாறடித்திருக்கும் கழகங்களை அடித்துச் சுத்தப்படுத்த மக்கள் பெருவெள்ளம் எப்போது பொங்கும்?

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

0 Comments:

Post a Comment

<< Home